திக்கெட்டும் தீமிதி
திக்கெட்டும் தீமிதி

திக்கெட்டும் தீமிதி

கடந்த சில வாரங்களில், சிங்கப்பூர், மலேசிய நகரங்களில் பாரம்பரியமாக நடந்தேறி வரும் முக்கியமான விழாக்களில் ஒன்றான தீமிதி (firewalking), பக்தர்களின் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் பக்தியுடனும் வெகு விமரிசையாக சிங்கப்பூரில் நடந்தது. சிராங்கூன் ரோட்டில் இருக்கும் சீனிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து, சவுத்பிரிட்ஜ் ரோட்டிலிருக்கும் மாரியம்மன் கோவில் வரை 4 கிமீ நீளத்திற்கு பால்குடம், மாவிளக்கு எடுத்து மேள தாளத்துடன் ஊர்வலமாகப் போய் தீமிதித் திருவிழா நடந்தது. சிங்கப்பூர், மலேசியாவில் வருடந்தோறும் நடக்கும் நிகழ்வென்றாலும், இந்த வருடச் சிறப்பு என்னவென்றால் தீநுண்மித் தொற்றால் இரண்டு ஆண்டுகளாகக் கட்டுப்பாடுகளுடன் வழமையான பழக்கமான செயல்பாடுகளின்றி நடைபெற்ற தீமிதி இம்முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, எப்போதும்போல நடத்தப்பட்டதுதான். பக்தகோடிகளின் பேரார்வத்துடனும் உற்சாகத்துடனும் இம்முறை களைகட்டியது. 

மலாயா, இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட்ட தென்கிழக்காசிய நாடுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த காலகட்டத்திற்கு முன்பிருந்தே தீமிதி, உள்ளூர்க் கலாச்சார விழாவாக இருந்திருக்கிறது. சிங்கப்பூரில் 1893-இல் அன்றைய பிரிட்டிஷ் அரசின் நீதிமன்றங்களில் தீமிதி பற்றிய வழக்கொன்று நடைபெற்றது சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியத்தின் காலாண்டிதழான ‘பிப்லியோஆசியா’வில் (Biblioasia, Oct-Dec 2022) வெளியான கட்டுரையின் மூலம் தெரிய வருகிறது. 

தீமிதி கடவுளின் மீதான பக்தியைத் தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளவும், வேண்டுதலை நிறைவேற்றுவதற்கும், வேண்டிக்கொள்வதற்கும், கடவுளின் மீதான தம் நம்பிக்கையை, அன்பை கடப்படுத்துவதற்காகவும் பெரும்பாலும் நிறைவேற்றப்படுகிறது. இதைக் கண்ணுறும் பார்வையாளர்கள் எதிர்காலத் தீமிதிப் பங்காளர்களாக மாறுகிறார்கள்.  தீமிதி என்கிற இந்த வழக்கம், கண்டங்கள், நாடுகள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி பல்வேறு நாடுகளில் பூர்வகுடிகளால் பின்பற்றப்பட்டு வந்த வழக்கம் என்பதை அறிய முடிகிறது. பழங்குடிகள் முதல் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் தலைமைத்துவம் வரையில் பரவியிருக்கும் தீமிதியைப் பற்றி இதற்காக பல கண்டங்களில் உள்ள பல்வேறு இனமக்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை ஆராய்ந்த வகைகளில் மிகவும் ஆச்சரியமான ஒற்றுமைகள், தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.

தீமிதி என்பது அடிப்படையில் இருவகையாக இருக்கிறது. தழல் பூத்திருக்கும் மரத்துண்டுகள் மீது நடப்பது அல்லது கூழாங்கற்கள் மீது நடப்பது. பயன்படுத்தப்படும் மரம், அணியும் மலர்கள், உடுத்தும் இலைகள், தீக்குழியைத் (பூக்குழி என்றும் அழைக்கிறார்கள்) தாண்டி வரும்போது பக்தர்களுக்குச் செய்யும் பணிவிடைகள் என ஊருக்கு ஊர், கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் மாறுபடுகிறது. செந்தழலாக இருக்கும் கங்குகளைக் குவித்து வைத்து அதில் ஏறி இறங்குவது தாய்லாந்து நாட்டுத் தீமிதியின் சிறப்பு. 

சிங்கப்பூர், மலேசியா, சுமத்திரா, பாலி (இந்தோனீசியா), தாய்லாந்து, கம்போடியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, ஃபிஜி, தாஹிதி உட்பட்ட பாலினேசியத் தீவுகள், பப்புவா ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் தீமிதி நடைபெறுகிறது. இதுபோக பல்கேரியா, கிரீஸ், ஸ்பெயின், அல்ஜீரியா, ஆப்ரிக்க நாடுகளிலும், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளிடமும், மெக்ஸிகோ பிரேசிலிலும் தீமிதி நடைபெறுகிறது. 

ஸ்பெயின் நாட்டில் சான் பெட்ரோ மான்ரிக் (San Pedro Manrique) என்கிற சிறு கிராமத்தில் வருடத்திற்கொருமுறை ஜூன் 23ம் தேதி இந்த விழா நடைபெறும். இதற்கென 3000 பேர் பங்கேற்கும் ஒரு பெரிய அரங்கம் கட்டப்பட்டிருக்கிறது. 600 பேர் வசிக்கும் கிராமத்தில் 3000 பேர் பார்வையளர்களுக்கு வசதி இருப்பது, இது ஆண்டாண்டு காலமாக வெளியூர்களில் இருந்து வந்து பார்க்கும் விழாவாக இருந்து வந்திருக்கிறது என்பது புலப்படும். ‘டவுன்ஹால்’ என்கிற பகுதியிலிருந்து பார்வையாளர்கள் உற்சாக ஆரவாரங்களுடன் மேளங்கள் முழங்க தீமிதிப்பவர்கள் உள்ளூர்க் கலாச்சாரப்படி உடையணிந்து மலர்கள், இலைகள் சூடி, வண்ண உடையலங்காரத்துடன் ஊர்வலமாக வருவார்கள். ஓக் மரத்துண்டுகளை வெட்டிப்போட்டு 4 மணி நேரமாவது எரியூட்டிக் கங்குகளாக தணன்று கொண்டிருக்கும் தீக்குழியில் இறங்கி நடக்க, தீக்குழியைச் சுற்றி நடனமாடியபடியே பலமுறை சுற்றியபின் தனது நெருக்கமான ஒருவரைத் தூக்கி முதுகில் சுமந்தவாறு குழியில் நடந்து கடந்து மறுபக்கம் சேருவார்கள். காத்திருக்கும் உறவினர்கள் காலில் நீருற்றி, கட்டியணைத்துக் கொள்வார்கள். புனித ஜான் என்பாரை நினைவுகூறும் பொருட்டு புனித ஜான் நினைவுதினத்தில் இது நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் பழங்குடியினரின் வழக்கமாக இருந்து வந்த தீமிதி கிறித்துவ மிஷனரிகள் வந்த பிறகு புனிதர்களின் நினைவால் நடத்தப்படும் சடங்காக மாறியது.

ஃபிஜித்தீவுகளில் பெக்கா (Beqa) தீவின் சவாவு (Sawavu) பழங்குடி இனத்தால் விலவிலரேவோ (vilavilarevo) என்றழைக்கப்படும் தீமிதி பாலினேசியத்தீவுகள் பலவற்றில் பிரசித்தம். சாவாவு பழங்குடியினரின் இந்த வழக்கம், தாஹிதி, வனுவாட்டு, மவோரி (நியுசிலாந்து), பப்புவா என பல பழங்குடியினரிடையேயும் வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அதற்கான சடங்குகள், செயல்பாடுகள், பின்னணிக் கதைகள் என அனைத்திலும் ஒற்றுமை உண்டு.  இந்தத் தீமிதிக்கு ஒரு கதையும் உண்டு:

திரித்ரி என்பவர் ஒரு பெரும் கதை சொல்லி. அவர் கதையைக் கேட்பவர் மறுமுறை கதை கேட்க வரும்போது திரித்ரிக்கு என்ன அன்பளிப்பு கொண்டு வருவார் என்று சொல்லி விடைபெற வேண்டும். துய் கலிட்டா என்கிற ஒரு கிராமத்தலைவன் திரித்ரியை மறுமுறை பார்க்கும்போது நமோலிவாய் நதியில் ஈல் மீன் வசிக்கும் பொந்து தனக்குத் தெரியும் என்றும் அதில் இருந்து ஈல் மீனைக் கொண்டு வருகிறேன் என்றும் சொல்லிச் சென்றான். அதன்படி நதியில் ஈல் மீனை பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெளியில் இழுத்துப் பார்த்தால் அது ஒரு உயரம் குறைந்த மனிதனாக இருந்தது. 

தன் பெயர் துய் நமோலிவாய் என்றும், தன்னை ஆற்றிலேயே விட்டுவிடும்படியும் துய்கலிட்டாவிடம் சொல்கிறான் அந்த குள்ள மனிதன். நீ கேட்பதையெல்லாம் என்னால் தர முடியும் என்று ஆசை காட்டுகிறான் துய் நமோலிவாய். நீ என்ன தரமுடியும் என்று கேட்டதற்கு, போர்களில் என்றென்றும் வெற்றியைப் பெறும் வரம் தருகிறேன் என்றதற்கு, நான் ஏற்கனவே போரிட்டு வென்றுவிட்டேன், அது தேவையில்லை என்றான். மிகப்பெரிய பலசாலியாக்குகிறேன் என்றதற்கு, ஏற்கனவே என்னை வெல்ல அக்கம் பக்கத்து தேசங்களில் கூட யாரும் இல்லை என்று அதையும் மறுக்கிறான். அளவற்ற பொருட்களையும் சொத்துக்களையும் தருகிறேன் என்று சொல்ல, அதையும் மறுத்து செல்வத்தில் கொழிக்கும் இந்தத் தீவே என்னுடையது, உன் பொருட்களும் வேண்டியதில்லை என்றான். கடல் பயணத்தில் ஆபத்தே இல்லாத வண்ணம் பயணிக்க உனக்குச் சக்தியைத் தருகிறேன் என்றதற்கு, எனக்குக் கடல்கடந்து நாடுபிடிக்க ஆசையில்லை என்று சொல்லிவிட்டான். பேரழகிகளை உனக்கு மனைவியாக்குகிறேன் என்றும் ஆசைகாட்ட, எனக்கு என் மனைவியே பேரழகி, அவள் ஒருத்தியே போதும் என்று சொல்லி விட்டான். 

கடைசியாக துய் நமோலிவாய், துய் கலிட்டாவிடம் நெருப்பை உனக்கு அடங்கி உன் கட்டுக்குள் நடக்குமாறு வரம் தருகிறேன் என்றான். மகிழ்ந்த துய் கலிட்டா அதை ஏற்று, துய் நமோலிவாயை அந்த நமோலிவாய் ஆற்றிலேயே விட்டுவிட்டு ஊர் திரும்புகிறான். தம் மக்களிடம் தனக்கு நெருப்பை அடக்கும் சக்தி இருப்பதாகச் சொல்கிறான். அதை உறுதிப்படுத்த, நெருப்புக்கங்கு பரப்பப்பட்ட தீக்குழியின் மீது தன் மனைவியையும் கூட்டிக்கொண்டு நடந்து சென்று தனக்கும் மனைவிக்கும் எதுவும் ஆகவில்லை என்று தம் மக்களுக்குக் காட்டினான். 

அன்று முதல் அவன் வழி வந்த இனம், இன்றளவும் தம் இனத்திற்கான வரம் என்று சொல்லி, குடும்பத்தின் தலைமகன், இருவராக தன் நெருங்கிய உறவையும் கூட அழைத்துக்கொண்டு, இருவரிருவராக தீமிதிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வழக்கம், பல்வேறு தீவுகளுக்கும் பரவியது. ஆனால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆச்சரியமாக, தஹிதி தீவுகளில் இது ‘தீ வுமு தீ’ (ti umu ti) என்று அழைக்கப்படுகிறது. 

கேரளத்தின் கொச்சியில் குண்டத்துக் காளியின் அருள்வேண்டி வருடாவருடம் தீமிதி நடைபெறுகிறது. குண்டத்துக்காளியின் காலடியில் உள்ள இரு தங்க வேல்கள் தீக்குழியில் உள்ள தணலைக் கடத்திக் கொண்டு, பக்தர்களின் கால் சுட்டுவிடாமல் காக்கிறது என்பது ஐதீகம். தமிழகத்தின் பெரும்பகுதிகளில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் வழக்கமான மிகப்பிரபலமான பண்டிகையாக இருந்து வருகிறது. 

தாய்லாந்தில் சில கிராமங்களில் கொண்டாடப்படும் தீமிதி, உள்ளூர்த் தெய்வங்களை வேண்டி நடத்தப்படுகிறது. சில ஊர்களில் இது மூன்று நாள் விழாவாக நடக்கிறது. நெருப்புக் கங்குகளை ஒரு குவியலாகப் போட்டு அதன்மேல் ஏறிக் கடப்பது அங்கு வழக்கம். நெருப்புக் காயங்கள் ஏதுமின்றிக் கடந்தால் பாவங்கள் எதுவும் செய்திருக்கவில்லை என்பது அங்கு நிலவும் நம்பிக்கை.

ஜப்பானில் ஹிரோசிமா அருகே உள்ள மியா-ஜிமா தீவுகளில் ஹை-வடார்ட் என்று அழைக்கப்படும் தீமிதி, அங்குள்ள ஷின்டோரிக் கோவில்களில் நடைபெறும். ஷின்டோரிக் கோவில்களில் இருக்கும் கடவுளர்களுக்கு எட்டுக் கைகள் இருக்கும், அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு ஆயுதம் இருக்கும். கோபத்துடனே காட்சியளிக்கும் ஷின்டோரிக் கடவுளர்களின் கோவில்களில் நுழைவாயிலில், மணி ஒன்று கட்டி கயிறு தொங்கும். யாமபுஷி என்கிற வனத்தில் வசிக்கும் சித்துவேலை தெரிந்தவர்கள்தான் தீமிதியை முன்னின்று நடத்துவார்கள்.  சங்கு ஊதி மேளம் அடித்து இடுப்பில் மட்டும் உடையணிந்து வெற்றுடம்புடன் ஊர்வலமாக வந்து தீக்குழி இறங்குவார்கள். முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்து வந்த தீமிதி இப்போதெல்லாம் வருடம் முழுவதும் பல்வேறு நாட்களில் பல்வேறு கோவில்களில் நடைபெறுகிறது. குறிப்பாக, Honshu, MiyaJima, Kyoto, Kyushu, Tokyo ஆகிய நகரங்களில் உள்ள ஷின்டோரிக் கோவில்களில் வருடந்தோறும் நடந்துவருகின்றன. 

மலேசியாவில், மலாக்கா, பினாங்கு, கோலாலம்பூர் பகுதிகளிலும், ஏனைய தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தீமிதி பிரசித்தம். புத்த மதத்தினரும் தீமிதி விழாவை நடத்துகின்றனர். இது பினாங்கு மாநிலத்தில் நடக்கிறது.

ஐரோப்பிய நாடுகளும் தீமிதி விழாத் தாக்கங்களிலிருந்து தப்பவில்லை. ஆர்டெமிஸ் என்கிற கிரேக்கக் கடவுளை வணங்கும் சடங்குகளில் முக்கியமானதாக தீமிதி இருந்து வந்திருக்கிறது.  பண்டையக் காலத்தில் இத்தாலியின் ஃபெரோனியா என்கிற பெண் கடவுளை வணங்குபவர்கள் தீமிதி என்பது வணக்கத்தின் ஒரு முறையாக வைத்திருந்தார்கள்.  இத்தாலியத் துறவி புனித பீட்டர் இக்னியஸ் என்பவர் 1062-ஆம் ஆண்டு இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் தீமித்து அற்புதம் காட்டி மக்களைக் கிறித்துவ மதத்தில் இணைத்தார் என்று வரலாறு உண்டு. பல்கேரியா, வடக்கு கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இன்றளவும் தீமிதி நடைபெறுகிறது.

தீமிதியைக் குறிப்பிட பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் மறக்கவில்லை. பழைய ஏற்பாட்டில், “தன் உள்ளங்கால் வேகாமல் அனலை மிதிக்கக் கூடுமோ” (பழமொழி 6:28) என்றும் “நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது” (எசாயா 43:2) என்றும் வசனங்கள் உள்ளன. புதிய ஏற்பாட்டில், “தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்” (டேனியல் 3:27) என்று 

ஆப்பிரிக்காவின் கலஹாரிப் பாலைவனப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினராலும், தென்னாப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பழங்குடியினராலும் தீமிதி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 

சீனாவில் ஷீஜியாங் (Zhejiang) பிரதேசத்தில் லியான்ஹோ (Lianhou) என்றழைக்கப்படும் தீமிதி சீனக் கம்யுனிச எழுச்சிக்குப் பின்னரும் ஒரு கலாச்சார விழாவாக செப்டம்பர் 9 (Double Ninth Festival – இரு 9 சேர்வது அதிர்ஷ்ட தினமாக கருதப்படுகிறது) தினத்தில் அனுசரிக்கப்படுகிறது. இதைச் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகப் பார்க்கவேண்டிய நிகழ்வாகக் கருதுவதால் பிரபலமடைந்திருக்கிறது. 

ஷியா பிரிவு முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தின் 9, 10-ஆம் தினங்களில், நபிகள் நாயகத்தின் பேரனும், பாத்திமாவின் மகனுமான உசேன் ஈராக்கில் நடந்த கர்பலா போரில் உயிரிழந்ததை நினைவுகூறும் பொருட்டு தீமிதி விழா நடத்துகிறார்கள். இந்தியாவின் லக்னோ நகரிலும் வேறுபல இந்திய நகரங்களிலும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே தீமிதி வழக்கமாக இருந்து வருகிறது. 

இதுபோக, கடவுள் மறுப்பாளர்களும் பொதுமக்களிடம் மூட நம்பிக்கையை அகற்றிப் பகுத்தறிவை ஊட்டும் பொருட்டு, அனைவர் முன்னிலையிலும், எந்தக் கடவுளையும் வணங்கவில்லை, ஆனாலும் எங்களையும் நெருப்பு சுடவில்லை என்று நிரூபிக்க அவர்களும் தீமிதி விழா நடத்துகிறார்கள். பார்வையாளர்களையும் தீக்குழிக்குள் நடந்து பார்க்க அங்கேயே பயிற்சியளித்து தீமிதிக்க வைக்கிறார்கள். திராவிடர் கழகத்தினர் 1960-70களில் இதைத் தமிழ்நாட்டில் நடத்திக்காட்டி வந்தார்கள்.

தீமிதி 70களில் நிறுவனத்துவ அங்கீகாரம் பெற்றது. தீமிதி பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களின் முடிவின்படி, பயம் போக்கவும் மனதைக் காரியத்தில் ஒருநிலைப் படுத்தவும், தன் நம்பிக்கையை மேம்படுத்தவும், மேம்பட்ட குழுமனப்பான்மையை அடையவும், உலக நிறுவனங்களின் வியாபார மன்றங்களில் (Corporate Board) அங்கத்தினர்களுக்கு இது முக்கியமாக தலைமைத்துவப் பண்பை பங்களிக்கவும், மேம்படுத்தவும் பயன்படுகிறது. 

குழுவாக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள். துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கான மனோ உறுதியை இந்தப் பயிற்சியின் வழியாக அடைய முடிகிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் உறுதிப் படுத்தியிருக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் நிறுவனங்களின் மேலதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் தீமிதி பயன்படுத்தப்படுகிறது என்பது ஆச்சரியமாக உள்ளதா? ஆம், இதற்கென பட்டயப் பயிற்சி வகுப்புகள் உள்ளன. பயிற்றுவிப்பாளர்களுக்கும் தகுதித் தேர்வுகள், சான்றிதழ்கள் உள்ளன. 

உலகெங்கிலும் தீமிதிப்போர் ஓவ்வொருவருக்கும்  ஒவ்வொரு காரணங்கள், கலாச்சாரங்கள், முறைகள். அடிப்படையில் மனோவலிமையை அதிகரிப்பது தீமிதியின் முக்கிய பலனாக இருக்கிறது. நம்பிக்கை பலவிதம், அதில் தீமிதி ஒருவிதம்.

[email protected]

(இக்கட்டுரை 2022ம் ஆண்டு நவம்பர் மாத தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளியானது.)