நாட்டிடை நியாயங்கள் – 3
கால் நூற்றாண்டுக்கும் முன்பு 1997ல் Zbigniew Brzezinski என்பவர் எழுதிய The Grand Chessboard என்ற புத்தகத்தில், சிதறுண்ட சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாடான ரஷ்யாவை எப்படி அப்படியே பலமற்றதாக வைத்திருப்பது என்பதற்கான உத்திகளையும் ஆலோசனைகளையும் நான்காவது அத்தியாயத்தில் விவரிக்கிறார். இந்தப் புத்தகம் சிஐஏவின் புதிதாகச் சேரும் ஏஜண்டுகளுக்கு பாலபாடம். உத்திகளில் ஒன்றாக, ரஷ்யா உக்ரேனுடன் நட்புறவு பாராட்டிவிடாமல் பார்த்துக்கொள்வதுடன், நேடோவுடன் கடைசியாக உக்ரேனை இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும் ரஷ்யா எக்காரணத்தைக் கொண்டும் சீனாவுடனும், ஈரானுடனும் நெருங்கிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இதை ஒட்டியே கிழக்கு ஐரோப்பாவின் அமெரிக்க வெளியுறவுக்கொள்கை, குறிப்பாக, உக்ரேன் – ரஷ்யா பற்றிய கொள்கை அமைந்திருந்தது.
உக்ரேனுக்குள் நுழையத்தான் ரஷ்யா தனது படைகளை மார்ச் 2021 முதல் உக்ரேன் எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது என்பதை நன்றாகவே ஊகித்துக் கொண்ட அமெரிக்கா, அப்படி ஒரு தாக்குதல் நடந்தால்தான் ரஷ்யாவைப் பொருளாதாரத் தடைகள், ராணுவ நடவடிக்கைகள் என இறுக்கி ரஷ்யாவின் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தது.
நேடோவிற்குள் இருந்த முக்கிய நாடுகளான ஃப்ரான்ஸும், ஜெர்மனியும் அமெரிக்காவின் அந்த மனோபாவத்திற்கு உடன்படவில்லை. அவர்கள் தொடர்ந்து தனித்தனியாக ரஷ்ய அதிபர் புடினை நேரில் போய்ச் சந்தித்துப் பேசி வந்தார்கள். தமது நட்புறவு நாடான அமெரிக்காவிற்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்ததால், அவர்களுக்கு வெளி அழுத்தம் அதிகமாக இருந்தது. இந்த விஷயத்தில் ஜெர்மனியாலும், ஃப்ரான்ஸாலும் தீர்க்கமான உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை என்பதை அந்த நாட்டின் அதிபர்கள் புடினைச் சந்தித்தபின்பு உடனே வெளியிட்ட அறிக்கையிலும், நாடு திரும்பியபின் வெளியிட்ட அறிக்கைகளிலும் காண முடிந்தது.
இதனால் அவர்களால் புடினின் நம்பிக்கையைப் பெற இயலவில்லை. போர் என்று அறிவிக்காமல், உக்ரேனுக்குள் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் தன்னாட்சிப் பகுதிகளின் வேண்டுகோளுக்கிணங்க உதவி செய்யப் போவதாகக் குறிப்பிட்டதால், இது ஐ நா சபையின் போர் என்கிற பதத்திற்குள் உட்படவில்லை. ஐ. நா.வால் வெறுமனே தீர்மானங்களை மட்டுமே ஓட்டெடுப்புக்கு அனுமதிக்க முடிந்தது.
22 பிப்ரவரி 2022ல் உள்ளே புகுந்த ரஷ்யப்படைகள் தெற்கிலிருந்தும் வடக்கில் பெலாரஸிருந்தும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்தன. பெலாரஸின் எல்லையிலிருந்து உக்ரேனின் தலை நகர் கியவ் 120 கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருந்தது. ராணுவ டாங்கிகள் அணிவகுக்க ஆரம்பித்தவுடன் பதட்டமான செலன்ஸ்கி பெலாரஸ் அதிபர் உதவியுடன் ரஷ்ய அதிபரைத் தொடர்புகொண்டு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தார். பெலாரஸின் கோமெல் நகரில் பிப்ரவரி 28ல் ஆரம்பித்து, பிறகு இருமுறை மார்ச் 3 மற்றும் 7 மார்ச் தேதிகளில் நடைபெற்றது. நேடோவின் உறுப்பினரான துருக்கியின் அதிபர் எட்ரோகன் திடீரென அமைதிப்பேச்சு வார்த்தையை முன்னின்று நடத்த முன்வந்தார். ரஷ்யாவிற்கும் நேடோவின் உறுப்பு நாடு மத்தியஸ்தம் நேடோவின் கடப்பாட்டையும் உறுதி செய்யும் என்று நம்பியதால், மார்ச் 10ம் தேதி உக்ரேனின் வெளியுறவு அமைச்சர் திமித்ரோ குலேபாவும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவும் துருக்கியின் இஸ்தான்புல்லில் சந்தித்து கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் மாதிரி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஒப்பந்தம் தட்டச்சடிக்கப்படும் அந்த நேரத்தில் உக்ரேன் தலை நகர் கியவிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் ரஷ்யாவின் டாங்கிகள் காத்திருந்தன. பேச்சு வார்த்தை முறிந்தால் முன்னேறுவது, பேச்சு வார்த்தை அடைந்தால் பின்வாங்குவது என்று ரஷ்ய ராணுவம் காத்திருந்தது.
அந்த மாதிரி ஒப்பந்தத்தில் இருந்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு.
-
- முதலில் உக்ரேன் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்.
-
- நேடோ அமைப்பில் எக்காலத்திலும் சேரக்கூடாது
-
- நிரந்தரமாக வேறு எந்த இராணுவக் கூட்டமைப்பிலும் சேராமல் நடு நிலை வகிக்க வேண்டும்.
-
- 2014க்கு முன்பிருந்தது போல ரஷ்ய மொழிக்கு அரசு மொழி அங்கீகாரம் தரப்படவேண்டும்.
-
- 2014ல் சுய ஓட்டெடுப்பு நடத்தி ரஷ்யாவில் சேர்ந்த கிரிமியாவை ரஷ்யப் பகுதி என்று ஒப்புக்கொண்டு அதன் பேரிலான உரிமைக்கோரலை நிரந்தரமாகக் கைவிடவேண்டும்.
இதில் கிரைமியாக் கோரிக்கையை ஏற்றாலும், ரஷ்ய மொழி பேசுவோர் அதிகம் வசிக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு தனியதிகாரம் கொடுப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
(Photo by Arif Hudaverdi Yaman/Anadolu Agency via Getty Images)
இந்த கூட்டத்தை நடத்த விடாமல் ஓயாமல் அமெரிக்காவிலிருந்தும், லண்டனிடமிருந்தும் தொடர்ந்து தொலைபேசி வந்தவண்ணமிருந்தது. எட்ரோகன் முடிந்தவரை எந்தத் தொலைபேசியையும் அனுமதிக்கவில்லை. இரு ராணுவ அமைச்சர்களும் தத்தம் அதிபர்களிடம் ஒப்புதல் பெற்று கையொப்பமிட்டுக் கொள்வதாக பேட்டியளித்தனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அச்சாரமாக கியவின் அருகாமையில் உள்ள ரஷ்யப்படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்க செலன்ஸ்கிக்கு முக்கியமான இடத்திலிருந்து “ஆலோசனை” வந்தது. அதன்படி உக்ரேன் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை முன்வைக்க மார்ச் 29ம் தேதி அது பற்றிப் பரிசீலிப்பதாகக் கூறி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஏப்ரல் 2ம் தேதி படைகள் பின்வாங்கும் எனக்கூற, உக்ரேன் தலை நகரை மையம் கொண்டிருந்த போர்மேகம் கலைய ஆரம்பித்தது. ரஷ்யப் படைகள் பெலாரஸின் எல்லைக்குத் திரும்ப ஆரம்பித்தன. ஏப்ரல் 6 அன்று கியவ் அருகில் ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருந்த பகுதிகள் தன்வசம் வந்துவிட்டதாக உக்ரேன் இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.
செலன்ஸ்கி கையொப்பமிட்டு, மாஸ்கோவிற்குச் சென்று ஒப்பந்தத்தை கொடுத்து புடினுடன் போட்டோ எடுத்துக்கொண்டு பேட்டி கொடுக்க வேண்டியது தான் பாக்கி.
இந்த நிலையில் எந்த முன்னறிப்புமின்றி ஏப்ரல் 9ம் தேதி திடீரென அப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கியவ் நகரில் செலன்ஸ்கியைச் சந்தித்தார். தம் நாடு தொடர்ந்து இராணுவ உதவி செய்யும் என்றும், முதலில் உடனடியாக 120 கவச வாகனங்களும், கப்பல்-எதிர்ப்பு ஏவுகணைகளும் அளிப்பதாகவும், உலக வங்கி மூலம் 670 மில்லியன் டாலர்கள் கடன் அளிப்பதாகவும் உறுதி கூறி, ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டாமென்றும் செலன்ஸ்கியை அறிவுறுத்தினார். ஆனால் வெளிப்படையாக உக்ரேன் தரப்பில் பார்லிமெண்டில் அனுமதி வாங்கிய பின்னரே செலன்ஸ்கி கையொப்பமிடுவார் என்று பொய்யான உறுதிமொழிகளுடன் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் ஏப்ரல் 26ம் தேதி மேற்கத்திய நாடுகள் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் நகருக்கில் இருந்த ராம்ஸ்டீன் அமெரிக்க விமானதளமாத்தில் ஒன்று கூடி, ரஷ்யாவுடன் போரைத் தொடர்ந்து நடத்த உக்ரேனுக்கு ஒவ்வொரு நேடோ உறுப்பு நாடுகளும் தங்களால் ஆன இராணுவ உபகரணங்களை அளிப்பது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் ரஷ்யாவை இந்தப் போரில் ஜெயிக்கவிடக்கூடாது என்றும் உறுதி பூண்டனர்.
இதை தொலைவிலிருந்து நுகர்ந்த ரஷ்ய அதிபர் புடின், உக்ரேனில் தொடர்ந்து ரயில் மார்க்கமாகவும், விமானங்கள் வழியாகவும் இராணுவத் தளவாடங்கள் குவிக்கப்படுவதைக் கவனித்து வந்தார். இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன, ஒப்பந்தம் கையொப்பமாகும் எந்த அறிகுறியும் தென்படவில்லை, அதே சமயம் தாக்குதல்கள் உக்கிரமாக ஆரம்பித்த சூழலில், இனி உத்தரவாமில்லாத பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டியதில்லை என மே 19 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது என்று புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரஷ்யாவின் தாக்குதலும் உக்கிரமாகியது. உலக நாடுகளிடம் ஆயுத விற்பனைக்காக உருவாக்கி வைத்திருந்த நேடோ மற்றும் அமெரிக்க இராணுவத் தளவாடங்கள் பற்றிய கற்பனை உருவகங்கள் ரஷ்யாவின் மலிவான ஆயுதங்களால் சிதறடிக்கப்படும் பேராபத்தை நோக்கி மேற்கத்திய நாடுகள் நகர்ந்துகொண்டிருந்தன.
அமெரிக்கா மட்டுமே ஏறக்குறைய 112 பில்லியன் டாலர்கள் தளவாட, மற்றும் ஏனையச் சேவை உதவிகளை உக்ரேனுக்கு செய்திருக்கிறது. இது போக அடுத்து அதிகமாக உதவிய நாடுகள் ஜெர்மனியும் இங்கிலாந்தும் தான். சிறு சிறு நாடுகள் தங்களிடமிருந்த பீரங்கிக் குண்டுகள், துப்பாக்கிக் குண்டுகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரை அனுப்பி வைத்தனர். அமெரிக்காவின் ஆயுதத் தொழில் வளாகம் தம்மிடமிருந்த இருப்புச் சரக்குகளை எல்லாம் அமெரிக்கா ஒதுக்கிய 112 பில்லியனில் உக்ரேனுக்கு விற்றுக் கொள்ளை லாபம் பார்த்தன. இதில் பென்டகனும் தம்மிடமிருந்து மிகப் பழைய இராணுவத் தளவாடங்களையெல்லாம் கழித்துக் கட்ட இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது.
போரின் ஆரம்பக் காலகட்டத்தில் 2019ம் ஆண்டு ஆர்டர் கொடுக்கப்பட்டு 2022ல் டெலிவரி செய்யப்பட்டிருந்த துருக்கியின் பயாக்கர் ட்ரோன்கள் ரஷ்யாவின் தரைப்படைகளைத் துவம்சம் செய்தன. ஒரு பக்கம் துருக்கியின் எட்ரோகன் ரஷ்யாவிற்காக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, அதே எட்ரோகனின் மருமகனின் நிறுவனமான பயாக்கர் ட்ரோன்கள் ரஷ்யாவிற்குப் பெரும் தலைவலியாக இருந்தது. ரஷ்யாவின் வான்வெளித் தாக்குதல் மற்றும் தடுப்புப் பிரிவால் வெற்றிகரமாக ஏறக்குறைய ஆர்டர் செய்து உக்ரேனில் டெலிவரி ஆகியிருந்த அனைத்து ட்ரோன்களும் அழித்தொழிக்கப்பட்டன. போர் ஆரம்பித்த பிறகு, பயாக்கர் நிறுவனம் புது ஆர்டர்களை எடுக்கவில்லை, எனினும் 100 மில்லியன் டாலர் செலவில் உக்ரேனிலேயே தொழிற்சாலை ஆரம்பித்து உற்பத்தி செய்து தருவதாக உக்ரேனுக்கு உறுதியளித்தது.
ட்ரோன்களின் அதிமுக்கியப் பங்கை உணர்ந்த ரஷ்யா தனது ட்ரோன் தொழில் நுட்பத்தில் உருவாகும் ட்ரோன்களின் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க போர்க்கால நடவடிக்கை எடுத்தது. அவசரத் தேவைக்கு ஈரான் கைகொடுத்தது. வெறும் 2000 டாலரில் ஈரான் உருவாக்கியிருந்த சாஹெத் 136 தற்கொலை ட்ரோன்கள் (Kamikaze Drones) ஆயிரக்கணக்கில் மாஸ்கோவில் வந்திறங்கின. அவை தாழப் பறப்பதாலும் அளவில் சிறியதாக இருப்பதாலும் நேடோ மற்றும் அமெரிக்கப் படைகளின் ரேடார்க் கண்காணிப்பில் மண்ணைத் தூவி பல நூறு கிலோமீட்டர்கள் உட்சென்றன. அதில் உள்ள கேமரா வழியாக இலக்கை அடையாளம் கண்டு, இலக்கின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் துல்லியமாக மோதி வெடித்தபோது, 8 மில்லியன் டாலர் விலையுள்ள இங்கிலாந்தின் மிகப்பிரசித்தி பெற்ற சேலஞ்சர்2 டாங்கிகள் வெறும் 2000 டாலர் விலையுள்ள Kamikaze ட்ரோன் முன்பு செயலிழந்து போய் நின்றது. அதே போல ஜெர்மனியின் முக்கிய ஏற்றுமதியான லியோபார்ட் 2 மற்றும் பாந்தர் டாங்குகள், மற்றும், அமெரிக்காவின் M1 ப்ராம்ஸ் டாங்குகளும் Kamikaze ட்ரோன்கள் முன்பு சமாளிக்க முடியாமல் சரிந்தன. குறுகிய காலத்தில் சத்தமின்றி, அதிக வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் படியாக ரஷ்யாவும் ஈரானும் போட்டிபோட்டுக் கொண்டு இப்படிப்பட்ட Kamikaze ட்ரோன்களை உற்பத்தி செய்தன. இந்த மாதிரியான முற்றிலும் எதிர்பார்க்காத தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியும் ஆயாசமும் கண்டன மேற்கத்திய நாடுகள். இந்தப் போரில் ரகசியமாக வந்திறங்கிய பல மேற்கத்திய நாடுகளின் “ஆலோசர்களும்” பெரும் எண்ணிக்கையில் மாண்டனர். அவர்களை அதிகாரப்பூர்வமாக தியாகிகள் ஆக்க முடியாமல் ரகசியமாகப் புதைத்துக் கொண்டிருந்தனர் அமெரிக்கர்கள். இருபக்கமும் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் வீரர்களின் இழப்பை நாம் இங்கு குறிப்பிடப்போவதில்லை. சரியான கணக்கு இதுவரை யாருக்கும் தெரியவில்லை அல்லது கொடுக்கவில்லை.
ரஷ்ய இன்னமும் 400,000 ராணுவ வீரர்களை பயிற்சியுடன் தயார் நிலையில் வைத்திருக்கிறது. போர் முனையில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொரு முறை ரஷ்ய ராணுவம் வீரர்களை சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்கிறது. உக்ரேனுக்கு அந்தமாதிரி பாக்கியம் இல்லை. வீரர்கள் பற்றாக்குறையால் ரோட்டில் நடந்து போவோரையெல்லாம் இராணுவத்தில் சேர்த்து துப்பாக்கியைக் கையில் கொடுத்து போர்முனைக்கு அனுப்பிக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது உக்ரேன் இராணுவம்.
இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது, உக்ரேனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது, என்றாலும் செலன்ஸ்கி தளரும்போதெல்லாம் வெள்ளை மாளிகையிலிருந்து போன் வரும். சில சமயம் பல நாட்டுப் பார்லிமெண்டுகளிலும் வலுக்கட்டாயமாக செலன்ஸ்கியைப் பேச அழைத்து “கவுரவ”ப்படுத்தினர். அங்கெல்லாம் ரஷ்யாவின் போரைப் பற்றி புகார் அளித்துக்கொண்டிருந்ததார் செலன்ஸ்கி.
இதற்கிடையில் ரஷ்யா தனது சிறப்பு இராணுவ நடவடிக்கையை பிப்ரவரி 2022ல் ஆரம்பித்த போதே மேற்கத்திய நாடுகள் வரலாறு காணாத அளவிற்கு வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகளை ரஷ்யாவின் மீது விதிக்க ஆரம்பித்தன. ஆனால் ரஷ்யா இதை வெற்றிகரமாக எதிர்கொண்டு தடைகளை மீறி வளரும் ஒரு நாடாக உருமாறியது. இது அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டு சின்னபின்னமாகிப் போயிருந்த பல நாடுகளுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த நாடுகள் ரஷ்யா என்ன செய்து இப்படி தன்னை மாற்றிக்கொண்டது என உற்றுக் கவனிக்கலாயினர்.
பொருளாதரத் தடைகள் வெள்ளம் போல் ரஷ்யாவின் மீது பாய்ந்தன. இதில் முக்கியமானது SWIFT எனப்படும் வர்த்தகப் பரிமாற்றக் கட்டமைப்பிலிருந்து முதன்முறையாக ஒரு நாடு முற்றிலும் நீக்கப்பட்டது தான். 193 நாடுகளில் 11,000 நிதி அமைப்புகள் (வங்கிகள், மற்றும் வங்கிச் சேவைகள்) ஒருங்கிணைக்கும் SWIFT அமைப்பிலிருந்து ரஷ்யாவின் நடுவண் வங்கி, மற்றும் நிதி அமைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் வர்த்தகத்தில் பெரும் தடைகள் ஏற்பட்டன. விற்ற பொருளுக்கு பணம் பெற முடியவில்லை, இறக்குமதி செய்ய டாலரைப் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே வெளி நாட்டு வங்கிகளில் ரஷ்யாவின் சேமிப்பாக இருந்த 620 பில்லியன் அமெரிக்க டாலர்களும் முடக்கப்பட்டது. நல்லவேளையாக அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அனைத்தையும் ரஷ்யா 2021லேயே விற்று முடித்துவிட்டது. ஆபத்பாந்தவனாக சீனா ரஷ்யாவுடன் வர்த்தகம் பண்ண முன்வந்தது. சீன-ரூபிள் வர்த்தகம் SWIFT அமைப்பின்றி வழி செல்லாமல் நேரடி வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து வாங்கும் எண்ணெயை குறைத்து விட்டு ரஷ்யாவிலிருந்து அதிகமாக வாங்க ஆரம்பித்தது சீனா. ஆரம்பத்தில் தடுமாறிய ரஷ்யா சுதாரித்துக் கொண்டு டாலர் தவிர்த்த வர்த்தகங்களில் கவனம் செலுத்தி உள்ளூர் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டது.
இதில் பல நாடுகளும் அதிர்ச்சியடைந்த ஒரு நிகழ்வு என்னவென்றால், அமெரிக்கா, ரஷ்யாவின் அன்னியச் செலாவணி 620 பில்லியனை, உக்ரேன் போரைக் காரணம் காட்டி அபகரித்துக் கொண்டது தான். அப்படியென்றால், அமெரிக்கா சொல்படி கேட்கவில்லையென்றால் தமது அமெரிக்கக் கடன் பத்திரங்களும், அன்னியச் செலவாணியையும் அமெரிக்கா கையகப் படுத்திக்கொண்டால், நாம் என்ன செய்வது என்கிற பதற்றம் சிறு நாடுகளிடையே ஆரம்பமாகிவிட்டது. இதனால், பெரும்பாலான நாடுகள் புதிதாக அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்குவதை நிறுத்திக் கொண்டன, அல்லது குறைத்துக் கொண்டன. அதற்குப் பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். சீனா அதிவேகமாக தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது. தனது தங்க உற்பத்தியையும் வெளி நாடுகளுக்கு விற்கத் தடை போட்டிருக்கிறது. ரஷ்யா மற்றும் இதர நாடுகளும் அதே வழியைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன. போர் ஆரம்பித்ததிலிருந்து சிங்கப்பூர் கூட மாதம் 20 டன் என்ற அளவில் தொடர்ந்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
போரினால் கூடும் அமெரிக்காவின் கடன் தொகையை ஈடுகட்ட, அமெரிக்கா வழக்கமாக விற்கும் அமெரிக்கக் கடன் பத்திரங்களை (US Treasury Bonds – UST) இப்பொழுது வாங்குவோர் மிகவும் குறைந்து விட்டனர். சீனா சுத்தமாக நிறுத்தி விட்டது மேலும் 2023 மற்றும் 2024ல் முதிர்ச்சி பெறும் கடன் பத்திரங்களுக்கு ஈடுகட்ட புதிய கடன் பத்திரங்கள் வாங்குவதில்லை என்றும் கொள்கை முடிவு எடுத்தது. ஜப்பான் வாங்கும் வேகத்தைக் குறைத்து விட்டது. அமெரிக்கா மத்திய வங்கி அமெரிக்கக் கடன் பத்திரங்களை உள்ளூரிலேயே விற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது வலது கையிலிருந்து இடது கைக்கு கடன் பத்திரங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் அமெரிக்காவின் கடன் பத்திரங்கள் அமெரிக்காவிற்குள்ளேயே சுற்ற ஆரம்பித்து விட்டது.
அடுத்து கைவைத்தது ரஷ்யாவின் சரக்குப் போக்குவரத்தில். கப்பலும் விமானங்களும் ஒரு நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. காப்புறுதிச் சேவை (Insurance) இவை இரண்டிற்குமே மிக முக்கியம். வர்த்தகக் காப்புறுதியில் கோலோச்சும் நிறுவனங்கள் அனைத்துமே மேற்கத்திய நிறுவனங்கள்தான். அவை ரஷ்யாவைச் சேர்ந்த கப்பல்களுக்கோ, விமானங்களுக்கோ காப்புறுதி வழங்கக்கூடாது எனவும், ரஷ்ய விமானங்கள் ஐரோப்பிய வான் வெளியில் பறக்கக் கூடாது எனவும் தடை போட்டன. எண்ணெயை வெளினாட்டிற்கு விற்க ஒன்று குழாய் வழியாக விற்க வேண்டும், அல்லது டாங்கர் கப்பல்களில் ஏற்றி விற்க வேண்டும். சீனாவிற்கோ, இந்தியாவிற்கோ குழாய்வழித் தொடர்பு இன்னமும் ஏற்படுத்த வில்லை. கப்பலில் காப்புறுதி இல்லையென்றால் வாங்குபவருக்கு சரக்கு வந்து சேருவதைக் காப்பது எப்படி என்பது கேள்வியானது. ரஷ்யா ஓபெக் அமைப்பின் விலையை விட 40 சதவீதம் குறைத்து, அதனுடன் காப்புறுதியைத் தாமே வழங்குவதாக அறிவிக்க, முதலில் போய் ரஷ்ய எண்ணெய் வாங்க ஆரம்பித்தது இந்தியாதான். இப்படிக் குறைந்தவிலையில் ரஷ்யா முன்பை விட அதிக அளவில் எண்ணெய் வர்த்தகத்தில் வருமானம் ஈட்டியது. ஆப்கானிஸ்தானில் செய்த அதே வழிமுறை இந்தத் தடவை சவுதி அரேபியா உற்பத்தியைக் கூட்ட மறுத்ததால் வேலை செய்யவில்லை. அமெரிக்க வர்த்தகப் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் மீது வலுவிழந்தன.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி முன்னெப்போதையும் விட அதிகமானது. இறக்குமதி செய்த நிறுவனங்கள் கொள்ளையோ கொள்ளை லாபம் அடைந்தன. இந்தியாவின் நிதி நிலைமை ஓரளவு நன்றாக வந்திருக்கும் என்று கணக்குப் போட்டிருந்தீர்களானால், தவறு. இரண்டே இரண்டு தனியார் நிறுவனங்களுக்குத்தான் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அரசு அனுமதித்தது. ஒன்று ரிலையன்ஸ், மற்றொன்று நயாரா (முன்பு எஸ்ஸார்). இந்திய அரசின் சொந்த எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் ஒரு ரூபாய் கூட லாபம் பார்க்கவில்லை.
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து தான் எரிவாயு வாங்கிக்கொண்டிருந்தன. இதற்காக பல எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. இன்றையவரை ரஷ்யாவிலிருந்து உக்ரேன் வழியாகச் செல்லும் எரிவாயுக் குழாய்கள் செயல்படுகின்றன. அதிலிருந்து ரஷ்ய அரசு உக்ரேனுக்குக் கொடுக்கும் ராயல்டியும் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு குழாய் ஆஸ்திரியா நாட்டில் மையமாகிறது. வெளிப்படையாக ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் எரிவாயு வாங்கவில்லை என்று சொல்லிக்கொண்டாலும், இன்றளவும் ஆஸ்திரியா வழியாகச் செல்லும் ரஷ்ய எரிவாயு சென்று கொண்டிருக்கிறது. ஜெர்மனியின் தொழிற்க்கட்டமைப்பில் ரஷ்ய எரிவாயு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1000 க்யூபிக் மீட்டர் எரிவாயுவை 280 டாலருக்கு ரஷ்யா ஐரோப்பாவிற்கு விற்றுக்கொண்டிருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைக்கு இதுவும் தப்பவில்லை. ஆனாலும் ஜெர்மனி தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கிக் கொண்டிருந்தது, அதற்குப் பணம் கொடுக்க அமெரிக்காவும் அனுமதி அளித்து வந்தது. ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்குமான இரண்டு நார்ட்ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்கள் இருந்தன. முதலாவது குழாய்க் கட்டமைப்பு ஏற்கனவே செயலில் இருந்தது, இரண்டாவது குழாய்க் கட்டமைப்பு நிறுவிக்கொண்டிருந்தார்கள். அதைத் தடுக்க அமெரிக்க பரமப்பிரயத்தனம் செய்தது, என்றாலும் ஏஞ்சலா மெர்க்கல் என்ற ஜெர்மானிய அதிபர் போக்குக்காட்டி அதை முடித்து எரிவாயு செலுத்திப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள்.
ஜெர்மனியில் ஆட்சி மாறியது. புதிய அதிபர் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தார். அவரை அருகில் வைத்துக்கொண்டே நார்ட்ஸ்ட்ரீம் 2 குழாய்க் கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வராத படிக்கு அனைத்தும் அமெரிக்கா செய்யும் என்றார். தனது நாட்டின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் போது எந்த எதிர்ப்பும் காட்டாமல் சிரித்த வண்ணம் இருந்தார் புதிய ஜெர்மனி அதிபர். அவர் ஊர் திரும்பிய சில நாட்களில் நார்ட்ஸ்ட்ரீம் குழாய்க் கட்டமைப்பு இரண்டும் சில அடையாளம் தெரியாத நாடுகளால் வெடிவைக்கப்பட்டுத் துண்டிக்கப் பட்டது. இன்று வரை ஒப்புக்கு விசாரணை நடைபெறுகிறது. ஜெர்மனிக்கு எரிவாயு தருவதாக அமெரிக்கா முன்வந்தது, ஆனால் விலை மட்டும் அதிகம். 280 டாலருக்கு ரஷ்யாவிடமிருந்து வாங்கிய அதே எரிவாயு 1200 டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டியிருந்தது. தற்போது 450லிருந்து 850வரை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இரு மடங்கு விலை. தாள முடியாத ஜெர்மனி நிறுவனங்கள் உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொண்டிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜெர்மன் அதிபரோ அடுத்து எத்தனை பில்லியன் ஈரோ பண உதவியை உக்ரேனுக்கு எப்படி அளிப்பது என்று விவாதித்துக்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து நடக்கும் போரால், உக்ரேன் தனது பகுதிகளை இழந்தும், போர் வீரர்களை இழந்தும், பொருளாதாரத்திற்காகக் கையேந்தும் சூழலில், நேடோவில் உள்ள சிறுசிறு உறுப்பு நாடுகள் பொருளாதார ரீதியாகச் சோர்ந்து போய் விட்டன. அவை, உக்ரேனுக்கு மேலும் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்துமாறு பிரஸ்ஸல்ஸில் உள்ள நேடோவின் தலைமையகத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகியன. இதற்கிடையில் இஸ்ரேலிய-பாலஸ்தீனியத் தாக்குதல்கள் அமெரிக்க மற்றும் நேடோ படைகளின் கவனத்தை உக்ரேனிடமிருந்து இழுத்துக்கொண்டன. செலன்ஸ்கியைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. அமெரிக்காவிற்கு மீண்டும் பயணம் போன செலன்ஸ்கியை இம்முறை கண்டுகொள்வோர் சம்பிரதாயத்துக்காகச் சந்தித்தனர்; செலன்ஸ்கி வெறும் கையுடன் ஊர் திரும்பினார், கூடவே தம்மையும் தம் நாட்டையும் கைவிட்டு விட்டனர் என்பதையும் தெரிந்து கொண்டார்.
ஆனாலும், ரஷ்யா அவருக்கான பேச்சுவார்த்தைக் கதவைத் திறக்கவில்லை. ரஷ்யா உக்ரேன் போர் இப்போது ரஷ்யாவின் விருப்பத்தில்தான் உள்ளது. ரஷ்யாவுடன் இராணுவ, வர்த்தக, பொருளாதார ரீதியில் ஒத்துப்போவேன் என்று பிரச்சாரம் செய்து அதிபர் பதவிக்கு வந்த செலன்ஸ்கி, மார்ச் 2022ல் கூடி வந்த அமைதிப்பேச்சு வார்த்தையை அமெரிக்காவின் சொல்கேட்டு அலட்சியப்படுத்தின் விளைவாக இன்றைக்கு மாஸ்கோவின் கதவைத் தட்டும் தகுதியை இழந்து விட்டார். மாஸ்கோவின் கதவுகளும் செலன்ஸ்கி தட்டினால் திறக்காது. சீனாவிடம் போய் மத்தியஸ்தம் பண்ண அழைக்க வேண்டும். சீனா விதித்த நிபந்தனைகள் மார்ச் 2022ல் ரஷ்யாவுடன் ஒத்துக்கொண்ட அதே நிபந்தனைகள் தான், ஆனால் செலன்ஸ்கி இன்னமும் ஒரு குருட்டு நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அதில் இஸ்ரேல் மண்ணள்ளிப் போட்டு விட்டது. அமெரிக்கா மற்றும் நேடோ படைகளின் கவனம் இஸ்ரேலுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்ற படியால், உக்ரேனைப் பற்றிய கவனம் குறைந்து விட்டது.
ரஷ்ய உக்ரேன் போர் விளைவாக, டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகள் ஐ நா விதிகளின்படி ஓட்டெடுப்பு நடத்தித் தம்மைத் தன்னாட்சிப் பிரதேசங்களாக அறிவித்துக்கொண்டன, ரஷ்யப் பாராளுமன்றம் அவற்றைப் பாதுகாப்பதாக உறுதி அளித்திருக்கிறது. தொடரும் போரின் விளைவால், விரிவாகிக் கொண்டே போகும் போரால் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகள் உக்ரேனில் இனிமேல் கடலெல்லை இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் போலிருக்கிறது. ரஷ்யாவின் இறுதி இலக்கு என்ன என்பது புடினுக்கும் இராணுவத் தலைமைக்கும் மட்டுமே அறிந்த ரகசியம்.
அமெரிக்காவின் தூண்டுதலுடனும் ஆதரவுடனும் உக்ரேனில் துவங்கப்பட்ட நேரடி உக்ரேன் – ரஷ்யப்போர், உலகின் ஒற்றைத் தலைமை என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்டும் நிலையை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கிறது.