நாட்டிடை நியாயங்கள் – 2

யூரோ மைதான்

அடுத்ததாக, உக்ரேனில் 2014இல் நடந்த யூரோமைதான் போராட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். இது உக்ரேன் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

அப்படி என்னதான் யூரோமைதானில் நடந்தது?

உக்ரேனில் மூன்றில் ஒரு பகுதியினர் ரஷ்யமொழி பேசும் ரஷ்யர்கள், மீதமுள்ளவர்கள் உக்ரேனியன் மற்றும் போலிஷ் மொழி பேசுபவர்கள். ரஷ்யமொழி பேசும் ரஷ்யர்கள் உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குறிப்பாக, டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான் மற்றும் தெற்கு ஒசேடியா வரை பரவியிருக்கிறார்கள்.  உக்ரேனியனும் ரஷ்யனும் அரசு மொழிகள். உக்ரேனிய அல்லது ரஷ்ய மொழியைப் பூர்வாங்கமாகக் கொண்ட ஒருவரே உக்ரேனின் அதிபராக மாறி மாறி பதவியிலிருப்பார். 2010இல் நடந்த தேர்தலில் ரஷ்யமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட விக்டர் யுவானிச்கோவ் அதிபரானார்.

2013இல் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைப் போட உக்ரேனின் அதிபரை அணுகியது. அதன் வழியாக தடையற்ற வர்த்தகம் மற்றும் தாராளமான குடி நுழைவு அனுமதி மற்றும் 3பில்லியன் டாலர்கள் கடன் பெறுவது என்பது ஒப்பந்தத்தின் சாரம். விக்டர்.யு-விற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதும் அத்துடன் தொடர்ந்து ரஷ்யாவுடனான தொடர்புடனும் இருப்பதும் விருப்பமாக இருந்தது. அவர் இருபக்கமும் நட்பாக இருக்க விரும்பினார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்த ஷரத்துக்கள் தொடர்ந்து மாறின. சில குறிப்புகள் ரஷ்யாவுடனான உறவுக்கு பங்கம் விளைவிப்பதாக இருந்தன. இதனால் அதில் கையெழுத்திடத் தயங்கினார் விக்டர்.யு.

2013 ஆகஸ்டில் கையெழுத்தாக வேண்டிய ஒப்பந்தம் தள்ளிப் போனது. அதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், கிழக்கு ஐரோப்பிய ஆசியப் பொருளாதாரக் குழுமத்துடன் (Eurasian Economic Union – EAEU) தடையற்ற வர்த்தகம் செய்து கொள்ளும்படி சொன்னதாகவும், 15 பில்லியன் டாலர் கடன் தருவதாகச் சொன்னதாகவும், அதனால் விக்டர்.யு. கையெழுத்திடுவதைத் தள்ளிப்போட்டார் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில், நவம்பர் 2013இல் எங்கிருந்தோ வந்த பெரும் திரளான உக்ரேனிய போராட்டக்காரர்கள், கியவ் நகரின் மையத்தில் இருந்த மைதானத்தில் கூடாரங்கள் போட்டு உக்ரேனின் அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் போடாததைக் கண்டித்துக் குரலெழுப்பினர். அவர்கள் ஏறக்குறைய அங்கேயே வசிக்கத் தொடங்கிவிட்டனர். சிறிது நாட்களில் மைதானத்தைச் சுற்றியிருந்த அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். காவலர்களுடன் போராடுவதற்காக தற்காப்புப் படை ஒன்றும் ஏற்படுத்தி ஆயுதங்களுடன் சுற்றத் தொடங்கினர். சாப்பாட்டிற்கோ, உடைகளுக்கோ, ஏனைய வசதிகளுக்கோ எந்தப் பஞ்சமும் இல்லை. அவர்களுக்கு யாரோ பண உதவி செய்தார்கள். 

இந்த போராட்டத்திற்குப் பிண்ணனியில் அமெரிக்கா இருப்பதாகக் கருதினார் விக்டர்.யு. அப்போது அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன், அவரின் தேசியப்பாதுகாப்புச் செயலர் ஜேக் சல்லிவன். அப்போதைய ராஜாங்கத் துணைச் செயலாளர் விக்டோரியா நூலன்ட். நூலன்ட் அப்போது உக்ரேனுக்கான அமெரிக்கத்தூதர் ஜியோப்ரியுடன் பேசிய தொலைபேசி உரையாடல் கசிந்தது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றி அசிங்கமாகச் சொல்லியிருந்தார். அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தது. அந்த உரையாடல் மேலும் போராட்டத்தைப் பற்றியும், ஆட்சியில் யாரை அமர்த்துவது பற்றியும் பேசியது அமெரிக்காவின் தொடர்பைக் கோடிட்டுக் காட்டியது.

டிசம்பரில் நூலன்ட் போராட்டக்கார்கள் மத்தியில் போய் பிஸ்கட்களைக் கொடுத்து அவர்களின் போராட்டத்திற்கான அமெரிக்க அரசின் ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்தார். காவலர்களின் மீதான தாக்குதல், நெருப்பு வைத்தல், கண்ணாடிகளை உடைத்தல் என ஹாங்காங்கில் நீங்கள் கண்டிருந்த அனைத்து காட்சிகளும் அங்கு நடந்தேறின. ரஷ்ய செய்தித்தாள்கள் அமெரிக்கத் தூதரகம் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செய்து அந்தப் போராட்டத்தை நடத்துவதாகக் குற்றம் சாட்டியது.

போராட்ட வன்முறைகள் உச்சம் தொட்டுக்கொண்டிருந்தன. 2014 பிப்ரவரி 18 முதல் 24 நாட்களில் யாரும் எதிர்பாராத உச்சகட்டம் வந்தது. அரசுக் கட்டிடங்களின் மாடியிலிருந்து அடையாளம் தெரியாத குழு  குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளைக் (Sniper Rifles) கொண்டு போராட்டக்காரர்கள் மற்றும் காவலர்கள் மீது சராமாரியாக சுட ஆரம்பித்தனர். 80 பேர் சம்பவ இடத்திலும், 20 பேர் மருத்துவமனையிலும் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். போராட்டக்காரர்களையும் காவலர்களையும் ஒருசேரச் சுட்டது யார் என இன்றுவரை தெரியவில்லை. எதிர்க்கட்சியினர்தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசுக்கட்டிடங்களும் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. உக்ரேனிய ராணுவத்தின் சிறப்புக் கமாண்டோ படை அந்த அலுவலகத்தில் உடைத்துக்கொண்டு நுழைய அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது. இன்று வரை சுட்டவர்கள் யார் எனத்தெரியாமலேயே விசாரணை தொக்கி நிற்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உக்ரேன் அதிபர் விக்டர்.யு அதிர்ச்சியில் வருத்தம் தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியான கிரைமியா, மார்ச் 18 2014இல் தனி நாடு கோரி மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பெரும்பான்மை பெற்று அந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்து அதிலும் வெற்றி பெற்றது. ரஷ்ய நாடாளுமன்றம் டூமா இதற்கு ஒப்புதல் தெரிவிக்க, கிரைமியா ரஷ்யாவின் அங்கமானது.  இதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யா அதற்கு ஐ.நா சபை ஏற்படுத்தியிருக்கும் சட்ட திட்டங்களின்படியே, செர்பியாவிலிருந்து 2008இல் கொசோவா தனி நாடானது போலத்தான் கிரைமியாவும் தனி நாடானது என்று சொன்னது. கிரைமியாவை இன்னமும் பல உலக நாடுகள் ரஷ்யாவின் பகுதி என்று ஏற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து 2014 மே 2இல் ஒடெசா பகுதியில் ஒரு கால்பந்து விளையாட்டின் போது உக்ரேனிய மொழி பேசுவோருக்கும், ரஷ்ய மொழி பேசுவோருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் கலவரமாக மாறி ஏராளாமானோர் பலியாயினர். உக்ரேனுக்குள் ரஷ்ய மொழி பேசுவோருக்கும், உக்ரேனிய மொழி பேசுவோருக்குமான வெறுப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. அது அவ்வப்போது கலவரங்களாக மாறியது. ஏற்கனவே தன்னாட்சி கேட்டு சலித்துப் போயிருந்த டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியில் நிலைமை மோசமானது.

இதனிடையில் 2014 மே மாதத்தில் பெட்ரோ ப்ரோசன்கோ அதிபராகப் பதவியேற்றார். இவர் மூலம்தான் போராட்டக்காரர்களுக்கு பண உதவி அளிக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஒரு அமைதியற்ற சூழலில் பதவியேற்ற பெட்ரோ, அமைதியைக் கொணரும் பொருட்டு OSCE என்கிற ஐரோப்பிய அமைப்பை மத்தியஸ்தம் செய்யக் கூப்பிட்டார்.  OSCE அமைப்பில் ஜெர்மனியும் ஃப்ரான்ஸும் இருந்தன. ஜெர்மனிக்காக ஏஞ்சலா மெர்க்கல் (சமீபத்தில் ஓய்வு பெற்றார்) இருந்தார். அவர்களின் முன்னிலையில், டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியில் யாரும் அமைதியைக் குலைக்கும் வண்ணமாக செயல்படக் கூடாது என்றும், அப்படி அமைதியைக் கண்காணிப்பது OSCE அமைப்பின் பொறுப்பு எனவும் கையெழுத்தானது. பெலாரஸின் மின்ஸ்க் நகரில் கையெழுத்தானதால் இதற்கு மின்ஸ்க் ஒப்பந்தம் என்று பெயர். அதற்குப் பின், தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மீறப்பட்டு வந்தது. ரஷ்ய மொழி அதிகாரப்பூர்வ மொழி இல்லை என்று ஆரம்பித்து, நிதி ஒதுக்காமை, ராணுவ அட்டூழியம் என்று தொடர்ந்து கொடுமை நடந்து வந்தது. கண்காணித்துக் கட்டுப் படுத்த வேண்டிய ஜெர்மனியும் ஃப்ரான்ஸும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டு அமைதியாக இருந்தன. இது அப்பகுதி மக்களை மிகுந்த கொதிப்பில் வைத்திருந்தது.

கிழக்கு உக்ரேனில் மின்ஸ்க் ஒப்பந்தத்திற்குப் பின்னரும் பல ஆயிரம்பேர் டோனெட்ஸ்க் பகுதியில் பலியாகி வரும் பதட்டமான சூழலில், தொடர்ந்து 2014 முதல் உக்ரேனுடனான ராணுவப் பயிற்சியை அமெரிக்கா நேடோ படைகளுடன் நடத்தி வந்தது. செப்டம்பர் 2014இல் மேற்கு உக்ரேனில் லிவிவ் நகரில் 15 நாடுகளுடன் ( நேடோ உட்பட) உக்ரேன் போர்ப்பயிற்சி மேற்கொண்டது. ஜூன் 2015இல் போலந்து உக்ரேன் எல்லையில் அமெரிக்க ராணுவம் உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது.

2016இல் அமெரிக்க ராணுவப் பயிற்சியாளர்கள் பல நேடோ நாடுகளில் உக்ரேன் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார்கள். அவர்களின் நோக்கம் 2020க்குள் இந்த உக்ரேனிய ராணுவ வீரர்கள் ஊர் திரும்பி தமது சக வீரர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். நேடோவின் ஆயுதங்களில் பயிற்சிகள் மற்றும் நேடோவின் போர் வழிமுறைகள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இந்த கூட்டு இராணுவப் பயிற்சி, பிற்பாடு நேடோவில் உக்ரேன் சேரும்போது உடனடியாகப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று உக்ரேனிய இராணுவத்திடம் ஆசை காட்டப்பட்டது.

இதற்கிடையில், கோர்ப்பசேவ் அதிபராக இருக்கும்போது, நேடோவின் சார்பாக கிழக்கு முகமாக ரஷ்யாவின் எல்லைகளை ஒட்டிய நாடுகளுக்கு நேடோவை விரிவாக்கம் செய்ய மாட்டோம் என்று வாய்மொழி உத்தரவை ரீகன் அரசு வழங்கியிருந்தது. ஆனால் நடந்ததோ வேறு. நேடோ பற்றிய பகுதியில் எப்படி சிறுகச் சிறுக ரஷ்ய எல்லையை நோக்கி நேடோ விரிவடைந்தது என்பது புரியும்.

செப்டம்பர் 2001இல் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டபின் நேடோ அமைப்பைத் திரட்டிக்கொண்டு ஆப்கானிஸ்தானில் போய் இறங்கிய அமெரிக்காவை மிகக் கவனமாக கவனித்து வந்தார் புடின். அப்பொழுதுதான் அவருக்கு விளங்கியது, அடுத்த குறி ரஷ்யாதான். அதற்காகத்தான் கிழக்கு நோக்கி நேடோ விரிவாக்கம் காண்கிறது. உக்ரேன் ராணுவத்திற்கு தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளும் ஆயுதங்களும் குவிக்கப்படுவதையும் கவனிக்கிறது ரஷ்யா. அதில் கடைசி நாடு, உக்ரேன் என்பதும் புரிந்து விட்டது. இதனால் ரஷ்யா காத்திராமல் 2014லேயே கிரைமியாவை ரஷ்யாவின் பகுதியாக்கி, கருங்கடலின் கடற்படைத் துறைமுகத்தை வலுப்படுத்த ஆரம்பித்தது.

2021 – பாதுகாப்பு ஒப்புறுதி

நேடோ என்கிற அமைப்பு சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பிலிருந்து உறுப்பு நாடுகளைப் பாதுகாப்பது என்கிற ஒற்றைக் கோட்பாடைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது எனினும், 1991ல் சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னரும் நேடோ அமைப்பு தொடர்வதும்,

அப்போதைய ரஷ்ய அதிபர் கோர்ப்பசேவிடம் ரஷ்யாவை நோக்கி நேடோ விரிவாக்கம் செய்யாது என்கிற உறுதிமொழியை மீறி விரிவாக்கம் தொடர்ந்து செய்வதும்,

கிழக்கு உக்ரேனின் ரஷ்யமொழி பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய OSCE டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதியில் தினமும் நடக்கும் கொலைகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது

தன் நாட்டின் தேசியப் பாதுகாப்பில் நெடோ மற்றும் அமெரிக்கத் தரப்பின் எந்தச் செயலும், உறுதிமொழியும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்று முடிவு செய்த ரஷ்யா, நேடோவின் தோட்டா நிரப்பிய துப்பாக்கி தம்மைத் தான் குறி பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டது.

அக்டோபர் 2021இல் கிழக்கு உக்ரேனை ஒட்டிய ரஷ்ய எல்லையில் திடீரென 100,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் குளிர்காலப் பயிற்சிக்காகக் கூடினர். ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லையில் குவிப்பது உக்ரேனைத் தாக்கி ஊடுருவத்தான் என்று நேடோ மற்றும் அமெரிக்கா தரப்பு குற்றம் சாட்டியது. ரஷ்ய அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்தது. அது வழமையான குளிர்காலப் பயிற்சி என்றே சொன்னது. 

நவம்பர் 2021இல் ரஷ்ய அதிபர் புடின், ஜோ பைடனிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும் தனித்தனியாக பாதுகாப்பு ஒப்புறுதி (Security Guarantees) கேட்கப்போவதாக அறிவித்தார். அதாவது, மின்ஸ்க் ஒப்பந்தம் நிறைவேற்றப்படமலிருப்பதும், உக்ரேனில் நேடோ படையின் ஆதிக்கம் அதிகமாவதும், கருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான இராணுவ நடவடிக்கைகளும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே, தாங்கள் ரஷ்யாவின் மீது தாக்குதல் எதுவும் செய்யப்போவதில்லை என்கிற பாதுகாப்பு ஒப்புறுதியை ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தனித்தனியாகத் தரவேண்டும் என்று கோர தனது வெளியுறவுத்துறை அமைச்சகத்தை பணித்தார். முதல் கோரிக்கை நவம்பர் 2021இல் வெளியானது.

நவம்பர் 30 2021இல் நேடோவின் தலைவர், நேடோ நாடுகளுக்காகத்தான் பாதுகாப்பு ஒப்புறுதி வழங்க முடியும். உக்ரேன் போன்ற நேடோ நட்பு நாடுகளின் செயல்பாடுகளுக்காகவெல்லாம் நேடோ பாதுகாப்பு ஒப்புறுதி வழங்க முடியாது என்று ரஷ்யாவின் கோரிக்கையை மறுத்தார்.

டிசம்பர் 2021இல் மீண்டும் இரண்டாவது முறையாக, ரஷ்ய அதிபர் புடின், நீண்டகால பாதுகாப்பு ஒப்புறுதியின் அவசியத்தைப் பற்றியும், அதை உடனே நிறைவேற்றித் தரும்படியும் கோரிக்கை விடுத்தார். அதற்காக அவர் முன்வைத்த காரணங்கள் ; நேடோ அமைப்பு வாய்மொழி உறுதியாக அளித்த கிழக்கு நோக்கிய விரிவாக்க மறுப்பைப் பொய்யாக்கி, தொடர்ந்து விரிவாக்கம் செய்வதும், பொருளாதரத் தடைகளை காரணமின்றி விதிப்பதும், ரஷ்ய எல்லைகளில் பிரச்னைகளை உள்ளாக்குவதுமாக இருக்கிறது. பதட்டத்தைத் தணிக்க நீண்டகால பாதுகாப்பு ஒப்புறுதியை எழுத்தில் கொடுங்கள் என்பதுதான் கோரிக்கை.  மறைமுகமாக, எங்கள் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லையென்றால் அதை எழுத்தில் உறுதி கொடுங்கள் என்பது தான் இந்தப் பாதுகாப்பு ஒப்புறுதியின் உள்ளர்த்தம்.

டிசம்பர் 9இல் புடினும் ஜோ பைடனும் பேசினார்கள். பாதுகாப்பு ஒப்புறுதியும் பேச்சில் ஒரு பகுதியாக இருந்தது. ரஷ்யா எதிர்பார்த்தது போலவே ஜோ பைடன் ஒப்புறுதி பற்றி உறுதியான பதில் கொடுக்க மறுத்து விட்டார். 2021 கிறிஸ்துமஸின் போது அதிகாரப்பூர்வமாகவே ஏற்பதில்லை என வெள்ளை மாளிகை அறிவித்து விட்டது. இது ரஷ்யாவின் மூன்றாவது முயற்சி.

ஜனவரி 12, 2022இல் அமெரிக்காவும் நேடோவும் கூடி ரஷ்யாவுடன் பேசுவது என்பது உறுதியானது. அந்தக் கூட்டத்தில் உறுதியான முடிவு எதுவும் எட்டவில்லை. ரஷ்யாவின் பாதுகாப்பு உறுதிசெய்ய ஒப்புறுதி எட்டவில்லையென்றால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் எச்சரித்தார். ஒரு வாரம் கழித்து பதில் கூறுவதாக நேடோ அமைப்பு கூறியது. இந்தக் கூட்டத்தில் ரஷ்ய எல்லைகளுக்குள் இருக்கும் ரஷ்ய வீரர்களை விலக்கிக் கொள்ளும்படி அமெரிக்காவும், நேடோவும் கோரிக்கை வைத்தன. ரஷ்ய ராணுவ வீரர்கள் ரஷ்ய எல்லைக்குள் தானே இருக்கிறார்கள், அவர்களை விலக்கிக் கொள்ளச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று ரஷ்ய இராணுவ அமைச்சர் நகைத்தார்.

தொடர்ந்து ஜனவரி 21ம் தேதி அமெரிக்கச் செயலாளர் ஜேக் சல்லிவனும், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவும் நேரில் பேசுவது என முடிவாயிற்று. ஜனவரி 27ம் தேதி எழுத்து பூர்வமாக அமெரிக்காவும், நேடோவும் தனித்தனியாக தமது பதிலைத் தெரிவித்தனர். எதிர்மறை பதில் ரஷ்யாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது. 2022 பிப்ரவரி 2ம் தேதி புடின் அமெரிக்காவும், நேடோவும் தமது நீண்டகால பாதுகாப்பு ஒப்புறுதிக் கோரிக்கையைத் தவிர்த்து விட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நான்கு முறை திரும்பத் திரும்பக் கோரிக்கை விடுத்தும், அமெரிக்காவும் நேடோவும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நோக்கம் இல்லை என்கிற உறுதிமொழியைக் கொடுக்க மறுத்தது, அவர்களுக்கு அப்படியொரு எண்ணம் இருப்பது உலகிற்கே உறுதியாகத் தெரிந்து விட்டது. 

ராணுவத்தலைவர்களுடனும், உயர்மட்ட அமைச்சரவையுடனும் கலந்தாலோசித்த பிறகு ரஷ்ய அரசு பூர்வாங்கமான சில அரச முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. 

பிப்ரவரி ஆரம்பத்தில் சீனாவில் ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்த புடின் தனது திட்டங்களை சீன அதிபரிடம் கலந்து ஆலோசித்திருப்பார் என்று உத்தேசிக்கப்படுகிறது.

பிப்ரவரி 22ம் நாளன்று ரஷ்ய நாடாளுமன்றம் டொனெட்ஸ்க், மற்றும் லுகான்ஸ்க் பிரதேசங்களை தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசம் என்று ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தன்னாட்சிப் பகுதிகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்பை ரஷ்யா பொறுப்பேற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பிப்ரவரி 24ம் நாள் ரஷ்ய அதிபர் புடின் ரஷ்யப் பாராளுமன்றத்தில் உதவி கேட்கும் தன்னாட்சி அமைப்புகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ரஷ்யா சிறப்பு இராணுவ நடவடிக்கையில் இறங்கும் என்று அறிவித்தார். அறிவித்த உடனேயே, உக்ரேனிய எல்லையில் ஐந்து மாதங்களாகக் காத்திருந்த ரஷ்ய இராணுவம் உக்ரேனுக்குள் நுழைந்தது.  

-தொடரும்