ரஷ்யா-உக்ரேன் போர் இன்றுடன் (டிசம்பர் 1, 2022), 312 நாட்களைக் கடந்து விட்டது. அமெரிக்கா கடந்த சில தசாப்தங்களில் முதல் முறையாகப் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று சொல்கிறது, உக்ரேனோ திணிக்கப்பட்ட போர் என்கிறது. இரு பக்கமும் இழப்புகள் அதிகம் என்றாலும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களும் பணமும் தரவில்லையென்றால், இந்தப்போர் ஜூன் மாதமே முடிந்திருக்கலாம். இப்போதையச் சூழலில் இந்தப்போர் விரைவில் முடிவுக்குவரும் என அமெரிக்கா, உக்ரேன், ரஷ்யா, ஐநா என யாருக்குமே நம்பிக்கையில்லை.
அமெரிக்கா நடத்திய ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியாத் தாக்குதல்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு போன்ற கேள்விகளுக்கு மத்தியில், ரஷ்யா ஏன் இப்படி ஒரு தாக்குதலை திடீரென உக்ரேன் மீது நடத்தியது? அதன் பின்னணிக் காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஊடகக் கூச்சல்களிலிருந்து ஒதுங்கி இருந்து அலசிப் பார்க்கலாம்.
ரஷ்யா, உக்ரேன், நேடோ (NATO – North Atlantic Treaty Organization) இவர்களின் அன்பு-வெறுப்பு உறவுகளைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் இந்தப் போரைப் பற்றிய சரியான புரிதல் நமக்குக் கிடைக்கும். அதற்கு, முதலில், இரண்டாம் உலகப்போருக்குப் பின் நேடோ அமைப்பு உருவாக்கப்பட்ட வரலாறு, 1991இல் சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பின் நிர்மூலம், 2014இல் உக்ரேனில் நடந்த யூரோமைதான் போராட்டம் இவை மூன்றையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.
நேடோ (NATO) வரலாறு
இரண்டாம் உலகப்போர் 1939இல் ஆரம்பித்து 6 ஆண்டுகள் பெரும் சேதங்களை உண்டாக்கியபின் 1945இல் முடிவுற்றது. அதுவரை ஒதுங்கிநின்று கவனித்துவந்த அமெரிக்கா, தொடர்ந்த போரால் ஃப்ரான்ஸும் இங்கிலாந்தும் களைத்திருந்த வேளையில் புத்துணர்ச்சி ஊட்டும் வகையில், 1944 ஜூனில் முதன் முறையாக நார்மண்டியில் படைகளுடன் இறங்கி இரண்டாம் உலகப்போரில் நேரடியாகப் பங்குபெற்றது. இன்றைக்குள்ள ஃப்ரான்ஸ் நாடு அன்று ஜெர்மனியிடம் தான் இழந்திருந்த பகுதிகளைத் திரும்பப் பெற்றது.
ஃப்ரான்ஸும் இங்கிலாந்தும் (ஐக்கிய அரசகம்) மார்ச் 4, 1947இல் இணைந்து ஜெர்மனி, சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு ஆகியவற்றின் இராணுவத் தாக்குதல்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஓர் இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கலாம் என்று முடிவு செய்தன.
ஏப்ரல் 4, 1949இல் கனடாவைச் சேர்ந்த மைக் பியர்ஸன் என்கிற வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் நேடோ கூட்டமைப்பின் அமைப்புச் சாத்தினை உருவாக்கினார். நேடோ அமைப்பில் அப்போது 12 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டன. அவை – ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பெர்க், அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து. இதில் ஜெர்மனி இல்லை என்பதைக் கவனிக்கலாம்.
அமைப்புச் சாத்தின் முக்கிய விவரணைகளின்படி, உறுப்பு நாடுகளில் யார்மீது தாக்குதல் நடந்தாலும், மற்ற அனைத்து நாடுகளும் தமது ராணுவத்தை உதவிக்கு அனுப்ப வேண்டும். சோவியத் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையேயான பனிப்போர் ஆரம்பமான காலமும் அதுதான். பனிப்போர் என்றால், மறைமுகமான எதிர்ச் செயல்பாடுகளைச் செய்வது. பனிப்போரைப் பற்றிய சாகசச் செய்திகள் நாள்தோறும் வெளிவந்த வேளையில், சோவியத் ரஷ்யாவைப் பற்றிய அச்சம் அதிகரித்ததனால், பல ஐரோப்பிய நாடுகளும் நேடோவில் சேர ஆர்வமும் அவசரமும் காட்டின.
1952இல் துருக்கி, கிரீஸ் நாடுகள் இணைந்தன. (14)
1955இல் மேற்கு ஜெர்மனி சேர்ந்தது. (15)
1966இல் அதிசயமாக ஃப்ரான்ஸ் நேடோவிலிருந்து விலகியது. (14)
1982இல் ஸ்பெயின் சேர்ந்தது. (15)
1990இல் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனியுடன் இணைந்ததால், ஒருங்கிணைந்த ஜெர்மனியாக நேடோவில் சேர்ந்தது. (15)
1989இல் நேடோ நாடுகளின் சார்பாக, ரஷ்ய அதிபர் கோர்ப்பசேவிடம் இனிமேல் கிழக்கு முகமாக, அதாவது ரஷ்யாவின் எல்லையை நெருங்கிய நாடுகளில் நேடோவை விரிவுபடுத்துவதில்லை என்று வாய்மொழி உறுதி கொடுத்தனர். இதற்காக ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.
1999இல் ஹங்கேரி, போலந்து, செக் குடியரசு இணைந்தன. (18)
2004இல் பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா, ரொமானியா, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா ஆகிய சின்னஞ்சிறு நாடுகள் இணைந்தன. (25). இவை யாவும் ரஷ்யாவின் எல்லையை ஒட்டிய நாடுகள்.
2009இல் அல்பேனியாவும், க்ரோஷியாவும் இணைந்தன. (27)
2009இல் மீண்டும் ஃப்ரான்ஸ் தன்னை நேடோவில் இணைத்து கொண்டது. (28)
2017இல் மான்டி நீக்ரோவும், (29)
2020இல் வடக்கு மாசிடோனியாவும் இணைந்தன (30)
1966இல் ஐரோப்பா முழுவதும் ஏறக்குறைய 400,000 அமெரிக்கத் துருப்புக்கள் பல்வேறு இராணுவ முகாம்களில் இருந்தன.
1991 டிசம்பரில் சோவியத் ரஷ்யா சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்த காலம்வரை, நேடோ அமைப்பு எந்த வெளிப்படையான இராணுவ நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. நேடோ அமைப்பை சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான பனிப்போர் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தது அமெரிக்கா.
கம்யூனிசத்திற்கு எதிராக 1992 முதல் 1995 வரை போஸ்னியாவிலும், 1999இல் யூகோஸ்லாவியாவிலும் நேடோ அமைப்பு இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. ஐநா விதிமுறைகளை மீறி, பெல்கிரேடில் இருந்த சீனத் தூதரகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. நேடோ இராணுவக் கூட்டமைப்பின் பலத்தை உணர்ந்த அமெரிக்கா நேடோவைத் தனக்குச் சாதகமாக எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் யோசிக்க ஆரம்பித்தது.
நேடோ அமைப்பின் செலவுகளுக்காக ஒவ்வொரு உறுப்புநாடும் தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product, GDP) 2 விழுக்காடு தரவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால் பெரும்பாலான நாடுகள் அவற்றைத் தரமுடியவில்லை. இதனால், அமெரிக்காவே பொருளாதார ரீதியாக நேடோவைத் தாங்கியது. நேடோவின் செலவான 1.2 ட்ரில்லியன் டாலரில் (2021இல்) 69 விழுக்காட்டை அமெரிக்காவே கொடுக்கிறது. மீதமுள்ள நாடுகள் எல்லாம் அவரவர் தகுதிக்குத் தக்க அளிக்கிறார்கள். ஆகவே நேடோ அமைப்பில் அமெரிக்கா வைத்ததுதான் சட்டம்.
செப்டம்பர் 2001இல் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க தனது நேடோ கூட்டாளிகளை நேடோவின் விதிமுறைகளைக் குறிப்பிட்டு தனக்கு இராணுவ உதவி கோரியது. நேடோவும் 2001இல் ஆப்கானிஸ்தானில் கூட்டாகத் தாக்குதல் நடத்தியது. இருபது வருடங்களுக்குப் பிறகு 2021இல் வெளியேறும்வரை, அவர்கள் சாதித்திருந்தது அருகிலிருந்த பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடனைச் சுட்டுக்கொன்றது மட்டும்தான். நேடோ நாடுகள், 1949 முதல் 1991வரை, அதாவது நேடோவின் ஒரே எதிரியான சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு பல நாடுகளாகச் சிதறுண்டு உருக்குலையும் வரையில், ஒரு துப்பாக்கிக் குண்டுகூடச் சுட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரேன் தன்னை நேடோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விட்டிருக்கிறது. நேடோ விதிமுறைகளின் படி, உள்ளூரில் போர் நடந்துகொண்டிருக்கும் நாட்டை நேடோவில் இணைக்க முடியாது. மேலும், ஒரு நாட்டை உறுப்பினராக்க மீதமுள்ள அனைத்து நாடுகளும் இசைவு தெரிவுக்க வேண்டும். ஹங்கேரி உக்ரேனைச் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்திருந்தது, ஆகவே போர் நடப்பதாலும் உறுப்பினர் எதிர்ப்பு நீடிப்பதாலும் உக்ரேனை நேடோ அமைப்பிற்குள் இணைக்கும் சாத்தியமும் இப்போது இல்லை.
இனி சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு அல்லது சோவியத் ரஷ்யா என்னும் கம்யூனிசப் பேரரசு வீழ்ந்த கதையில் நமக்குத் தேவையான பகுதியைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.
சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பின் (USSR) சிதறல்
சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு 1922இல் உதயமானது. விளாடிமிர் லெனின் தலைமையில் உருவான கூட்டமைப்பு கம்யூனிச சோசலிசத்தைப் பின்பற்றி தனது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. லெனினுக்குப் பின்னர் 1924இல் ஜோசஃப் ஸ்டாலின் தலைமைக்கு வந்தார். அவர் பல புதிய பொருளாதார செயல்பாடுகளைக் கொண்டுவந்தார். தொழிற்சாலைகள் பெருகின. அதேசமயம் தன் எதிரிகளைத் தயவு தாட்சணியமின்றி ஒழித்துக் கட்டினார். அதனால் அவருக்கு எதிரிகள் பெருகினர். பரபரப்பான அரசியல் சூழலில் 1953இல் ஸ்டாலின் மறைந்தார்.
ஜோசஃப் ஸ்டாலினின் மறைவிற்குப் பிறகு பதவியேற்ற நிகிதா குருசேவ், ஸ்டாலின் கொண்டுவந்த அரசியல் திருத்தங்களையெல்லாம் மாற்ற ஆரம்பித்தார். குழப்பம், பொருளாதாரச் சிக்கல்கள் என்று பொருளாதார அரசியல் சூறாவளிக்குள் சிக்க ஆரம்பித்தது, சோவியத் கூட்டமைப்பு.
இதற்கிடையில், பனிப்போரின் ஒரு செயல்பாடாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அரசுக்குத் தனது ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் செய்ய ஆரம்பித்தது அமெரிக்கா. இதன் வழியாக ரஷ்யாவுக்குத் தெற்கிலிருந்து தொல்லைகொடுக்க முடிவுசெய்தது. தெற்குப் பகுதியிலும், ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி உள்நாட்டுக் கலவரம் மூட்டுவது திட்டம். இதனை முறியடிக்க 1979இல் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது. அமெரிக்கர்களால், கொரில்லா முறை தாக்குதலில் பயிற்சி பெற்றிருந்த ஆப்கானியர்களை ரஷ்யப் படைகளால் சமாளிக்க முடியவில்லை. அப்படி ஒரு படையை ஆப்கானிஸ்தானில் உருவாக்க அரபு மொழியும் ஆங்கிலமும் தெரிந்த செல்வந்தரான ஒரு பிரபலம் தேவைப்பட்டார். அப்படி அடையாளம் காணப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன்.
சவுதி அரேபியாவை 1985இல் உற்பத்தியைக் கூட்டி பெட்ரோல் விலையைக் குறைத்து விற்கச் சொல்லி அமெரிக்கா உத்தரவு போட, எண்ணெய் விலை $10க்கு குறைந்தது. சந்தையில் குறைந்த விலையில் விற்பதால் நட்டத்திற்கு உள்ளானது ரஷ்யா. ஒரு பக்கம் போர்ச் செலவு, மறுபக்கம் வருமானம் குறைவு. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடி அதிகமானது. சோவியத் தனது படைகளை 1988இல் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொண்டது. அப்போது அமெரிக்கா ஒசாமா பின் லேடனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.
பின்னர் 1985இல் நடந்த தேர்தலில் மிக்கேல் கோர்பசேவ் சோவியத் ரஷ்யாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டைப் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீட்பதாகக் கூறித்தான் ஆட்சியைப் பிடித்தார். க்ளாஸ்னாஸ்ட், பெரெஸ்த்ரோய்கா என்கிற இரு மாற்றங்களைக் கொண்டுவந்தார். அவை முறையே பொருளாதார, அரசியலமைப்பு மாற்றங்கள். மாநிலங்களிலிருந்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிதிக் கோரிக்கைகளை சமாளிக்கும் பொருட்டு அவற்றுக்கு தாங்களே தம் பகுதிக்கு தன்னிச்சையான முடிவெடுக்கும்படியான கூடுதல் அதிகாரம் கொடுப்பது என்று 1989இல் முடிவெடுத்தார். இது ஃப்ராங்க் சினாட்ராவின் My Way என்கிற பாட்டில் வரும் கருத்தை ஒட்டிய கொள்கை என்பதால், அப்போதைய ரஷ்ய வெளியுறவுத்துறை பேச்சாளர் சினாட்ரன் கொள்கை என்று குறிப்பிட்டார். .
‘சினாட்ரன்’ கொள்கையின்படி மாநிலங்கள் விரும்பினால் அம்மாநில மக்களிடம் பெரும்பான்மை கோரித் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். அதாவது கம்யூனிசத்திற்குள் ஜனநாயகம். இதுதான் சோவியத் ரஷ்யாவிற்கு இறுதிமணி அடிக்கப் போகிறது என்று தெரியாமல் இப்படி ஒரு கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது அன்னிய நாடுகளின் தூண்டுதலால் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தவறான கொள்கை முடிவா என்பதில் இன்றுவரை கருத்து மாச்சரியங்கள் உள்ளன. இதில் குறிப்பாக, வறுமையில் உழன்ற கிழக்கு ஜெர்மனி மக்களை, ‘நீங்களே உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னதுபோல் ஆகிவிட்டது. நவம்பர் 1989இல் கிழக்கு ஜெர்மனியில் மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள், பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 1990இல் மேற்கு ஜெர்மனியுடன் கிழக்கு ஜெர்மனி அதிகாரபூர்வமாக இணைந்தது. இதற்கிடையில் மார்ச் 1990இல் லித்துவேனியா சுதந்திர நாடாக விரும்புவதாக அறிவித்து மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி, தன்னை சோவியத் ரஷ்யாவின் தன்னாட்சிப் பகுதியாக அறிவித்துக் கொண்டது.
கோர்ப்பசேவ் கொண்டுவந்த மாற்றங்களில் இன்னொன்று, மேலவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மேலவை அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதான பொறுப்புகளை வைத்திருந்தது. அதன் தலைவராக கோர்ப்பசேவ் இருந்து வந்தார். பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கோர்ப்பசேவின் மேல் கோபமாக இருந்தனர். ஜனவரி 1990இல் அந்தப் பதவிக்கு போரிஸ் எல்ட்சின் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனி, லித்துவேனியாவைப் பின்பற்றி ஜூன் 1991இல் பல மாநிலங்களும் யூனியனுக்குள் இருப்பதா வேண்டாமா என்று வாக்கு கோர வேண்டும் என்று கோரிக்கை விட்டனர். எல்ட்சினுக்கு இதை அனுமதிப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை.
நிலைமை மோசமாகப் போவதைக் கண்டு, ஆகஸ்ட் 1991இல் கோர்ப்பசேவுக்கு எதிராக கேஜிபி உட்பட்ட சில அமைப்புகள் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் இறங்கின. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 25 டிசம்பர் 1991இல் ஒரு வழியாக கோர்பசேவ் பதவி விலகினார். அதே சமயம் 1922இல் உருவான சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு அன்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது. கூட்டமைப்பில் இருந்த 15 உறுப்பு நாடுகளும் தனித்தனி நாடாகின. அந்த நாடுகளாவன: ரஷ்யா, உக்ரேன், பெலாருஸ், உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், ஜார்ஜியா, அஸெர்பைஜான், லித்துவேனியா, மால்டோவா, லாட்வியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆர்மீனியா, துர்க்மெனிஸ்தான், எஸ்டோனியா.
அடுத்ததாக, உக்ரேனில் 2014இல் நடந்த யூரோமைதான் போராட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். இது உக்ரேன் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை.
யூரோமைதான் போராட்டங்கள்
டிசம்பர் 1991இல் சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு உதிர்ந்ததும் தனி நாடாய் மாறிய உக்ரேனுக்கு அப்போதே கிரைமியா பிரச்னையாக இருந்தது. உக்ரேனின் ஆட்சிக்குள் வரவிரும்பாத கிரைமியா தனிநாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. அது மட்டுமின்றி அப்போது பிரிந்த 15 நாடுகளில் ஆறு பகுதிகள் தனி நாடுகளாக தம்மை அறிவித்துக்கொண்டன. அவை: ஜார்ஜியாவில் அப்காஸியா மற்றும் தெற்கு ஒசேடியா, அசர்பைஜானில் அர்ட்ஸாக், உக்ரேனில் டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க், மால்டோவாவில் ட்ரான்ஸிட்ரியா. இவற்றில் அதிர்ஷ்டம் கிட்டியது கிரைமியாவிற்கு மட்டும்தான். உக்ரேன் சுதந்திர கிரைமியாவின் தன்னாட்சியை ஏற்றுக்கொண்டது, ஆனால் அது உக்ரேனின் பகுதி என்று சாத்திட்டது.
அப்போது கிரைமியாவின் ஸ்வெஸ்டபோல் துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படை முகமை இருந்தது. உக்ரேனுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி அந்த ரஷ்ய கடற்படை முகாம் தொடர்ந்து இருந்து வந்தது. உக்ரேன் அரசு, 1995இல், கிரைமியாவின் “சுதந்திர கிரைமியா (Republic of Crimea)” என்கிற அந்தஸ்தை “தன்னாட்சிக்குட்பட்ட சுதந்திர கிரைமியா (Autonomous Republic of Crimea)” என்று மாற்றியது. ஆக உக்ரேன் தனி நாடாக ஆனதிலிருந்தே கிரைமியா தன்னாட்சிப் பகுதியாக இருந்து வருகிறது. கிரைமியா 2014இல் ஒரு நேரடி வாக்கெடுப்பை (referendum) நடத்தி உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது யூரோமைதான் போராட்டங்கள்.
அப்படி என்னதான் யூரோ மைதானில் நடந்தது?
-தொடரும்