தி சிராங்கூன் டைம்ஸ்
சங் நீல உத்தமா: தொன்மத்திலிருந்து வரலாற்றைப் பிரித்தல்

சங் நீல உத்தமா: தொன்மத்திலிருந்து வரலாற்றைப் பிரித்தல்

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, மன்னர்களின் வரலாறு என்றழைக்கப்படும், செஜாரா மெலாயு (Sejarah Melayu) சிங்கப்பூரர்களின் கற்பனையிலும் கூட்டுநினைவிலும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அந்நூலின் முதல் ஆறு அத்தியாயங்கள், 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 14ஆம் நூற்றாண்டுவரை, சிங்கப்பூரைத் தொடக்ககால நவீன மலாய் உலகில் பொருத்திக் காட்டுகின்றன. மேலும், சமகால மலாக்கா, ஜொகூர் அரசுகள் முதல் ஜாவாவின் மஜபாஹித் பேரரசு, சயாமின் ஆயுத்தயாவுடனும் சிங்கப்பூரை அந்நூல் இணைக்கிறது.

அந்நூல் மாசிடோனிய மாவீரன் அலெக்சாண்டர், தென்னிந்தியச் சோழப் பேரரசின் ராஜா சூலான் (Raja Chulan), பலேம்பாங்கைச் (Palembang) சேர்ந்த ஶ்ரீவிஜய இளவரசன் சங் நீல உத்தமா, அதீத சக்திகளைப் பெற்றிருந்த சிங்கபுராவின் பயில்வான் பாடாங் (Badang) என்று பல பாத்திரங்களைக் குறிப்பிடுகிறது. அவர்களுள் துமாசிக் (Temasek) தீவில் சிங்கபுரா நகரை  1299ஐ ஒட்டி உருவாக்கிய தொன்ம இளவரசன் சங் நீல உத்தமாதான் சிங்கப்பூரர்களின் கற்பனையில் பெரிதாக எழும் பாத்திரம். சங் நீல உத்தமாவின் வழித்தோன்றல்களால் மலாக்கா நிர்மாணிக்கப்படுவதற்கு சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே சிங்கபுரா நிறுவப்பட்டதாகவும் அந்நூல் சொல்கிறது.

சிங்கப்பூர் நிறுவப்பட்டது குறித்த அக்குறிப்பிற்கும் சங் நீல உத்தமா ஆற்றிய பங்கிற்கும் வேறெந்த வரலாற்று ஆவணங்களோ தடயங்களோ இல்லாத நிலையில், செஜாரா மெலாயுவின் குறிப்புகள் வரலாற்றுக்கும் தொன்மத்திற்கும் இடையில் ஒரு தெளிவற்ற இடத்தில் நிற்கின்றன. இருப்பினும், சங் நீல உத்தமாவை சிங்கபுராவை நிர்மாணித்த ஒரு தொன்ம பாத்திரத்திற்கும் மேலாகக் கருதவேண்டியுள்ளது. ஏனெனில், “சங் நீல உத்தமா” பாத்திரம் மலாக்கா சுல்தானக (1400-1511) ஆட்சிப் பரம்பரையின் தொடக்கத்தை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மலாக்கா அரசவம்சத்து நீட்சி, அதிகாரபூர்வ தன்மை, அரசியல் ஆளுமை, செல்வாக்கு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் விளங்கியுள்ளது.  

சுருக்கமாகச் சொன்னால், மலாய் வட்டார ஆதித்தொன்மங்களின் மகிமைவாய்ந்த, மூடுண்ட பாத்திரமாக இருப்பினும், 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான, மலாக்கா நீரிணை வட்டார வரலாற்று உரையாடலைச் சாத்தியப்படுத்துவதால் அப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

செஜாரா மெலாயுவின் 30 விதமான வடிவங்கள் இதுவரை ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றாலும் இரு முக்கியப் பிரதிகளைக்கொண்டு சங் நீல உத்தமாவின் பங்கை நாம் ஆராய்வோம். முதலாவது ஜான் லெய்டனின் (John Leyden) வடிவம். ஜாவியிலிருந்து ஆங்கிலத்திற்கு 1810ஐ ஒட்டி அவரால் மொழிபெயர்க்கப்பட்டு 1821இல் அவரது மறைவுக்குப்பின் வெளியிடப்பட்ட நூலது. இரண்டாவது, ராஃபிள்சின் 18ஆம் கைப்பிரதி. தொடக்ககால வடிவத்திலிருந்து (1612 காலகட்ட) அனேகமாக ராஃபிள்சுக்காக 1816இல் படியெடுக்கப்பட்டது. இவ்விரு வடிவங்களிலும் மேலோட்டமான விவரிப்புகள் ஒரேமாதிரியாக இருந்தாலும் சங் நீல உத்தமாவைப் பற்றிய அவற்றின் கதையாடல்களில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. 

யார் அந்த சங் நீல உத்தமா?

மாசிடோனிய மாவீரன் அலெக்ஸான்டர் (இஸ்கந்தர் ஷா எனவும், சிக்கந்தர் ஸுல்கர்னெய்னி எனவும் அறியப்படுகிறார்) இந்தியத் துணைக்கண்டத்திற்குப் படையெடுத்துச் செல்வதிலிருந்து செஜாரா மெலாயு ஆரம்பிக்கிறது. அலெக்ஸாண்டருடன் சமாதானமாகச் சென்ற அரசுகளில் ஒன்றின் இளவரசியை அவர் மணந்தார், அவ்வழியில் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் வந்தனர். அது தென்னிந்தியச் சோழப் பேரரசின் அரசன் ராஜா சூலான் வரை நீண்டது. 

செஜாரா மெலாயுவின்படி, ராஜா சூலான் தன் ராணுவ நடவடிக்கையின் பகுதியாக வங்காள விரிகுடாவைக் கடந்து மலாயத் தீபகற்பத்தின் தென்முனையை வந்தடைகிறார். அங்கு கடலுக்குள் சென்ற ராஜா சூலான், கடல்வாசிகளின் இளவரசியை மணம்புரிகிறார். அவர்களுக்கு முன்று மகன்கள். அம்மூவரும் பலேம்பாங்கிலுள்ள செகுந்த்தாங் மலையில் (Bukit Seguntang) சொர்க்கத்திலிருந்து வந்திறங்கியதாகக் கதை. இந்த இடத்தில்தான் லெய்டன், ராஃபிள்ஸ் இருவரின் செஜாரா மெலாயு பதிப்புகளும் வேறுபடுகின்றன. 

லெய்டன் பதிப்பின்படி, தன்னை ராஜா என்று அடையாளப்படுத்திய மூன்று இளம் இளவரசர்களில் ஒருவரான பிச்சித்ரம் ஷா, சங் சபுர்பா என்ற பட்டப்பெயரைப் பெற்றார். முந்தைய உள்ளூர் ஆட்சியாளரான டெமாங் லேபார் டாவுன் (Demang Lebar Daun) பதவி விலகியதைத் தொடர்ந்து அவர் பலேம்பாங்கின் ஆட்சியாளரானார். சங் சபுர்பா, டாவுனின் மகளைத் திருமணம் செய்துகொண்டு தன்னைச் சட்டபூர்வ ஆட்சியாளர் என்பதை மேலுறுதி செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் சங் நீல உத்தமாவும் ஒருவர். தற்போது பிந்த்தான் (Bintan) என்றழைக்கப்படும் பெந்த்தான் (Bentan) இளவரசியை சங் நீல உத்தமா மணம் புரிந்து அதன் ராஜாவானார். அதன்பிறகு சிங்கபுராவைக் கண்டடைந்தார். அதனைச் சிறப்பிக்கும் பொருட்டு, ஶ்ரீ த்ரி புவானா (Sri Tri Buana) என்கிற பட்டம் சூட்டப்பட்டது.

ராஃபிள்ஸ் 18ஆம் கைப்பிரதியின்படி, பிச்சித்ரம், பலுடதானி, நீலதானம் ஆகிய ராஜா சூலானின் மூன்று வாரிசுகளும், மலாய் அரசாட்சியிலிருந்த பல்வேறு பகுதிகளுக்கு அரசர்களாக நியமிக்கப்பட்டனர். மூத்தவரான் பிச்சித்ரம் மேற்கு சுமத்திராவின் மினாங்க்காபாவ் (Minangkabau) பகுதிக்கு அரசரானார். இரண்டாவது இளவரசர், பலுடதானி, மேற்குக் கலிமந்தானில் தஞ்சோங் புராவிற்கு சங் மனியாகா என்கிற பட்டத்துடன் அரசராகிறார். ஆகஇளைய இளவரசரான, நீலதானம், சங் உத்தமா பட்டத்துடன் தென்கிழக்கு சுமத்திராவின் பலேம்பாங்கிலேயே அரசராகிறார். 

நீலதானம் பலெம்பாங்கில் முடிதுறந்த அரசரான டெமாங் லேபார் டாவுனின் மகளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு ஸ்ரீ த்ரி புவானா  என்கிற பட்டமும் சூட்டப்படுகிறது. அவர் பிறகு பெந்த்தானுக்குப் பயணமாகி அங்கிருந்து துமாசிக்கை அடைந்து துறைமுக நகரான சிங்கபுராவை  உருவாக்கினார்.

சாராம்சமாகச் சொன்னால், லெய்டனின் பதிப்பில், சங் நீல உத்தமா ராஜா சூலானின் மகனாகிய சங் சபுர்பாவிற்கும் டெமாங் லேபார் டாவுனின் மகளுக்கும் பிறந்தவன். ராஃபிள்ஸ் பிரதியின்படி சங் நீல உத்தமா ராஜா சூலானின் மகன்தான் ஆனால் சங் சபுர்பா, சங் உத்தமாவின் சகோதரர். ராஃபிள்ஸின் குறிப்பில் சங் உத்தமாதான் டெமாங் லேபார் டாவுனின் மகளை மணந்தவர். 

சங் நீல உத்தமாவும் மலாக்கா மன்னர் பரம்பரையும்

செஜாரா மெலாயு தொகுதியில் சங் நீல உத்தமாவின் முதன்மையான பங்களிப்புகளுள் ஒன்று மலாய் உலகின் முக்கியப் பாரம்பரியங்களை பிறப்புவரிசையின் அடிப்படையில் இணைப்பதாகும். 

முதல் இணைப்பு தென்னிந்தியாவின் சோழ ஆட்சியாளர்களுக்கு சங் நீல உத்தமாவின் பரம்பரைமூலம் ராஜா சூலன் வழியாக ஏற்படுத்தப்பட்டது. இது மலாக்கா அரச வாரிசுகளுக்கும் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் இணைப்பை உருவாக்குகிறது. பொ.ஆ.மு. முதலாயிரத்தின் பிற்பகுதியிலிருந்தே இந்தியாவின் இப்பகுதிக்கும் மலாய் உலகுக்கும் தொடர்ச்சியான, நெருக்கமான தொடர்புகள் இருந்தன. 

இரண்டாவது இணைப்பு, ராஜா சூலானின் வம்சாவளி. அது மாவீரன் அலெக்சாண்டர்வரை நீண்டுள்ளது. மேலும், இது மலாக்கா மன்னர்களின் வம்சாவளியை காந்தாரம், கிரேக்கம் என மேற்கு நோக்கி விரிவுபடுத்துகிறது. மூன்றாவதாக இப்பகுதியை ஆண்டுவந்த மலாக்கா சுல்தானக வரலாறு மலாய்த் தீபகற்பத்தின் தென்முனையிலிருந்து தொடங்கியதாகக் குறிப்பிடுவது.  

இந்த மூன்று நிலப்பரப்புகளும், இஸ்லாத்திற்கு முன்பான மலாய் உலகத்தின் மதங்களைப் பிரதிநிதிக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தில் குறிப்பாக சோழர்காலத்தில் இந்துமதம் எழுச்சி கண்டபோது, கிரேக்க, காந்தாரப் பகுதிகள் புத்தமதம் பரவுவதற்கான மையமாக இருந்தன. மலாய் வட்டார நெய்தல் மக்கள் கடலுடன் இணைந்த இயற்கை வழிபாட்டு நம்பிக்கைகளைக் கடைப்பிடித்தனர். இந்த மூன்று மத, பண்பாட்டு ரீதியிலான தாக்கங்கள் மலாக்கா மன்னர் பரம்பரையின் அடிப்படையை உருவாக்கியதாக செஜாரா மெலாயு கூறுகிறது. இது தொடர்பாகவும் லெய்டன், ராஃபிள்ஸ் பதிப்புகள் வெவ்வேறு விவரிப்புகளை அளிக்கின்றன.

லெய்டன் பதிப்பின்படி சங் சபுர்பாதான் பரம்பரையின் முதன்மைத் தலைமுறையாகக் குறிப்பிடப்படுகிறார். பலேம்பாங்கின் ஆட்சியாளரான டெமாங் லேபார் டாவுனின் மகளுடன் சங் சபுர்பாவின் திருமணம், ஆண்டலாஸில் (சுமத்ராவின் தாழ்நிலங்கள்) அமைந்துள்ள நிலம்சார்ந்த மலாய்க்காரர்களுடன் சோழ அரச பரம்பரையை இணைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சங் சபுர்பாவின் அடுத்த தலைமுறை, அவர் பெந்த்தானின் இளவரசியை மணமுடித்ததிலும் பின்னர் அவரது மகள்களில் ஒருவர் சீன ஆட்சியாளரை மணந்ததிலும் விரிவடைகிறது. சங் சபுர்பா இறுதியில் பெந்த்தானை விட்டு வெளியேறி சுமத்திராவுக்குத் திரும்பி சுமத்திராவின் மலைப்பகுதிகளில் உள்ள மினங்க்காபாவின் ஆட்சியாளரானார்.

லெய்டன் பதிப்பின்படி மலாக்கா அரசகுடும்ப அதிகார மையமாக சுமத்திரா பகுதிகளையே காட்டுகிறது. அதாவது முவாரா ஜாம்பி ஆறு, பலேம்பாங், ரியாவ்-லிங்கா தீவுக்கூட்டம், மினாங்க்காபாவ் மலைப்பகுதிகள் ஆகியவை. துமாசிக் அல்லது சிங்கப்பூரோ அதன்பின் மலாக்காவோ அந்த வரலாற்றுக் கதையாடலில் முதலில் வெளிப்பகுதிகளாக இருந்து பின்னரே மையத்துக்கு வந்தன. 

இதிலிருந்து மாறுபாடாக, ராஃபிள்ஸ் கைப்பிரதியின்படி, சங் உத்தமாவுடன், அவரது சகோதரர்களான சங் சபுர்பாவும் சங் மனியகாவும் அரச பரம்பரையின் முதன்மைப் பாத்திரங்களாகச் சுட்டப்படுகின்றனர். இருப்பினும், அரச பரம்பரையின் அனைத்து அடுத்தடுத்த இணைப்புகளும் சங் உத்தமாவின் தலைமுறையில் மட்டுமே நிகழ்ந்தன. தாழ்நிலக் கடற்கரைப்பகுதிச் சுமத்திராவின் நிலம்சார் மலாய்க்காரர்களுடன் அவரது பரம்பரையின் இணைப்பு, பலேம்பாங்கின் ஆட்சியாளர் மகளை அவர் திருமணம் செய்துகொண்டதன் மூலம் குறிப்பிடப்படுகிறது.

பிறகு, சங் உத்தமா முதலில் பெந்த்தானில் தங்கி அதன் அரசியான வான் ஶ்ரீ பெனியானால் (Wan Sri Benian) தத்தெடுக்கப்பட்டார். பிற்பாடு துமாசிக்கை அடைந்து துறைமுக நகரான சிங்கபுராவை உருவாக்கினார். அவரின் இரு மகன்களும் பெந்த்தான் அரசியின் பேத்திகளை மணந்தபோதுதான் பெந்த்தான் கடல்வாசி சமூகம் (orang laut) அரச பரம்பரையுடன் இணைகின்றனர். அவ்வாறாக மலாக்கா மன்னர் பரம்பரை, பலேம்பாங், ரியாவ் தீவுக்கூட்டம், சிங்கப்பூர்த் தீவைச்சுற்றி மையப்படுத்தியிருந்ததாக ராஃபிள்ஸின் செஜாரா மெலாயு பிரதி கூறுகிறது. 

செஜாரா மெலாயுவின் இவ்விரு பதிப்புகளிலும் ஏன் மலாக்கா மன்னர்களின் அதிகாரமையம் குறித்து இவ்வளவு வேறுபாடு? 

லெய்டனின் படியெடுப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பினாங்கைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் இப்ராகிம் சந்து என்பவர் வாய்மொழியாக சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை எனக் கல்வியாளர்கள் வர்ஜினா, மைக்கல் ஹூக்கர் இருவரும் 2001இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இப்ராகிம் சந்து மலாக்காவில் சேகரித்த பிரதியைக்கொண்டு   1810இல் கல்கத்தாவில் லெய்டனுக்கு வாய்மொழியாகச் சொன்னதாகவும் அக்கட்டுரை கூறுகிறது. இந்தப் பதிப்பு, குறைந்தபட்சம் மன்னர் பரம்பரை அடிப்படையில், வில்லியம் (William Girdlestone Shellabear) என்கிற ஊழியக்காரர், 1896இல் ‘ரூமி’யில் (ரோமன் எழுத்துருவில் அமைந்த மலாய்மொழி) மொழிபெயர்த்ததைப் போன்றிருந்தது. 

மறுபுறம், ராஃபிள்சின் 18ஆம் கைப்பிரதி 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலாக்காவில் எழுதப்பட்ட ஒரு பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. அதைக் கணக்கிற்கொண்டு பார்க்கும்போது, லெய்டனின் பதிப்பு ராஃபிள்ஸ் பிரதியின் பிற்கால வாய்மொழி விளக்கம் ஒன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்விரு பதிப்புகளும் இருவேறு காலத்து மலாக்கா நீரிணைப் பகுதியின் அரசியல், பண்பாட்டு அக்கறைகளைப் பிரதிபலிக்கின்றன. 

அரசரின் புகழும் இறையாண்மையும்

இறையாண்மையை நிலைநாட்டுவதிலும் சங் நீல உத்தமா முக்கியப் பங்கு வகிக்கிறார், ஆனால், மீண்டும் லெய்டன், ராஃபிள்ஸ் பதிப்புகள் இவ்விஷயத்தில் மாறுபடுகின்றன. ராஃபிள்ஸ் பதிப்பின்படி, செகுந்த்தாங் மலையில் (Bukit Seguntang) வசித்த வான் எம்போக் மற்றும் வான் மாலினி சகோதரிகள் வளர்த்துவந்த பசுவின் வாந்தியில் பாத் (Bath) என்கிற பூசாரி தோன்றியதாகக் கூறப்படுகிறது. சங் நீல உத்தமாவே சுவர்ணபூமி முழுவதும் ஆளப்பிறந்தவர் என்றும், “மூவுலக்கும் அரசர்” எனப் பொருள்படும் ஸ்ரீ த்ரி புவானா என்கிற பட்டத்தையும் பாத் அளிக்கிறார்.  

“சங் உத்தமா” (மேன்மக்களைக் குறிக்கும் மலாய் அடைமொழி) என்னும் சிறப்புப் பட்டம் உள்ளூர் இறையாண்மையை அளிக்கிறது. அதைவிட, “ஸ்ரீ த்ரி புவானா” (புத்தமத மேன்மக்களைக் குறிக்கும் சமஸ்கிருத அடைமொழி) என்னும் சிறப்புப் பட்டம் உலகளாவிய இறையாண்மையை அளிக்கிறது. லெய்டன் பதிப்பில், ராஜா சூலானின் மக்கள் மூவரில் மூத்தவரான பிச்சித்ரம் ஷா மட்டுமே தன்னை அரசராக அறிவித்துக்கொண்டார். செகுந்த்தாங் மலையில் வசித்த சகோதரிகள் அவருக்கு ஸ்ரீ சங் சபுர்பா பட்டம் கொடுத்தனர். பிச்சித்ரம் ஷா பயணித்த காளை வாந்தியெடுத்ததில் தோன்றிய பாத், சங் சபுர்பா “த்ரிமாரி த்ரி புவானா” என்ற பட்டத்தை அளித்தார். 

இதைக் கேள்விப்பட்ட அண்டை அரசர்கள் சங் சபுர்பாவைக் காண வந்தனர். அப்படி வந்த பலேம்பாங் அரசரான டெமாங் லேபார் டாவுனின் மகளை சங் சபுர்பா திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு பலேம்பாங்கின் ஆட்சியாளராகிறார். பிறகு வேறொரு குடியேற்றத்தை நிறுவ தன் பரிவாரங்களுடன் புறப்பட்டார். அப்படிச் செல்கையில் பெந்த்தான் அரசி தனது மகளான வான் ஸ்ரீ பெனியை சங் சபுர்பாவின் மகனாகிய சங் நீல உத்தமாவிற்குத் திருமணம் செய்துவைத்தார். அதன் பிறகு சங் நீல உத்தமா பெந்த்தானின் அரசரானார். 

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற சங் நீல உத்தமா, தொலைவில் கடல் நடுவில் கண்ட வெண்திட்டைக் கண்டு அங்கே சென்றடைந்தார். அந்தத் தீவில் ஒரு குடியேற்றத்தை அமைத்து, சிங்கபுரா என்று பெயரிட்டு ஆட்சிசெய்ய முடிவெடுத்தார். ஏற்கனவே சங் நீல உத்தமாவின் தந்தையான சங் சபுர்பாவிற்குத் த்ரிமாரி த்ரிபுவானா பட்டமளித்த பாத் என்பவர், இம்முறை சங் நீல உத்தமாவிற்கு ஸ்ரீ த்ரி புவானா என்று பட்டமளித்துப் புகழ்பாடினார்.

இப்படியாக இவ்விரண்டு செஜாரா மெலாயு பதிப்புகளும் கதையாடல் விவரங்களில் வேறுபட்டிருந்தாலும் இரு முக்கியமான செய்திகளைச் சுட்டிக்காட்டுகின்றன. முதலாவது, இரு பதிப்புகளிலும் சங் நீல உத்தமா செல்வாக்கில் உயர்நிலை அடைந்ததை வழிமொழியும் பட்டங்கள் அளிப்பது இடம்பெற்றுள்ளன. அதன்வழியாக சங் நீல உத்தமா என்பவர் மிகவும் முக்கியமான ஒருவர் என்பதைக் காட்டுகின்றன. இரண்டாவது, ஏற்கெனவே ஆளப்படும் நிலப்பரப்பில் புதிய அதிகாரம் அமையும்போது மட்டுமின்றி ஒரு புதிய நிலப்பரப்பில் ஆட்சி அமைக்கப்படும்போதும் அவ்வாறு பட்டங்கள் அளிப்பது உண்டு. அவ்வகையில், ஒரு புதிய, இறையாண்மையுள்ள, அரசியல் வசீகரமிக்க மலாய் உலகை விளக்க ஏதுவாகிறது.

மலாக்கா மன்னராட்சியின் மாற்று வரலாறு

முன்நவீனகால மலாய் வரலாற்று உருவாக்கவியலில், மலாக்கா அரசுகளின் காலத்துக்கு முந்தைய காலத்தின் இடம் குறித்து (செஜாரா மெலாயு விவரிப்பின்படி) கல்வியாளரிடையே நிறைய விவாதங்கள் உண்டு. மலாக்கா ஆட்சியாளர்களுக்கு ஒரு பரம்பரையை நிறுவ அக்காலம் குறித்த பதிவுகள் முற்படுகின்றன என்பதில் பொதுவான கருத்திணக்கம் நிலவுகிறது. வாய்மொழிமரபின் அடிப்படையிலான அப்பிரதிகள் வரலாற்றுக் காலத்துக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கும் இடையில் ஒரு பாதித்தொன்மப் பாலமாக விளங்குகின்றன. செஜாரா மெலாயுவை ஓர் வரலாற்றுப் பிரதியாகக் கணக்கிற்கொள்ள அதில்வரும் மலாக்கா அரசுகளின் காலத்துக்கு முந்தைய விவரிப்புகளை வேறு ஆதாரங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க இயலவில்லை. சிங்கபுரா காலமும் அக்காலகட்டத்தைச் சேர்ந்ததே. 

இதற்கு நேர்மாறாக, போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பான காலகட்டமான (சுமார் 1400 முதல் 1511 வரை) மலாக்கா சுல்தானகக் காலத்தைப் பற்றி சமகால சீன, ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நூல்களால் உறுதிப்படுத்த முடிகிறது.  வாங் தாயுவன் (Wang Dayuan) என்கிற சீனப் பயணி 1349இல் எழுதிய டாவொயி ஷிலு (Daoyi Shilue) என்கிற பிரதி சிங்கபுராவைக் குறிப்பிடுகிறது. லோங்யாமென் (கடல்நாகப் பற்கள் நீரிணை) ஆட்சியாளர் அணிந்திருந்த ஒருவகை கிரீடம் பற்றி அதில் குறிப்பு வருகிறது. அது இன்றைய கெப்பல் துறைமுகம் இருக்கும் இடத்தைக் குறிக்கும். தொல்பொருள் ஆதாரம் உள்ளது என்றாலும் அதைத் திட்டவட்டமாக செஜாரா மெலாயுவில் வரும் சிங்கபுரா காலத்துடன் இணைக்கவியலாது. 

போர்ச்சுக்கீசிய மருத்துவர், காலக்குறிப்பாளர் பிரெஸ் (Tome Pires) எழுதிய சுமா ஓரியண்டல் (Suma Oriental, 1513) பதிவின்படி, பலெம்பாங்கைச் சேர்ந்த இளவரசர் பரமேஸ்வரா என்பவர் ஜாவானிய ஆதிக்கத்தை எதிர்க்கும் முயற்சியில் தோல்வியுற்று நாட்டை விட்டுத் தப்பியோடி துமாசிக் தீவில் தஞ்சமடைந்தார். அங்கு உள்ளூர் ஆட்சியாளரைக் கொன்றுவிட்டு சிங்கபுராவின் அரசரானார். சில வருடங்களுக்குப்பின் சயாமியப் படைகள் துமாசிக் அரசரின் கொலைக்குப் பழிவாங்க வரும் செய்தி அறிந்து மீண்டும் தப்பித்து முவார் வழியாக மலாக்கா சென்றடைந்தார். அங்கு தம்மை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்ட பரமேஸ்வரா, இஸ்கந்தர் ஷா எனப் பெயரை மாற்றிக்கொண்டார். 

போர்ச்சுக்கீசியப் பதிவுகளில் குறிப்பிடப்படும் இந்தப் பரமேஸ்வரா என்பவர்தான் செஜாரா மெலாயுவில் குறிப்பிடப்படும் இஸ்கந்தர் ஷா என்றும், சங் நீல உத்தமாவின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ஸ்ரீதிரிபுவனா என்றும், ஜாவானியப் படைகளிடம் தோற்று ஓடிய சிங்கபுராவின் ஐந்தாவதும் கடைசி ஆட்சியாளரும் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். 

வேறு சில அறிஞர்கள், மலாக்கா உருவானதன் பின்னணியிலுள்ள பரமேஸ்வராவின் கொலைபாதகச் செயலை மறைப்பதற்கே துமாசிக்கையும் துமாசிக்குக்கு முந்தைய கதையாடல்களையும் செஜாரா மெலாயுவின் ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டார் என வாதிடுகின்றனர்.  பரமேஸ்வரா என்கிற அடைமொழி அரச குலமல்லாத அரசர்களுக்கு அக்காலத்தில் சூட்டப்பட்டதால், அரசகுலப் பாரம்பரியத்தை முன் நிறுத்துவதற்காகவும் இந்த மாற்றுவரலாறு எழுந்திருக்கலாம். 

இதன் காரணமாக மலாக்கா அரசகுடும்பப் பெருமையை உயர்த்திக் காட்ட சிங்கபுராவை ஆண்ட வம்சம், ஶ்ரீ த்ரி புவானாவின் தெய்வீக வழிவந்த வம்சம் எனக் காட்டவேண்டியிருந்தது. எந்தக் களங்கமுற்ற அரசவம்சம் என்பதை நிறுவவே தென்கிழக்காசியாவின் கடற்புறப் பெருமைகளும், சோழப் பேரரசின் இந்துமதப் பின்புலமும், காந்தார புத்தமதப் பின்புலமும் தொன்மையான  பழம்பெருமைகளாகக் காட்டப்படுகின்றன. 

அந்தவகையில், சங் நீல உத்தமாவை, மலாக்கா சுல்தானக உருவாக்கத்திற்கு முந்தைய காலத்தில் ஒரு பாத்திரமாக வடிவமைத்திருப்பது தொன்மைவாய்ந்த, பாரம்பரியப் பெருமைமிக்க, வசீகரிக்கும் அரசகுலப் பின்புலத்தை நிலைநிறுத்தும் நங்கூரமாக உதவுகிறது. ஆகவே சங் நீல உத்தமா மலாக்கா சுல்தானக ஆட்சியாளர்களுக்கு மதிப்பையும் அந்தஸ்தையும் வழங்கிய ஓர் கருவி எனலாம். க்வா சாங் குவான் (Kwa Chong Guan) என்னும் ஆராய்ச்சியாளர் 1436இலேயே பரமேஸ்வரா சம்பவம் சங் நீல உத்தமாவின் உருவத்திற்குள் தொன்மப்படுத்தப்பட்டு விட்டதாக கருத்துத் தெரிவிக்கிறார்.

சங் நீல உத்தமாவைச் சுற்றி அமைந்த புதிய கதையாடல் சடங்குகள், புதிய பட்டங்கள் என ஆட்சிக்கு ஒரு அதிகாரத்துவ நிலைப்பாட்டை வழங்கின. எனவே, ஓர் இலக்கியக் கதாபாத்திரம் என்றாலும், சங் நீல உத்தமா இவ்வட்டாரத்திலும் அதற்கு வெளியிலும் வரலாற்று உருவாக்கத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்தார். சிங்கபுரா உருவாக்கம் குறித்த கதையாடல் தொன்மமாக இருந்தாலும் அது ஒருகாலகட்டத்தின் மலாய்ப்பகுதிகளின்மீது உண்மையான வரலாற்று, அரசியல் தாக்கங்களைக் கொண்டிருந்தது. 


Translation and photos published with permission from NLB. This article was originally published in BiblioAsia (Jul-Sep 2020) entitled Sang Nila Utama: Separating Myth From Reality by Derek Heng, a Professor and Department Chair in the Department of History, Northern Arizona University. To read the original article, please access: https://biblioasia.nlb.gov.sg/vol-16/issue-2/jul-sep-2020/sangnila