சிங்கப்பூர் இந்த மாதம் தனது 56வது பிறந்த தினத்தை ஆகஸ்டு 9ம் தேதியன்று தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர் அளவிலான சிறிய நாடுகளும் சரி, சிங்கப்பூர் தனி நாடானபோது பெரிய வளமிக்கதாக இருந்த நாடுகளும் சரி, சிங்கப்பூரின் வளர்ச்சியில் ஆச்சரியம், அதிர்ச்சி, பொறாமை, வெறுப்பு என பல்வேறு வகையான உணர்வுகளுடன் சிங்கப்பூரைப் பார்க்கின்றன. ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு பிற நாட்டினரின் சிங்கப்பூரைப் பற்றிய ஆச்சரியக் கேள்விகள் பெரும்பாலும் தெரிந்திருக்காது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கடந்து போய்விடாமல், அந்தக் கேள்விகளையும் அதற்கான விடையையும் தேசிய தின மாதத்தில் நாம் தெரிந்து கொள்ள முயலலாம்.

1965ல் தனி நாடாக தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டபோது சிங்கப்பூர் கடல் சூழ் மலைகள் நிறைந்த சம நிலங்களற்ற, இயற்கை வளமற்ற ஒரு சிறிய தீவு மட்டுமே. பல்வேறு இன (Race), மொழி (Language) ,சமய (Religion) , கலாச்சார (Culture) மக்களைக்கொண்ட ஒரு நாடு. அதே 1965ல் அதே பொருளாதார அளவில் இருந்த மூன்று நாடுகளையும், தென்கிழக்காசியாவில் உள்ள அண்மை நாடுகளில் மூன்றையும் ஒப்பு நோக்கப் பார்த்தோமானால், சிங்கப்பூர் அபரிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டியும் தனி நபர் வருமானத்தில் மிகையோங்கி இருப்பதும் தெரியும்.
இயற்கை வளமற்ற, பல்சார் மக்களைக் கொண்ட ஒரு சிறிய நாட்டை ஐந்து தசாப்தங்களில் எப்படி இப்படி வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உருமாற்ற முடிந்தது. அதன் ரகசியம் என்ன, என்பதுதான் பல வளர்ந்து வரும் நாடுகளின் முன் உள்ள மிகப்பெரிய ஆச்சரியக் கேள்வி. இதற்குக் காரணமான சிங்கப்பூர் முன்மாதிரி (Singapore Model) என்றால் என்ன? அதை எப்படி நம் நாட்டில் செயல்படுத்தி முன்னுக்கு வருவது? என்பதை அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வமே.
மிக முக்கியமான கேள்வி, ஆனால், இந்த சிங்கப்பூர் முன்மாதிரி எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்த முடியுமா? வெளிப்படையாகத் தெரிந்திராத சிங்கப்பூருக்கென இருக்கும் அந்தத் தனித்துவம் என்ன? அதைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இங்கு சிலவற்றைத் தான் பட்டியலிட்டுப் படிக்கப் போகிறோம். முழுமையாகத் தெரிந்துகொள்ள ஒரு புத்தகமே போட வேண்டியிருக்கும். பலரும் ஏற்கனவே இதைப் பற்றி எழுதியும் இருக்கின்றனர்.
முதலில் அடிப்படையான மதிப்பீடுகள் (Values). ஒவ்வொரு சமுதாயத்திலும் கலாச்சாரத்திலும் அது சார்ந்த அடிப்படை மதிப்பீடுகள் உண்டு. அவை முறையே தனி நபர் மற்றும் சமூக மதிப்பீடுகள் ஆகும். இவை பல்வேறு சமூகங்களில் பல்வேறு மாதிரியான அளவீடுகள் காண்கின்றன. பல் சார் மக்களிடையே பொதுச் சமூகத்திற்கென ஒருமித்த மதிப்பீடுகளை முதலில் உருவாக்குவது மிக முக்கியம். பிறகு அதைத் தொடர்ந்து தூக்கிப்பிடித்து அடுத்த தலைமுறைக்கும் சேர்ப்பது அதை விட முக்கியம். அசாபியா என்கிற இப்ன் கால்துனின் மதிப்பீடுகள் சிங்கப்பூரில் அப்போதைய அமைச்சர் ராஜரத்தினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு இன்றைக்கு நாம் தினமும் பள்ளிகளில் சொல்லி வரும் தேசிய உறுதி மொழியாகப் பரிணமித்தது. தனி மனிதர் தாண்டி, தம் சமுதாயம் தாண்டி தம் நாட்டிற்காக ஒன்று நோக்கிய உறுதி ஒன்றை தமது மதிப்பீடாகக் கொளல் என்பது இன, சமய, மொழி பற்றிய மாறுபட்ட மதிப்பீடுகளையும் தாண்டி நாட்டின் நலத்தை முன்வைப்பதுதான் அசாபியா. அதுவே சிங்கப்பூரின் தலையாய மதிப்பீடு ஆகும். இந்த அடிப்படை மதிப்பீட்டின் மீது எந்தவித சமாதானங்களுக்கும் இடமின்றி நடந்து கொள்வது முக்கியம்.
இரண்டாவதாக, பொறுப்புக்கூறல் (Accountability). ஒருவரிடம் ஒரு பொறுப்பு அளிக்கப்படுகின்றது எனில் அது வாய்மை தவறாமல் ஊழலுக்கு வழியின்றி நேர்மையுடனும் குறித்த காலத்திலும் நிறைவேற்றப்படல் வேண்டும் என்பது சிங்கப்பூர் அரசு தனது அனைத்துச் செயல்பாடுகளிலும் முன்னிறுத்துகிறது. அமைச்சர்களில் ஆரம்பித்து அரசு ஊழியர்கள் வரை இதை முன்னிறுத்தி உதாரணமாக்கி செயல்பட்டு, தொழில் நிறுவனங்களையும் அவ்வாறே செயல்பட ஊக்குவிக்கிறது. பொறுப்புக்கூறல் என்பதும் ஊழலின்றி நேர்மையாக இருப்பதும் ஒன்றல்ல. நேர்மையை (Integrity) அளவீடு செய்வது சிரமம் என்பதால், பொறுப்புக்கூறல் முன்னிறுத்தப்பட்டது. இதை செயலின் விளைவுகளிலிருந்தும், அதற்கான காலங்களிலிருந்தும், தரவுகளை ஆய்வு (Audit) செய்வதின் மூலமும் தொடர்ந்து உறுதிப்படுத்த முடியும். பெரும்பாலும் பல நாடுகளிலும் இது இருந்தாலும், செயலின் வெற்றிக்கு வெகுமானமும், செயலின் தவறுக்கு கடும் தண்டனையும் முன்வைக்கப்படுவதால், தவறிழைக்கும் எண்ணம் தடுக்கப்படுகிறது. ஆண்டுகள் பல ஆனாலும் பிற்பாடு ஒரு தவறிழைத்தது தெரிய வருமானால், அவை கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை நிச்சயம் உண்டு என்கிற உறுதியான நிலைப்பாடு இருப்பதனால், ஊழலற்ற நிர்வாகம் சாத்தியப்படுகிறது. ஊழல் என்பது ஜன நாயக நாடுகளின் சாபக்கேடு. அவற்றை வென்று விட்டாலே ஏனைய வெற்றிகள் அனைத்தும் எளிதாக சாத்தியப்படும். சிங்கப்பூர் முன்மாதிரியில் இந்த கடுமையான பொறுப்புக்கூறல் மிக முக்கியம்.
மூன்றாவதாக, தகுதிசார் (Meritocracy) மதிப்பீட்டிற்கு முன்னுரிமை. அனைவருக்கும் கல்வி என்பது சிங்கப்பூரின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. கல்வித்தகுதி எவ்வளவு முக்கியம் என்பது சிங்கப்பூர் என்கிற தனி நாட்டை உருவாக்கிய பிதாமகர்களின் பின்புலத்தைக் கவனித்தால் நன்கு புரியும். அரசை நடத்துபவர்கள், அரசு சார் முடிவு எடுப்பவர்கள், அரசுக்கு ஆலோசனை சொல்பவர்கள், அரசின் செயல்பாடுகளைச் செயல் படுத்துபவர்கள் என அமைச்சர் முதல் அதிகாரி வரை தகுதி என்பது இன, சமய, மொழி தாண்டி முன்வைக்கப்பட்டதால், மிகச்சிறந்த ஒரு செயல்படை உருவானது. பள்ளியிலே படிக்கும்போதே தகுதி மிக்க மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு அரசு செலவிலேயே வெளிநாடுகளில் பெயர்பெற்ற உயர்கல்லூரிகளில் படிக்க அனுப்பி திறமையை மெருகூட்டி அவர்களை அரசு வேலைகளில் அமர்த்தியது சிங்கப்பூர் அரசு. தகுதி வாய்ந்த ஒரு மாணாக்கன் தனது தகுதிக்கேற்ற இடத்தை உறுதியாகத் தன்னால் அடைய முடியும் என்கிற நம்பிக்கையை நிலை நிறுத்தியிருப்பதுதான் சிங்கப்பூரின் சமூக நீதி. இந்த தகுதிசார் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சு என்பது மிகக் கவனமாக தேர்ந்தெடுத்துச் செதுக்கப்பட்ட ஒரு படை. அந்தச் செயல்படைதான் சிங்கப்பூரை அதன் செயற்கரிய உயரங்களுக்குத் தூக்கிச் செல்கிறது.
நான்காவதாக முன்கூட்டித் திட்டமிடல் (Advanced long-term planning). சிங்கப்பூரின் தொலை நோக்குத் திட்டமிடல் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சிறிய நாடாக இருப்பதாலும், பல பெரிய நாடுகள் அருகாமையில் இருப்பதும், அவற்றிற்கிடையேயான ராஜாந்திர முரண்பாடுகளும், கூட்டுமுயற்சிகளும் என அனைத்தையும் கவனித்து, தம் நாட்டின் வளர்ச்சியை மட்டும் முன் வைத்து திட்டமிட வேண்டியிருப்பதனால், சிங்கப்பூர் எப்பொழுதும் அடுத்த 25 ஆண்டுகளுக்கென திட்டமிடும் வழக்கத்தை வைத்துக்கொண்டது. புதியன புகுதலும், பழையன கழிதலும், புத்தாக்கச் சிந்தனைகளும் அவற்றைச் செயல்படுத்த ஏதுவான சூழல்களுக்குத் திட்டமிடுதலும் என, கடந்துவந்த பாதைகளைத் திரும்பப் பார்த்து விவரிக்க ஆரம்பித்தால் ஒரு இதழ் போதாது. ஒரு செயல்பாட்டை பல நாடுகளோடு ஒரே சமயத்தில் ஆரம்பித்தோமானால், பெரிய நாடுகள் உடனே தனது அசுர பலத்தைப் பிரயோகித்து சிங்கப்பூரை விட முன்னுக்குப் போய்விடும். அண்மை நாடுகளின் அசுரபலத்திற்கிடையே முன்னேற வேண்டுமானால், சிங்கப்பூர் முன்னமே செயல்படத்தொடங்க வேண்டும். அதற்கு தொலை நோக்குத்திட்டமிடல் கைகொடுக்கிறது. எப்போதும் அடுத்த 25 வருடங்களுக்குத் திட்டமிடுவதால், சிங்கப்பூரின் உட்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் என நம்மைச் சுற்றியுள்ள நாடுகளை விட பதினாறடி பாய்ந்து செல்வதால்தான் சிங்கப்பூர் முன்மாதிரியான நாடாக இருக்கிறது. தொலை நோக்குத் திட்டமிடல், அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தல் என்பது சிங்கப்பூர் முன்மாதிரியின் அடுத்த முக்கியக் காரணி.
ஐந்தாவதாக பெண்ணுரிமை (Women Empowerment). முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ள பெண்களே அனைத்து சமுதாயங்களிலும் கல்வியில் சிறந்து விளங்கினர். ஏனையோர் படிப்பு வாய்ப்புகளின்றி இருந்து வந்தனர். சிங்கப்பூரில் அனைவருக்கும் கல்வி என்றான பின்னர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் படிப்பில் சிறந்து விளங்கினர். அவர்களின் படிப்பையும் திறமைகளையும் வீட்டிற்குள் அடைத்து வைக்க விரும்பவில்லை அப்போதையப் பிரதமர் திரு. லீ க்வான் யூ அவர்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வேலையிடச் சூழல்களை உருவாக்கினார். திரு. லீ அவர்கள், பெண்கள் படித்தால் மட்டுமே அடுத்த தலைமுறை அறிவுசார் சமுதாயமாக மலரும் என்கிற உறுதிப்பாட்டுடன் இருந்தார். சிங்கப்பூரின் மனிதவள உற்பத்தி கூடியதால், சேவை சார்ந்த துறைகளில் பெண்கள் பெரும்பங்காற்றினர் இதனால் அதிகரித்த குடும்ப வருமானம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்றது. சிங்கப்பூர் முன்மாதிரியில் பெண்ணுரிமை பிரதானமாக முன் வைக்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள் – இருக்க இடம், கல்வி, மருத்துவம். ஒரு நாட்டின் அரசு தம் மக்களுக்கு சிரமமின்றி எளிதில் அடைவதற்கு என ஏற்படுத்தித் தரவேண்டிய மூன்று முக்கியமானவை என்னவென்றால், குடியிருக்க கூரை, தகுதிக்கேற்ற கல்வி, கட்டுபடியான விலையில் மருத்துவம். இதை எந்த அரசுகள் ஏற்படுத்தித் தருகின்றனவோ அவை மக்களுக்கான அரசுகள். மூன்றாம் உலக ஜன நாயக நாடுகளில் இவை பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. வளர்ந்த நாடுகளில் இவற்றில் ஏதாவது ஒன்றாவது உள்ளன. ஆனால் இதில் ஒரு சமனிலை கண்டு இந்த மூன்று வசதிகளும் ஒவ்வொரு குடிக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற சங்கல்பத்தில் சிங்கப்பூர் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைக்கு 90 சதவீதம் சிங்கப்பூரர்கள் அரசின் வீவகக் குடியிருப்புப் பேட்டைகளில் குடியிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் கூட இந்த சதவீதம் எட்டப்படவில்லை, அங்கு இன்றும் தெருவில் வசிப்போர் இருக்கின்றனர். கல்வி மிகப் பெரிய அளவில் மானியம் வழங்கப்பட்டு வெகு சொற்பச்செலவில் உலகத்தரம் வாய்ந்த அடிப்படைப் பள்ளிக்கல்வி அளிக்கப்படுகிறது. முதன்மை மருத்துவம் (Primary Care) பொதுவில் இருந்தாலும் நாடெங்கும் விரவியிருக்கும் மருத்துவமனைகள் அரசு மானியங்கள் வழி சொற்பமாகவே கட்டணம் வசூலிக்கின்றன. பெரும் வியாதிகள், அறுவைச் சிகிச்சைகளுக்கு (Specialist Clinics) பெரும் மானியம் வழங்கப்பட்டு சாதாரண மக்களுக்கும் எட்டும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. சிங்கப்பூரர் யாரும் பணம் இல்லையென்கிற காரணத்தால் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதில்லை. இந்த அடிப்படை வசதிகள் சாதாரணக் குடிமகனுக்கும் உறுதியளிக்கப்படுவது சிங்கப்பூர் முன்மாதிரியின் மற்றுமொரு முக்கிய அம்சம்.
போட்டிமிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் வெகுவேகமாக மாறிவரும் புறச்சூழல்களில் வருங்காலச் சந்ததியினர் நம்பிக்கையுடன் போட்டிபோட்டு முன்னேற அவர்களைத் தயார்படுத்தும் தொடர் சிந்தனை, சிங்கப்பூர் முன்மாதிரியைச் சேர்ந்தது. அதற்காக தமது கல்வித் தரத்தை உலகளாவிய முதன்மைத் தரமாக உயர்த்தவும் சிங்கப்பூர் அரசு தயங்கவில்லை. இதற்கு முன்னிருந்த சவால்கள் வேறு, தகவல் தொழில் நுட்பம் ஒவ்வொரு தனி நபர் கைகளிலும் தவழ ஆரம்பித்தபின் அரசுகள் சந்திக்கும் சவால்கள் வேறு. அடிப்படையான மதிப்பீடுகளைத் தொடர்ந்து சந்ததியினருக்கு நினைவூட்டுவதன் மூலம் சிங்கப்பூரின் தனித்தன்மையைத் தொடர்ந்து நம்மால் காக்க முடியும். போட்டித்தன்மை (Competitiveness) அதிகரிக்கும் சூழலில் சிங்கப்பூரின் போட்டித்தன்மையைத் தொடர்ந்து தக்கவைக்கும் நோக்கில் வெளினாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்குள் தொடர்ந்து மேலும் அனுமதிப்பது முக்கியமாகிறது.
ஆனால், இது வேறு வகையான புதிய சவால்களை ஆளும் அரசுக்கு அளிக்கிறது. அவை சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான மதிப்பீட்டுத்தளத்தில் (Social Values & Economic Stature) ஏற்படுத்தும் மாற்றங்கள். சிங்கப்பூரர்களுக்கே உரிய பல்வேறு இன, சமய, மொழி, கலாச்சார வேறுபாடுகளைத்தாண்டி தம்மை சிங்கப்பூரர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்த ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே சிங்கப்பூர் என்கிற அசாபியா மதிப்பீடு, ஏறக்குறைய 30 சதவீதம் உள்ள (சிங்கப்பூரர் மற்றும் நிரந்தரவாசிகள் தவிர்த்த) வெளிநாட்டினரிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் தத்தம் நாட்டின் தாம் வளர்ந்த சூழல்களின் சமூகமதிப்பீடுகளுடனேயே (Social Values) சிங்கப்பூரியச் சமூகச் சூழல்களில் வாழ்கிறார்கள். அந்த சமூக மதிப்பீடுகள், சிங்கப்பூரின் இன, சமய, மொழி தாண்டிய ஒன்றுபட்ட பன்முகத்தன்மையை தன்னகத்தே பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை. அவர்கள் சிங்கப்பூரின் இன, சமய, மொழி மற்றும் கலாச்சாரச் சூழல்களில் கலந்து பழகும்போது அன்றாட வாழ்வில் இங்குள்ளோரின் சமூகமதிப்பீடுகளுக்குள் தாக்கங்களை ஏற்படுத்தி எண்ணங்களூடான மதிப்பீட்டு மாற்றங்கள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
இதுபோக வேலையிடங்களில் வெளிப்படையாகக் காணப்படும் சம்பள வித்தியாசமும் அதன்கண் உருவாகும் வாழ்வியல் சூழல் வித்தியாசங்களும் (வீவகப்பேட்டை, கோன்டோ) இதை மேலும் அதிகரிக்கிறது. சமீபமாக மனோரீதியான பாகுபாடுகள் வலிந்து காணப்படுகின்றன. சிங்கப்பூரின் தனித்துவ அடையாளமான சமூக, கலாச்சார அமைப்புக்களுக்குள், மாறுபட்ட கலாச்சார சமூக மதிப்பீடுகள் கொண்டோர் ஏற்படுத்தும் தாக்கம், நிலைநிறுத்தப்பட்ட சிங்கப்பூரின் அடிப்படை மதிப்பீடுகளை (அசாபியா) நாளடைவில் வலுவிழக்கச் செய்கிறது.
அரசின் அக்கறையான கவனத்திற்கு இது வந்திருக்கிறது என்பதை தேசிய தினத்தில் பிரதமர் லீ சியான் லூங் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதிலிருந்து நாம் உணர முடிகிறது.
இன, சமய விவகாரங்களை கவனத்துடன் கையாள வேண்டியது மூன்றாவது அம்சம். இனம், மொழி, சமயம் ஆகியவற்றுக்கு அப்பால் அனைத்து சிங்கப்பூரர்களின் சார்பாக அரசாங்கம் இவ்விவகாரங்களைக் கையாளும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவு, நம்பிக்கை ஆகியன அவசியம்.
இதனைக் களைய அரசு முன்னெடுக்க வேண்டிய ஆலோசனைகள் என்னவென்றால், வேலை அனுமதி அட்டை வழங்கும் முன் மனிதவள அமைச்சு வழி, சிங்கப்பூரின் மதிப்பீடுகள் (அசாபியா) என்ன என்பதைப் பற்றிய ஒரு கையேடு, விளக்க ஓளிஒலிப்படம், ஒரு தேர்வு என அடிப்படையான புரிதல்களை ஏற்படுத்தி, அதற்கு மாறான செயலில் ஈடுபட்டால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் தெளிவு படுத்தப்படல் வேண்டும். இது பாகுபாடின்றி அனைத்துத் தரப்புச் சம்பளக்காரர்களுக்கும் பொருந்த வேண்டும். இது உள்ளூர்வாசிகளிடையேயும் வெளிநாட்டுப் பணியாளர்களிடையேயும் வேலையிட மற்றும் சமூகச்சூழல்களில் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த உதவ வழி வகுக்கும். இதன் வழி சிங்கப்பூரின் அமைதிக்கும் வெற்றிக்கும் காரணமான அசாபியாவைத் தொடர்ந்து நாம் பின்பற்றி வரமுடியும்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துக்கள்.
இக் கட்டுரை தி சிராங்கூன் டைம்ஸ், 2021 ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப்பட்டது.