தி சிராங்கூன் டைம்ஸ்
தமிழ் இளையோருக்கான பொருளியல் மேம்பாட்டுச் சிந்தனைகள்

தமிழ் இளையோருக்கான பொருளியல் மேம்பாட்டுச் சிந்தனைகள்

“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவரின் வாக்கு. 1960களில் இருந்த அன்றைய சிங்கப்பூருக்கும், 2022ல் தற்போது நாம் பார்க்கும் சிங்கப்பூருக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் பொருளாதார வளர்ச்சி. யாரும் மறுக்க முடியாத கண்கூடான வளர்ச்சி. பொருளாதார வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார தொடர் மேன்மையைக் குறிப்பதாகும் ஆனால் பொருளியல் மேம்பாட்டு சிந்தனை வளர்ச்சி என்பது பொருளியல் குறித்த எண்ணங்கள் எவ்வாறு உருவெடுத்து பின்பு அது தனி நபர்களுக்கும், அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கும், அதன் வழி ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவது பற்றியதாகும்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை எந்த வித இயற்கை வளங்களும் இல்லாத ஒரு நாடு. நம் நாட்டில் ஏரிகள் உள்ளன, காடுகள் உள்ளன, விளை நிலங்கள் உள்ளன, மூன்று நாட்களுக்கு ஒரு முறை மழை பொழியும் காலநிலைகள் உள்ளன. இருந்தாலும், நம் நாடு உருவான போது இருந்த சூழலில் அசுர வளர்ச்சி காணவேண்டிய கட்டாயத்தில் இருந்த நமக்கு, இருக்கின்ற இயற்கை வளம் உதவியிருக்க முடியாது. நம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க, மூத்த தலைவர்கள் மேற்கொண்ட அரிய முயற்சிகள் என்றளவும் வியக்கத்தக்கவை. கல்வி, உட்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, நாணயக்கொள்கை என்று பல்வேறு கோணங்களில் ஒரே சமயத்தில் பம்பரமாய்ச் சுழன்று திரவியம் சேர்க்க வேண்டியிருந்தது. ஆனால் அப்போதைய அரசிடம் இருந்தது, மக்கள் செல்வம் மட்டுமே. அதுவும் போராட்டங்களுடன் புலம்பெயர்ந்து சிறந்த வாழ்க்கையைப் பெற வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற தூண்டுதல்களுடன் உழைக்கத் தயாராயிருந்த ஒரு பல்லின, மத, சமூக மக்கள் கூட்டம்.

1960களில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, அதிலும் தமிழர்களின் கல்வியறிவு வீதம் குறைவாக இருந்தது. 2000ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு கட்டாயக் கல்விச் சட்டத்தை இயற்றியது. அதன் வழி, ஜனவரி 1, 1996க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி கற்கும் பள்ளிகளில் சேர்ந்து கற்பது அவசியம். அப்படித் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு ஐயாயிரம் வெள்ளிகள் அபராதமும், அல்லது ஒருவருட சிறைத்தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளிக்கப்படும் என்று அந்தச் சட்டம் சொல்கிறது. இன்றைக்கு பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் இல்லையெனவே சொல்லலாம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்புடைய வகையில் மிகச் சொற்பமான பள்ளிக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்குக் காரணம் அரசு தரும் பெரும் மானியங்கள் ஆகும். 

ஆரம்பக் கல்வியுடன் நிற்க விடுவதில்லை அரசு. தொடர்ந்து மாணவரின் கற்கும் ஆர்வத்தையும் இயற்திறனையும் (skills) கருத்தில் கொண்டு பல்வேறு உயர்கல்விகளுக்கான வாசல்களை அதுவும் மானியங்களுடன் மாணவர்களுக்கு அளிக்கிறது.  உயர்கல்வி படித்து கல்லூரி வாசலில் இருந்து பட்டதாரிகளாக வெளியேறும் இளம் சிங்கப்பூரர்களுக்கு முன் உள்ள சவால்கள், பொருத்தமான நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளைப் பெறுதல் முதன்மையாக உள்ளது.  பிறகு திருமணம், வீவக வீடு, குழந்தைகள் என அடுத்த தலைமுறைக்கான வாழ்க்கைப் பயணம்.

இயற்கையாகவே துறைமுக நகராக இருந்த சிங்கப்பூர் தனக்கே உரிய பலத்தில் அக்கறை கொண்டு வணிக ரீதியாக மேம்படவும், தொழிற்சாலைகளைக் கொணரவும் அரும்பாடு பட்டனர் மூத்த தலைவர்கள். இருக்கும் மக்களனைவருக்கும் வேலை தர வேண்டும். அதற்கு கல்வி முக்கியம், எனவே கல்விச் செலவு பெரும்பாலும் அரசால் ஏற்கப்பட்டது. ஆனாலும் அசுர வளர்ச்சி பெற்ற பொருளாதரத்திற்கு மேலும் உழைக்க உள் நாட்டில் கூடுதலான தகுதியான மக்களை உருவாக்க காலம் பிடித்தது. ஆட்பற்றாக் குறையால் தொய்வேற்பட்ட காலத்தில் மக்கள் வளத்தைச் சரிக்கட்ட வெளிநாட்டினர் அழைத்து வரப்பட்டனர். அதனால் வேலையிடங்களில் போட்டித்தன்மை அதிகரித்தது. உற்பத்தித் திறன் கூடியது, அதன் விளைவாக சம்பளங்களும் கூடியது. ஆனால் புதிதாகப் படித்து வெளியே வரும் உள்ளூர் பட்டதாரிகளின் வேலைக் கனவு கடும் போட்டிகளைச் சந்திக்க வேண்டி வந்தது. 

இது சமூக ரீதியில் ஒரு சூடான விவாதத்தைக் கிளப்பி வந்தது. மனித வள அமைச்சு உள்ளூர்வாசிகளுக்கு வேலை இடங்களில் வேலை பெற முன்னுரிமை அளிக்கும் சூழல்களை உருவாக்கினர். இன்றைக்கு வேலைவாய்ப்பின்மை பெருமளவில் குறைந்துள்ளது. கல்வியால் இளம் தம்பதியினர் இருவரும் சம்பாரிக்கின்றனர். வசதியான வாழ்க்கையை ஆரம்பிக்க முடிகிறது. சிங்கப்பூரின் ஆரம்பகால நோக்கம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வேலை தருவது என்பதான குறிக்கோள் இருந்ததால், கல்வித்திட்டங்கள், சமூக மதிப்பீடு ஆகியன  அரசிலோ, தனியார் நிறுவனத்திலோ வேலை பார்ப்பதையே சாதனையாகக் கருத வைத்தது. வெகு சிலரே சொந்தமாக தொழில் செய்யும் எண்ணப்பாடு கொண்டிருந்தனர். அப்படித் தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் வளர்ச்சி கண்டிருந்தனர். 

ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்வதிற்கும், ஒரு நிறுவனமாக பலருக்கு வேலை தருவதிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு,  இடர் மேலாண்மை (Risks Management). இடரில்லாத வாழ்க்கையே அடிப்படை வசதி இல்லாத சமூகங்களின் கனவு. நம் பெற்றோர்கள் அப்படிப்பட்ட சூழலில் பிறந்து  வந்தவர்கள். ஆனால் நாம் அப்படிப்பட்ட சூழலில் வளரவில்லை. வளரும் தென்கிழக்காசிய நாடுகளிலேயே வளர்ந்த ஒரு நாடு என்கிற அடையாளத்துடன் இருக்கின்ற சிங்கப்பூரில் வாழ்கிறவர்கள் நாம். இன்றைக்கு எந்த சிங்கப்பூர இளையருக்கும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவிற்கோ, உடுக்க உடைக்கோ, இருக்க இடத்திற்கோ எந்தக் குறையுமில்லை. மின்சாரத் தடை என்றால் என்னவென்றே அறியாமல்  வளர்ந்து விட்ட இன்றைய சிங்கப்பூர இளைய சமுதாயம், வளரும் நாடுகளுக்குச் சென்று பார்த்தால்தான்  சிங்கப்பூரின் அருமை தெரியும்.  இன்றைய சிங்கப்பூர் இளையர்களின் பொருளாதாரத் தேடல் கனவு அவர்களின் பெற்றோருடைய தேடல்  கனவுகளை விட கூடுதல் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது.  

ஒரு நிறுவனத்திற்காக ஊழியம் செய்வதால் பெறும் மாத ஊதியத்தால் மட்டுமே இன்றைய இளையோர் தமது மேம்பட்ட பொருளாதாரக் கனவுகளை அடைந்து விட முடியாது. தொழில்காரணிகளில், தொழில் முனைவுத்துவம் (Entrepreneurship) தான் மிகவும் முக்கியமான காரணி. ஏனென்றால் இதுதான் அனைத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி செய்து நுகா்வோர்களுக்கு அளிக்கிறது. ஒருவர் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கொடுப்பதற்கான சூழல்கள் ஏற்படுவதால்தான், தன் பொருளாதரமும், நாட்டின் பொருளாதாரமும் மேம்படுகிறது. 

தொழில் முனைவுத்துவத்தில் உள்ள முக்கியத் தடை பொருளுதவி, அரசு உதவிகள் மற்றும் ஊக்கமளித்தல். இவை அனைத்தையும் இன்றைக்கு சிங்கப்பூர் அரசு இளையோர் முன் எளிதாக்கி முன்வைக்கிறது. அரிய திட்டங்கள், பெரும் பொருள் ஒதுக்கீடு, ஆலோசனைக் குழுக்கள் அமைத்தல் என்று ஒரு சிறிய நாட்டில் சுய தொழில் முனைவை ஊக்கமளிக்க அரசு பெரு முயற்சி செய்கிறது. இன்றைக்கு பல்தொழில் நுட்பக் கழகங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் இளையோர்களை புத்தாக்கச் சிந்தனைகளுடன் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் பல்வேறு முயற்சிகள் உள்ளன. இது போக தொழில் தொடங்கும் இளையோருக்கெனவே பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. இளையோர்களிடம் தற்போது வேண்டியது, புத்தாக்கச் சிந்தனைகள், அவற்றைச் செயலாற்ற வேண்டிய உத்வேகம், தொடர் ஊக்கங்கள் இவைதான். 

புத்தாக்கச் சிந்தனைகள் எனும்போது நம் கண் முன்னேயே பல உதாரணங்கள் உள்ளன. ஒரு சில வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் பல புத்தாக்கச்  சிந்தனைகளோடு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் இன்றைக்கு தென்கிழக்காசியாவில் விரிந்திருக்கின்றன. அவற்றின் வருமானம் பில்லியன்களில் எகிறியிருக்கிறது. புத்தாக்கம் என்பது ஒரு சிந்தனையோட்டம். மனப்பாடு (mindset). அவற்றைப் பள்ளி கல்லூரிகளில் இருந்தே சிந்தனையூற்றி வளர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகள் கல்வியமைச்சால் மேற்கொள்ளப் படுகின்றன. புத்தாக்கச் சிந்தனைகளை செயலாக்கம் செய்வதனால், புதிய தொழிற் வாய்ப்புகளை தமக்கும், தம் நாட்டிற்கும் உருவாக்க முடியும். 

அரசின் சமீபத்திய கூட்டு முன்னெடுப்பு, புத்தாக்கச் சிந்தனை கொண்டு செயலாற்றி வரும் சிறந்த தொழில் முனைவோரை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தொழில் மேம்பட பொருள் உதவி அளித்தல் போன்ற முயற்சிகளில் இளையோர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. வசந்தம் தொலைக்காட்சியில் இந்திய வர்த்தக சபை (SICCI) உடன் இணைந்து “SICCI – Launchpad” என்று ஞாயிறு இரவு 9 மணிக்கு தொழில் முனைவுத்துவம் பற்றிய நிகழ்ச்சி வெளி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் இளையோர் தத்தம் புத்தாக்க முயற்சிகளை விளக்குவதும், அதற்கு நடுவர்கள் அளிக்கும் ஊக்கமிக்க பின்னூட்டங்களும் தற்போதைய இளையர்கள் காண வேண்டிய நிகழ்ச்சி. 

இது போக அரசின் பல்வேறு இணையத் தளங்களில் தொழில் முனைவுத்துவம் பற்றி பல்வேறு திட்டங்கள் உள்ளன. புத்தாக்கம் பூண்டு, இந்திய இளையோர் வெறும் ஊதியம் சார்ந்த வேலைகளைத் தாண்டி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைத் தம் குடும்பத்தாருக்க்காகவும் தம் நாட்டிற்காகவும் செய்ய வேண்டும். 

பொருளியல் மேம்பாட்டுச் சிந்தனைகளுடன் புத்தாக்கங்களை உள்ளடக்கி தொழில் முனைவுத்துவத்தை முன்னிறுத்தி சிங்கப்பூரை கிழக்காசியாவின் புத்தாக்கத் தலைநகராக ஆக்குவதுடன், பொருளாதார முன்னேற்றத்தில் முன்னோடியாகத் திகழ வைக்க வேண்டியது, இன்றைய இளையோரின் கடமையாகும்.

[email protected] 

[“சமுதாய மாற்றத்தில் இளையரின் புத்தாக்கப் பணி” என்ற தலைப்பில் ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை]

(இக்கட்டுரை 2022ம் ஆண்டு மே மாத தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளியானது.)