தி சிராங்கூன் டைம்ஸ்
மின்பணம் – உடையும் தடைக்கல்

மின்பணம் – உடையும் தடைக்கல்

கடந்த செப்டம்பர் 2021 ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் வெளியான மின்பணம் (Central Bank Digital Currency – CBDC) கட்டுரையில், அதன் தோற்றுவாய் பற்றி எழுதியிருந்தோம். உக்ரேன் – ரஷ்ய பிரச்சனை கண்டங்கள் தாண்டி நம் அன்றாட வாழ்வில் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தி வரும் சூழலில், அரசுகள் தீவிரமாகப் பெருவணிக மின்பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது. அதற்கான அதீத உந்துதல் அமெரிக்க மற்றும் கூட்டாளி நாடுகள் விதித்திருக்கும் வர்த்தகத் தடைகளும் அதனால் விளைந்த வானுயர் விலைவாசியுமே. 

உக்ரேன் – ரஷ்யா இடையிலேயான சச்சரவில் சிங்கப்பூரும் தன் பங்குக்குத் தென்கிழக்காசியாவின் ஒற்றைக் குரலாக மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக ரஷ்யாவை நிந்தித்தும், வர்த்தகத் தடைகளை அமல்படுத்தியும் வருகிறது.

முதலில் மின்பணம் என்றால் என்ன என்பதை நினைவு கூறுவோம்.

மின்பணம் என்பது அரசுகளின் மைய வங்கிகள் பொறுப்பில் அரசு வெளியிடும் அதே காகிதப் பணத்தை மின்பணமாக அதே மதிப்பில் அதே பயன்பாட்டிற்கு வெளியிடுவது. மின்காசு (Cryptocurrency) எந்த அரசாலும் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் மின்பணம் (CBDC) அந்தந்த அரசுகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் மின்பணப் பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வமானதுமாக ஆகிறது.

மின்பணம் இருவகைப்படும். முதலாவது, உள்ளுரில் பயன்படுத்தப்படும் காகிதப் பணத்திற்குப் பதிலாக Tokenisation என மின்னிலக்கமாக உருமாற்றப்படும் மின்பணம், உள்நாட்டுக்குள் காகிதப் பணத்தை ஒழித்துவிட்டு அனைத்து வகையான நடைமுறைச் செலவுகளும் மின்னிலக்க முறையில் செயல்படுத்துவது. இது சிறுவணிக-மின்பணம் (Retail-CBDC) எனப்படும். இரண்டாவது, பிற நாடுகளிடையேயான வர்த்தகப் பரிமாற்றத்தில் அன்னியச் செலவாணிகள் வழி மின்பணத்தைப் பரிமாற்றிக்கொள்ளுதல், இது பெருவணிக-மின்பணம் (Wholesale-CBDC) எனப்படும். நாம் பெருவணிக மின்பணம் தற்போதைய அமெரிக்க வர்த்தகத் தடைகளை உடைத்து மேலெழ பல நாடுகளுக்கு எப்படி உதவப்போகிறது என்பதையும், அமெரிக்க டாலரின் முக்கியத்துவம் பெருவணிக நாணயமாற்றில் எந்த அளவிற்குக் குறையக்கூடும் என்பதையும் பார்ப்போம்.

உக்ரைன் மீது ரஷ்யாவினாலான “சிறப்பு ராணுவ நடவடிக்கை” அல்லது “ராணுவப் படையெடுப்பு”  காரணமாக, உடனடியாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவின் அயலகச் சொத்துக்களை (சுமார் முன்னூறு பில்லியன் டாலர்) முடக்கியதுடன் மட்டுமின்றி, ரஷ்ய நாணயமான ரூபிளையும் பரிமாற்றங்களில் தடைசெய்யத் தொடங்கியதால், ரஷ்யா சற்றுத் தடுமாறியது. உடனடியாக, ரூபிளில் எரிவாயுவிற்கு பணம் தந்தால்தான் எரிவாயுக் குழாய்களைத் தொடர்ந்து திறந்துவிட முடியும் என்றதால், விலை மலிந்த (1000 கன மீட்டருக்கு $280) ரஷ்ய எரிவாயுவை மட்டுமே நம்பியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் ரூபிளில் பணம் செலுத்த, தடுமாறிக் கீழே விழுந்திருந்த ரூபிளின் மதிப்பு பழைய நிலைக்கு வந்தது. அதுவே மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையின் முதல் தோல்வியாகவும் ஆயிற்று.

பொருளாதாரத் தடைகள் என்றால் அவ்வளவு கொடுமையானதா, என்றால் ஆம் என்று ஈரான், வடகொரியா, க்யூபா போன்ற நாடுகள் சொல்லும். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்துல்கலாம் தலைமையில் 1998ல் அணுகுண்டு வெடிக்கப்போய் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை வெகுகாலங்களுக்கு இந்தியாவிற்கு விதித்தது. தற்போது சீனாவிற்கு அதுபோன்ற ஏகப்பட்ட தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், எந்தவொரு அன்னிய நாணயமும் முதலில் அமெரிக்க டாலராக மாற்றப்பட்டு, பிறகுதான் மற்ற நாடுகளின் நாணய மதிப்புக்கு மாற்றப்படும். அப்படி நாணயபரிமாற்றம் செய்யும் ‘ஸ்விப்ட்’ (SWIFT) அமைப்பிற்கு உத்தரவு போடும் இடத்தில் அமெரிக்கா இருப்பதால், அமெரிக்கா நினைத்தால் எந்த ஒரு நாட்டின் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும். 

இதனால் அன்னியச் செலாவாணியை உள்ளடக்கிய எந்தத் தொழிலையும் ஒரு நாடு செய்ய முடியாது. ஆகவே, ஈரான், க்யூபா போன்ற நாடுகள் பண்டமாற்றுப் பரிவர்த்தனை முறையில் வியாபாரம் செய்தன. எடுத்துக்காட்டாக, ஈரான் இந்தியாவிற்கு எண்ணெயை அமெரிக்க டாலர் அற்ற பண்டமாற்று முறையில் தொடர்ந்து செய்துவந்தது. ஆனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பலன் உண்டா என்றால், உண்டு எனலாம். ஈரான் இந்தப் பொருளாதாரத் தடைகளை நீக்கும் பொருட்டு 2015-இல் அணுகுண்டுத் தயாரிப்பு நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

ஈரானின் பொருளாதாரத் தடை அப்படியிருந்தது என்றால், ரஷ்யாவின் பொருளாதாரத் தடை அப்படி இருந்திருக்கவில்லை. சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவுடன் ஏற்கனவே டாலரற்ற தத்தம் நாணயங்களில் வர்த்தகப் பரிமாற்றம் செய்துகொள்ளத் தனித்தனியாக ஒப்பந்தம் போட்டிருந்ததால், உடனடியாக ரஷ்யாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவின் கோரிக்கைத் தோற்றத்தில் வந்த மிரட்டலை ஒதுக்கித் தள்ளிவிட்டு  தொடர்ந்து டாலரற்ற  ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் தொடர்ந்தனர்.  அதனால் இம்முறை அமெரிக்காவின் பொருளாதரத் தடை ரஷ்யாவில் செல்லவில்லை. 

விழித்துக்கொண்ட ஏனைய நாடுகள், டாலரல்லாத வர்த்தகம் செய்வதில் முனைப்புக் காட்டத் தொடங்கியபோது, அவர்களுக்கு வாராது வந்த மாமணியாக முன் நின்றது பெருவணிக மின்பணம்.  ஒவ்வொரு நாடும் தனித்தனியாக மற்ற நாடுகளுடன் நாணயப் பரிமாற்று ஒப்பந்தம் போடுவதற்குதற்கான தேவையின்றி அதைப் பெருவணிக மின்பணம் ஈடுசெய்யும். ஒவ்வொரு நாடும் பெருவணிக மின்பணம் பரிமாற்றம் செய்ய ஏதுவாக தனது நாட்டில் அதற்கான உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது மட்டுமே அந்த நாட்டை பெருவணிக மின்பணக் கட்டமைப்பிற்குள் ஐக்கியமாக்கும். இன்றையச் சூழலில் அது ஒன்றும் கம்ப சித்திரமல்ல.

மின்பணத்தால் பொருளாதாரத் தடைகளை மீற முடியும் என்பது நடப்புக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ‘பிரிக்ஸ்’ (BRICS – Brazil, Russia, India, China, South Africa) நாடுகள் ஏற்கனவே அதற்கான முயற்சியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், மின்பணத்தால் விளைவது அது ஒன்றுதானா என்றால், இல்லை, மேலும் சில பலன்களும் உண்டு. பின் தங்கிக் கிடக்கும் மூன்றாம் உலக நாடுகளில் வங்கிக் கணக்கின்றி, வங்கி வட்டத்திற்குள்ளேயே வராமல் இன்னமும் பெரும் பொருளாதாரம் காகித நோட்டுக்களுக்குள் முடங்கி இருக்கின்றது. அவர்களை வங்கிப் பரிமாற்றத்துக்குள் கொண்டுவர மின்பணம் உதவும். 

அப்படி மின்பணம் உதவ, செல்பேசியில் இணையத் தொடர்பு இருக்க வேண்டும். இன்றைக்கு உலக மக்கட்தொகையில் 67% பேர் செல்பேசி வழியாக இணையத் தொடர்பில் உள்ளார்கள். அவர்களை வங்கி வட்டதிற்குள் இணைக்க மின்பண உட்கட்டமைப்பு உதவப்போகிறது. இது சிறுவணிக மின்பண வகைக்குள் வரும். ஆனால் யானைக்கு ஒரு ஓட்டை, பூனைக்கு ஒரு ஓட்டை என்றில்லாமல் யானை (பெருவணிக மின்பணம்) செல்ல வழி ஏற்படுத்தினால், அதன் வழி பூனையும் (சிறுவணிக மின்பணம்) செல்ல ஏதுவாகும்.  ஆகையால், செல்பேசி வழி இணையத் தொடர்பு அதிகமுள்ள மூன்றாம் உலக நாடுகளில், பெரும் பொருளாதார வளர்ச்சி, மின்பணம் வழியாக, பிரமாண்டமான வளர்ச்சி காணப் போகிறது.  Belt and Road Initiative (BRI) எனப்படும் உள்கட்டமைப்பு வளர்ச்சித்திட்டம் வழியாக, தொலைத்தொடர்பு, கைத்தொலைபேசி, மின்பணம் வரையிலான சீனாவின் உலகளாவியப் பெருங்கனவு, அமெரிக்காவின் தூக்கத்தைக் கலைத்து வெகுநாட்களாகிவிட்டன. 

Source: internetworldstats.com

தற்போது எத்தனை நாடுகள் எவ்வெந்த அளவுகளில் பெருவணிக மின்பணத்தில் மும்முரமாக இருக்கின்றன எனப் பார்ப்போம்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP – Gross Domestic Product) 95 விழுக்காட்டைத் தன்னகத்தே கொண்ட 110 நாடுகளில் அண்மைய கணக்கெடுப்பின்படி, 11 நாடுகள் (பஹாமாஸ், கிழக்கு கரீபிய நாடுகள் (8 நாடுகள்), ஜமைக்கா, நைஜீரியா) பெருவணிக மின்பணத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்து விட்டன, ஆனால், அங்கு பயன்பாடு இன்னும் அதிகரிக்கவில்லை.

சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகள் தற்போது சோதனை முறையில் முழுமையாக்கப்பட்ட பெருவணிக மின்பண வர்த்தகத்தைச் செய்து வருகின்றன. அந்த 14 நாடுகளாவன, சீனா, ரஷ்யா, தாய்லாந்து, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கசகஸ்தான், லித்துவேனியா, உக்ரேன், ஸ்வீடன், ஹாங்காங். மேற்கத்திய நாடுகள் எதுவுமே இந்த வரிசையில் இல்லை. 

போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்துவோர் எனக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிழலுலக வியாபாரிகளிடையே அமெரிக்க டாலர் பரிவர்த்தனையும், உருமாற்ற முடியாமல் போகும் நிழலுலக அமெரிக்க டாலர் நோட்டுக்களையே பாதுகாப்பான சொத்து என்றும் கருதுவதால், உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் புழக்கத்திலில்லாமல் காகித டாலர் நோட்டுக்களாகவே பதுக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க அரசு டாலரை மின்பணமாக அறிமுகப்படுத்தி மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால், கையை மீறி அடித்து வெளியிடப்பட்டிருக்கும் அந்த மறைவான டாலர்கள் எல்லாம் வெளியே வரநேரிடும். அப்படி வந்துவிட்டால், அமெரிக்க டாலரின் மதிப்பு என்னவாகும் என்பதை அமெரிக்காவின் மத்திய வங்கி கூடக் கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால், அமெரிக்கா இன்னமும் மின்பணத்தை ‘ஆராய்ச்சி’ மட்டுமே செய்துகொண்டிருக்கிறது.

சிங்கப்பூர் மின்பணச் சூழலுக்குள் பல நாடுகளைக் கொண்டுவரப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் Project Dunbar, பிரான்சுடன் Project Onyx, கனடா, இங்கிலாந்துடன் Project Jasper ஆகிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. 

நிகரமாக, அமெரிக்க டாலரைப் புறந்தள்ளிய ஒரு வர்த்தகப் பொருளாதாரச் சூழலை உருவாக்கி, தற்போதைய சமனற்ற உலகச் சூழலை, சரியான வலுவான சமனுள்ள உலகைப் படைக்க ஆயத்தம் ஆரம்பமாகிவிட்டது. சிங்கப்பூர், வழமைபோல், வரப்போகும் பெருமாற்றத்திற்குத் தயாராகி வெகுநாட்களாயிற்று.

[email protected]

(இக்கட்டுரை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளியானது.)