இளையர் பங்களிப்பில் இதழியலும் ஆய்வும்
ஜமால் சேக்
தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகள் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு வாய்ந்தவை. முதலாம் தமிழ்ச்சங்கம் என்பது தமிழை ஆய்வு செய்ய முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்ச்சங்கங்கள் கூடி தமிழாய்ந்து வருகின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு இன்று உலகெங்கும் விரவிக்கிடக்கும் திரைகடலோடியும் திரவியம் தேடப்போன தமிழ்ச்சமுதாயம் இணைய ஊடகங்களின் வழியே தேசியக் குழுக்களாக தமிழாய்வு செய்து இணையத்தில் பதிப்பித்து சேவையாற்றி வருகிறார்கள். தாளாத மொழிப்பற்றும் வீழாத மொழிவேட்கையுமே தமிழை இயற்கையை வென்று காலத்தை வென்று இன்றளவும் உயிர்ப்போடு இருக்கும் தொன்மொழி என்கிற பெருமையுடன் வைத்திருக்கிறது. சாதி மத பேதங்களைப் புறந்தள்ளி, உலகெங்கும் மொழி சார்ந்த இனக்குழுவாக தம்மை தமிழர்கள் தனி அடையாளப்படுத்திக் கொள்ள தமிழ் மொழி உதவியிருக்கிறது.
தமிழ் இதழியல் என்பது தற்காலத்தியப் புழக்க வடிவில் ஊடகவியல் எனலாம். செய்தித்தாள்கள், நாளிதழ்கள், வார இதழ்கள் என்று அச்சிட்டு வெளிவந்த தமிழ் இதழியல் இன்று இணையத்தளங்களில் செய்தி ஊடகங்கள், நட்பூடகங்கள் என உருமாறிவிட்ட சூழலில் ஊடகவியல் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். முதலில் தமிழின் இதழியல் பயணத்தை நினைவு கூறலாம்.
இதழியல் பொதுவாக நான்கு வகை அடிப்படைப் பயன்பாடுகளை முன்னிறுத்தி செயல்படுகிறது. அவை
- அறிவித்தல்,
- அறிவுறுத்துதல்,
- மகிழ்வித்தல் மற்றும்
- வாணிபம் செய்தல்
ஆகும். இந்த நான்கு வகை குணங்கள் இன்றைக்கு ஒரு பத்திரிகையில் எந்த அளவு பின்பற்றப்படுகின்றன என்பது அந்தப் பத்திரிகையின் மதிப்பீட்டு அளவுகோலாகும். வாசகர்களுக்கும் ஒரு இதழின் தரத்தை நிர்ணயிப்பதில் பொறுப்பு இருக்கிறது. மொத்தத்தில் இது ஒரு இருவழிப்பாதை. வாசகர்களின் தரம் குறைவதால் பொருளாதாரக் காரணங்களுக்காக தமது தரத்தை குறைத்துக்கொண்டு அழிந்த பத்திரிகைகளும் உள்ளன, அதே சமயம் விடாப்பிடியாக தமது தரத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு அதற்கேற்றவாறு வாசகர்களின் வாசிப்பின் தரத்தை உயர்த்திய பத்திரிகைகளும் உள்ளன.
தமிழ் இதழியல் அச்சு இயந்திரங்களில் தமிழ் புழங்கிய பின் ஆரம்பித்தது எனலாம். இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் இயந்திர அச்சுப்புத்தகம் 1578ல் தமிழில்தான் வந்தது என்பது தமிழ் மொழியின் பெருமையை எடுத்துச் சொல்லும் செய்தியாகும். ஒரு கிறித்துவப் பாதிரியார் தமிழைக் கற்றுக்கொண்டு, அதற்கான அச்சு வடிவங்களைக் காரீயவார்ப்பில் எடுத்து அவற்றைக் அச்சுக்கோர்த்து, பிழை திருத்தி படிவம் எடுத்து அச்சு இயந்திரத்தில் பிரதியெடுத்து அவற்றைக் கோர்த்து ஒரு புத்தகமாக்கி வெளியிட்டார். இது எல்லாம் நடந்தது அப்போதைய ஐரோப்பாவில். புத்தகம் வெளியிடப்பட்டது இந்தியாவின் கோவாவில். விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்து 1578ல் வெளிவந்த அந்தப் புத்தகத்தின் பெயர் தம்பிரான் வணக்கம்.

மேலும் பல சமயம் சார்ந்த புத்தகங்கள் தமிழில் வெளிவந்தன. அதே சமயம் தகவல் பரப்பின் முக்கியக் கருவியாக செய்தித்தாள்களை அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியும், போர்ச்சுக்கீசிய மற்றும் பிரான்சு தேசத்தினர் இந்தியாவில் இதழியலை ஆரம்பித்து வைத்தனர். அவை சென்னையிலிருந்தும், தரங்கம்பாடியிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் வெளிவந்தன. வியாபாரம் நிமித்தமாக ஆங்கிலேயே அரசுகளின் எல்லைகளுக்குள் தமிழர்கள் புலம் பெயர ஆரம்பித்தனர். அவர்கள் தமக்குள் செய்தித் தொடர்புகளுக்காகவும் வியாபார மற்றும் சமுதாயத் தொடர்புகளுக்காகவும் செய்தித்தாள்கள் ஆரம்பித்தனர். அரசு சாராத தமிழ் இதழாக முதன் முதலில் 1875ல் சிங்கப்பூரில்தான் சிங்கை வர்த்தமானி என்றொரு தமிழ் இதழ் மகுதூம் சாகிபு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
மகுதூம் சாகிப் அவர்கள் தமது தீனோதய இயந்திர சாலை என்கிற தனது அச்சகத்தில் சிங்கை வர்த்தமானி இதழை அச்சிட்டு வெளியிட்டு சிங்கப்பூரின் இதழியல் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், முதலாளி, தொழிலாளி, பத்திரிகை ஆசிரியர், அச்சிடுபவர், வினியோகிப்பவர் என்று எல்லாமே மகுதூம் சாகிப் தான். சொற்பமான எண்ணிக்கையிலேயே அச்செய்தி படிக்கலானது. இப்படி இதழ் வெளியிடுவதில் லாப நோக்கத்தை விட தமிழில் அச்சிட்டுத் தமிழ்ச் செய்தியைப் படிப்பதில் இருந்த ஒரு பெருமாப்பு காரணமாக இருந்திருக்கலாம். மக்களைச் செய்திகள் படிப்பதற்கு தயார்படுத்திய முக்கியமானவர்கள் அக்காலத்திய பத்திரிகையாளர்கள். பத்திரிகைகளில் வெறும் செய்திகள் மட்டுமின்றி புதினங்களும் இடம்பெறலாயின. பலவேறு வகையான கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என செய்தித்தாள்கள் தமிழாயும் தளமாகவும் மாறியது.
தமிழ்சார்ந்த ஆய்வு முயற்சிகள் காலந்தோறும் முயற்சிக்கப்பட்டு வருகின்றன. பாம்பு சட்டையை உரிப்பது போல, தொடர்ந்து தமிழ் காலத்திற்கேற்ப தம்மை இயல்பு கெடாமல் மாற்றிக்கொண்டே வந்த காரணத்தினால், இணையம் வந்தபின் 1991ல் முதன் முதலாக யுனிகோட் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதே வருடத்தில் இணைய வடிவம் பெற்றது. இதழியல் ஆசிரியர்கள் புதிய முயற்சிகளை என்னாளும் ஆதரித்து வந்திருந்திருக்கின்றனர். பொதுவான செய்திகளைத்தாண்டி, மானிடவியல், பழங்குடி மக்கள் ஆய்வுகள், நாணயவியல், கல்வெட்டியல், தொல்லியல் ஆய்வுகளுடன் சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலான ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் ஆய்வுக்குப் பயன்படும் அறிய குறிப்புகள் பலவும் அவ்வப்போது பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன. நூல் மதிப்பீடுகள், நூல் வெளியீட்டு விவரங்கள் ஆகியனவும் இதழ்களில் இடம் பெற்றன. சர்வதேச, இந்திய அறிஞர்கள் பலரின் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இதழியலும் தமிழ் ஆய்வும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை.
இதழியலில் மொழி நடை முக்கியமானது. 1886ல் சென்னையிலிருந்து வெளிவந்த சுதேசமித்திரன் நாளிதழின் தமிழ் நடை அவ்வளவு படிக்க எளிதாக இருந்திருக்கவில்லை. மேற்குடி மக்கள் படிக்கும் வண்ணமாக தெள்ளிய நாடகத்தமிழில் இருந்தது ஒரு காரணம். தமிழின் சிறப்பு என்னவெனில் இயல், இசை, நாடகம் என முத்தமிழிலிலும் பரிணமித்ததோடு மட்டுமின்றி அதற்கான தெளிவான இலக்கணமும் ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் வழி வகுக்கப்பட்டிருந்தது. அதனால், பேச்சு வழக்குத்தமிழும், எழுத்து வழக்குத்தமிழும் அதற்கான பரிமாணங்களும், இலக்கணங்களும், பயன்படுத்தும் முறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூரில் வழக்கறிஞராக இருந்து வந்த ஆதித்தனார் ஜப்பானிய படையெடுப்பின் போது ஊர்திரும்பியிருந்த காலத்தில் 1942ல் தினத்தந்தி இதழை ஆரம்பித்திருந்தார். ஒரு நாளிதழ் யார் கைகளில் தவழ வேண்டுமோ அவர்தம் மொழி நடையில் அது இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்த ஆதித்தனார் தனது தினத்தந்தி நாளிதழில் அப்படியொரு எளிய நடையைக் கையாண்டார். அதுவே தமிழ்த்தினசரி வரலாற்றில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இதற்கெனவே அவர் தனது நிருபர்களுக்கு நாள்-தாள் கையேடு என்று ஒரு புத்தகமே வெளியிட்டார். இதுவே பிற்பாடு தினச்செய்தியாளர்களின் அரிச்சுவடியாக உருவெடுத்தது.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஏராளமான இதழ்கள் ஆரம்பிக்கப்பட்டன, பின்னர் மூடுவிழா கண்டன. 1924ல் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாக மலேசியாவிலிருந்து வெளிவந்த தமிழ் நேசன் பத்திரிகை பொருளாதாரக் காரணங்களுக்காக 2019ம் ஆண்டில் மூடப்பட்டது. 1935ல் கோ.சாரங்கபாணி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்முரசு, சிங்கப்பூர் தனி நாடான பிறகு சிங்கப்பூரின் முக்கிய தமிழ் நாளிதழாக ஆனது. பொருளாதார ரீதியாக லாபம் ஈட்டாவிட்டாலும் விடாப்படியாக சிங்கப்பூர் ப்ரஸ் ஹோல்டிங்க்ஸ் நடத்திவரும் தமிழ்முரசு இதழ் இன்னமும் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சிங்கையிலேயே ஆரம்பித்து மூடுவிழா கண்டன பல நாளிதழ்கள். அவைகளில் குறிப்பிடத்தக்கவை சிங்கை நேசன், சிங்கை மித்திரன், மலாயாமித்திரன், என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. திண்ணை இணைய இதழில் வெளிவந்த “சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்” என்ற தனது கட்டுரையில் முனைவர் கோட்டி முருகானந்தம் குறிப்பிட்டிருப்பார்.
https://www.roots.gov.sg/stories-landing/stories/From-the-Coromandel-Coast-to-the-Straits Tamil Nesan
2015முதல் “சிராங்கூன் டைம்ஸ்” மாதாந்திர இதழ் கடந்த ஐந்தாண்டுகளாக பொருளாதார இடர்ப்பாடுகளையும் தாண்டி தொய்வின்றி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இது போக அரூ என்கிற கனவுருப்புனைவை மையமாகக் கொண்டு வெளிவரும் இணையக் காலாண்டு இதழ், 2018ல் இருந்து பிச்சினிக்காடு இளங்கோவால் வெளியிடப்பட்டு வரும் “மக்கள் மனம்” என்கிற மாதாந்திர இதழ், 2020லிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கும் தேக்கா எக்ஸ்பிரஸ் எனும் இணையக் காலாண்டிதழ் என சொற்பமான இதழியல் முயற்சிகளே சிங்கப்பூரில் எஞ்சி நிற்கின்றன.
இணைய வழி நட்பூடகங்கள், இணையப் பக்கங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்றவைகள் இதழியலின் அடிப்படைச் சேவைகளைத் தனித்தனியாக பூர்த்திப்பதால், தமிழ் வாசகர்கள் சிதறுண்டு போயுள்ளனர். வாசகர்களைக் கவரவும் அதேசமயம் பொருளாதார ரீதியாகத் தாக்குப்பிடிக்கவும் தற்போதைய இதழியல் துறை பெரும் சவால்களை எதிர் நோக்குகிறது. இச்சூழலில் சிங்கை வாழ் தமிழ் இளையர்கள் தமிழ் இதழியலையும் தமிழ் ஆய்வையும் எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு காப்பாற்றி எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பது நம்முன் உள்ள மிகப்பெரிய சவால்.
செய்திகளை முந்தித் தருதல் என்கிற அரிய கவனத்தை என்றைக்கு வானொலி அறிமுகமானதோ அன்றைக்கே இதழ்கள் இழந்து விட்டன. ஒளிஒலிப்பேழை வடிவாக செய்திகள் தொலைக்காட்சிகளில் வர ஆரம்பித்த பின் வானொலிகளின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. இணையப் பயன்பாடு வளர ஆரம்பித்தபின் தொலைக்காட்சியில் ஒளிஒலிப்பேழைகள் பழைய செய்திகளைச் சொல்லுவதாக உணர்கிறோம். இந்தச் சூழலில் இதழியலாளர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு இதழியல் தொடர்ந்து வளர என்ன செய்யலாம் என்று சிந்திக்கவும் செயல்படவும் வேண்டிய கடமை இளையோர்களுக்கு உள்ளது. அதே சமயம் இதழியலாளர்களும் தம்மை சுயபரிசோதனை செய்து கொண்டு வாசகர்களின் தரத்தை உயர்த்தும் முயற்சிகளிலும் ஈடுபடவேண்டிய கட்டாயம் உள்ளது.
இன்றைக்கு சிங்கையின் பள்ளிகளில் தமிழுக்கென தனி அந்தஸ்து இருந்தாலும், சிறார்கள் பள்ளிகளில் தமிழில் பேசுவதோடு சரி, அதைத்தாண்டி வெகுசிலரே சரளமாக தமிழ் பேசுகின்றனர். மற்றபடி தெரியாத தமிழ்ப் பதங்களுக்கு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி தமிங்கலமாகப் பேசி வருகின்றனர். இப்படி மொழிக்கலப்போடு பேசுவதை தவிர்க்கும் பொருட்டும், தவறாகத் தமிழில் பேசிவிடுவோமோ என்பதாலும், ஆங்கிலத்திலேயே பேசி வருகின்றனர். பல்லின சமய மொழி சங்கமிக்கும் சிங்கப்பூர் சூழலில் ஆங்கிலமே பொதுமொழியாக இருப்பதனால், அதுவே தமிழைப் பேசாமல் இருக்க ஒரு சாக்காகவும் அமைந்து விடுகிறது.
தமிழ் இதழியலை வளர்க்க நமக்கு தமிழில் பேச, தமிழில் படிக்கத்தெரிந்த வாசகர்கள் வேண்டும். அவர்களைக் கவரும் வண்ணம் கட்டுரைகள் புதினமான நடைகளில் வரவேண்டும். செய்தி என்பதைத் தாண்டி அறிவுறுத்துதல், மகிழ்வித்தல் மற்றும் வாணிபம் சார்ந்த செய்திகள் என்று இதழியல் வளர்ந்தாக வேண்டுமானால், அதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இளையர்களிடம் உள்ளது. இளையோர்களின் வாசிப்புத்தரத்தை உயர்த்துவதால் மட்டுமே தொடர்ந்து தமிழ் இதழியலையும், தமிழ் ஆய்வையும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
இளையர்கள் தொடர்ந்து இதழியலிலும் ஆய்விலும் பங்களிக்க என்ன செய்யலாம்?
பள்ளிகளில் ஆறாம் வகுப்பு வரை, மேல் நிலை மற்றும் உயர் மேல் நிலை வகுப்பு வரை என இரு பிரிவுகளாக சுத்தத் தமிழில் மட்டுமே, அதாவது ஆங்கிலம் கலக்காமல், சம்ஸ்கிருதம் கலக்காமல், தூய எளிய தமிழில் அதுவும் வழக்குத்தமிழில் அந்த நேரத்தில் அளிக்கப்படும் உடனடித் தலைப்பில் பேசும் போட்டி வைக்கப்பட்டு மாணவர்கள் ஊக்குவிக்கப் படவேண்டும். பரிசுகள் நான்கு இலக்கங்களில் இருக்க வேண்டியது மிக முக்கியம். இதற்கான பரிசுப் பொருளை புரவலர்கள் சிலரை அணுகிப் பெறும்போது பரிசுத்தொகை வழங்குவதில் சிரமம் இருக்கப் போவதில்லை. இதனால் வாசிப்புத்தன்மை கூடும்.
தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த எண்ணும்போது அதைத் தெரிந்து கொள்வது எவ்வாறு என்பதில் ஒரு குழப்பம் உள்ளது. இதைக் களைய சிங்கப்பூரின் தேசிய மொழிபெயர்ப்புக்குழு “சொல்வளக் கையேடு” என்று ஏறக்குறைய நான்காயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு புதிய கலைச்சொற்களைச் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்த முயற்சியில் மேலதிக முயற்சியாக தமிழில் உள்ள நிகண்டு என்றும் அகராதி என்றும் இருவகை சொற்கோவைகளையும் சேர்த்து, அத்துடன் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்களையும் ஒருங்கே இணைத்து தமிழ் இணையப் பொது அகராதி ஒன்றை கூட்டு முயற்சியில் (CrowdSourcing) உருவாக்க வேண்டும். இதனால் தொழில் மற்றும் கலைச் சொற்கள் தமிழில் அடையாளம் காணப்படும். அனைவருக்கும் இது பொதுவான தமிழ்ச்சொற்கள் அடங்கிய அகராதியாகவும் புதிய சொற்கள் தொடர்ந்து இணைக்கப்படும் வழிமுறையாகவும் உருவாக்க முடியும். இதை கூகுள் போன்ற இணையத் தேடுதளங்கள் மொழி பெயர்ப்புக்கு பயன்படுத்தும் சூழலும் உருவாகும். முதலில் சொல்லப்பட்ட தூய தமிழ்ப் பேச்சுப் போட்டிக்கு இது பெரிதும் உதவும்.
சிங்கைக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து நாட்டுத் தமிழ் பேசும் மாணவர்களிடையே ஆய்வுக் கட்டுரைப் போட்டி வருடா வருடம் கல்லூரிகள் இடையிலேயேயான ஒரு ஆய்வு மாநாட்டின் வழி நடத்தப்பட வேண்டும். இதன் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வருடாவருடம் வெளியிடப்படவேண்டும். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்திய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் தரத்தை உயர்த்த முடியும்.
சிங்கையில் நாடு தழுவிய பேச்சுப்போட்டி தமிழ்மொழி மாதத்தில் தொடர்ந்து நடைபெற்றாலும், அவை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நடந்து முடிந்து விடுகின்றது. இதைப் பரவலாக்க, பொதுவான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஆய்வுக்கட்டுரைப் போட்டி, சிறுகதைகள் போட்டி என புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கி அனைத்து சிங்கப்பூர் வசிப்பாளர்களுக்கான போட்டியாக நடைபெறல் வேண்டும். இதனால் வெளிநாட்டு ஊழியர் குடியிருப்புகளுக்குள் ஒளிந்து கிடக்கும் தமிழ்ப் புலமையை வெளிக்கொணரவும், அவற்றை பொதுப்படுத்துவதால் சிங்கப்பூரர்கள் போட்டித்தன்மையுள்ள சூழலில் தமிழை ஊக்கமாக பயன்படுத்தவும் மிகவும் உதவும். பரிசுத்தொகையும் அதனால் கிடைக்கும் ஊடக வெளிச்சமும் அதிகமாக இருப்பது மிக அவசியம்.
உலகெங்கும் உள்ள தமிழகம் தவிர்த்த பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் தமிழ் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பொருளுதவி ஒதுக்கி உதவ சிங்கப்பூர் சார்ந்த புரவலர்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சிங்கப்பூரில் நேரில் படைக்க அழைப்பது என்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதால், சிங்கப்பூர் தம்மை தமிழ் வளர்த்து, ஆராய்ந்து, தமிழகத்தைத் தாண்டிய உலகளாவிய தமிழ் மையமாக அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்.
சிங்கப்பூரின் தொழில் நுட்ப மற்றும் பல்கலைக் கழக மாணவர்களிடையே தமிழ் முரசு மற்றும் இன்னபிற சிங்கப்பூரின் இதழ்கள் சேர்ந்து மாணவ நிருபர் திட்டம் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். இவர்களின் படைப்புகளை இந்த இதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவிப்பதால் புதிய தலைமுறை பத்திரிகையாளர்கள் தோன்றி தொடர்ந்து மாறிவரும் இணையத் தொழில் நுட்பத்திலும் தமிழ் இதழியலைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க உதவும்.
கலாச்சாரம், இனக்குழும அடையாளம், பாரீய வரலாறு என அனைத்தையும் இணைக்கும் ஓரிணைப்புள்ளி, மொழி. மொழியை இழந்தால் தமிழர் என்ற அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் உள்ளது. தமிழர் என்கிற தம் அடையாளத்தை இழந்துவிடாமல் தக்க வைத்து மேலும் சிறப்பிக்கும் பெரும் பொறுப்பு இக்கால இளையோர்களிடம்தான் உள்ளது.
பின்குறிப்பு
வளர்தமிழ் இயக்கம் சிங்கப்பூரில், அரசு, தமிழ் அமைப்புகள், பொதுமக்கள் என னைவரின் ஆதரவுடன் முன்னெடுக்கும் தமிழ்மொழி மாத நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் ஏப்ரலில் நடந்துவருகின்றன. இவ்வாண்டு சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் ஒருங்கிணைத்த மெய்நிகர் ஆய்வரங்க மாநாடு குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக அமைந்தது.
‘2020-களில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் – சவால்கள், வாய்ப்புகள், உத்திகள்’என்கிற கருப்பொருளை மையமாகக்கொண்டு படைக்கப்பட்ட சுமார் 60 கட்டுரைகள் ஏப்ரல் 18 அன்று நடந்தேறிய இணையவழி ஆய்வரங்கில் வாசிக்கப்பட்டன. 16 மெய்நிகர் அரங்குகளில் 350க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பதிவுசெய்து கருத்துகளைப் பகிர்ந்தும் விவாதங்களை எழுப்பியும் பங்களித்தனர்.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ அரங்கில் அழகுநிலா, சிவானந்தம் நீலகண்டன், ஜமால் சேக், ஷாநவாஸ் ஆகியோர் அடங்கிய நால்வரணி பங்கேற்றது. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் 20 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகளாக நடுவர் குழு ஒன்றினால் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றுள் இந்த நான்கு கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.
இக் கட்டுரை தி சிராங்கூன் டைம்ஸ், 2021 மே மாத இதழில் வெளியிடப்பட்டது.