The Religion of Data - Dataism
தரவியம் (Dataism)

[vc_row content_placement=”top”][vc_column][vc_column_text]

தரவியம் (Dataism)

ஆதிகாலத்தில் மனிதன் பாறைச் சுவற்றில் தான் கண்டதைச் சித்திரமாக வரைந்ததை பிற்பாடு பிறந்தவர்கள் புரிந்து அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதில் இருந்து தரவியம் ஆரம்பமாகிறது. தொழில் நுட்பம் வேறாயினும் காலங்காலமாக இதே சுழற்சிதான் நடந்தேறி வருகிறது. அனுபவம் அறிவாகவும், அறிவு தரவுகளின் வழி அடுத்த தலைமுறைக்கு கடத்தப் படுவதுமே தரவியம் எனக் கூறலாம். தரவுகளை அழிப்பது, அதாவது நூலகங்களை அழிப்பது ஒரு சமூகத்தை அழிப்பதற்குச் சமமானது என்பதால்தான் படையெடுப்புகள் தோறும் அறிவார்ந்த படைப்புகள் அழிக்கப்பட்டன. நாலந்தா நூலகம் அழிந்த வரலாறு, சரஸ்வதி மஹால் நூலகம் அழிந்த வரலாறு என சரித்திரச் சான்றுகள் உள்ளன. அதே சமயம், தரவுகளாக்கப்பட்ட அதீத கற்பனைகள் பிற்காலங்களில் உண்மைச் சம்பவங்களாகவே நம்பப்படும் அதிசயமும் நடக்கிறது.

தரவுகள் வெறுமனே தரவுகளின் தொகுப்பாக இருக்கும் வரையில் அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. பழத்திற்குள் இருக்கும் வித்து மண்ணுக்குள் செல்லும் வரையில் வெறுமனே வித்தாக இருப்பது போல. சிந்திக்கும் மனித மனம் இப்படி பல கூறுகளிலிருந்து பெறப்பட்டும் தரவுகளை ஒன்றுக்கொன்று இணைத்து செயலாக்கம் பெற வைக்கும் முடிவுகளாக மாற்றுவதால் மானுட வளர்ச்சி கண்டு இன்றைக்கு விண்ணைத்தாண்டி சென்று கொண்டிருக்கிறோம். இந்த சிந்திக்கும் திறன் அரிய சித்திகளைச் சாதித்திருக்கிறது. இந்த சிந்திக்கும் திறனை கணிணிகள் எடுத்துக்கொண்டு மனிதனுக்கு இணையாக தரவுகளை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கும்போது பெருமை கொண்ட மனிதம், கணிணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் கணிணி தம்மை வென்று விடுமோ என்ற அச்சம் தற்போது மேலோங்கி வருகிறது.

தரவியம் எடுத்த பேருருவைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

[/vc_column_text][vc_column_text]

நம்மைப் பற்றிய தரவுகள் நம்மையறியாமலேயே இணையமெங்கும் விரவிக்கிடக்கின்றன. இனி வரும் குழந்தைகள் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இணையத்தில் புழங்கிப் பதிந்த நம்முடைய மின் தடங்களைத் தேடி அழிக்கிற சாத்தியம்  இனி இல்லை என்றே தோன்றுகிறது.

[/vc_column_text][vc_column_text]

தரவுகள் எங்ஙனம் சேகரிக்கப்படுகின்றன என்று பார்த்தால், நாம் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பே நாம் எழுதிக்குவித்த குறிப்புகள், பேசிச் சேமித்த ஒலி மற்றும் ஒளிஒலி நாடாக்கள், என அதற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கரையான்களுக்கும் இயற்கைப் பேரிடருக்கும், பகைவரின் அழிப்பிற்கும் தப்பிய தரவுகளை நாம் இன்றைக்குப் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். அது போக, இணையத்தில் நாம் இடும் ஒவ்வொரு வார்த்தையும், சொல்லும், செயலும் அனைத்துமே எங்கோ பதியப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது. அவையனைத்துமே பாற்கடலைக் கடைந்து அமுதெடுத்தாற்போல, ஒரு நபரைப் பற்றிய அவருக்கே தெரிந்திராத அரிய தகவல்களை வெளிக்கொணரும் உத்தியை தொழில் நுட்பம் நமக்கு அளித்திருக்கிறது. தரவிய அலசல் வழி அவை சாத்தியமாகிறது. இந்த அலசல் நன்மையாகவும் முடிகிறது, தீமையாகவும் முடிகிறது. நன்மைகள் நாமறிந்ததே, அறியாதது அது ஏற்படுத்தும் தீய விளைவுகள்.

சமூக வலைத்தளங்கள் இலவசமாக அனுமதியுடன், நமது கணங்களைப் பரிமாறிக்கொள்ள தளமும் அமைத்து தருகிறது. அதற்குப் பெரும்பொருள் செலவாகுமே என்று யோசித்தால், அவர்களுக்கு நம்மைப் பற்றியும், நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றியும், நாம் சேர்ந்த சமூகத்தைப் பற்றியும், நேர்காணல் நடத்தினாலும் பெறமுடியாத அரிய தகவல்களைச் சேகரித்து, ஆய்ந்து அதன் வழி நம்முடைய தரவுகளைப் பன்முகப் பயன்பாட்டுக்கு நடத்தும் மறைமுகக் காரணம் உள்ளது. நாமும் நம்மைப் பற்றிய தகவல்களுமே இங்கு வியாபாரப் பொருள்.

உதாரணத்திற்கு, 2017ல் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் எந்த வித அரசியல் பின்புலமும் இருந்திராத கட்டிடம் வாங்கி விற்கும் ஒரு தொழில் அதிபர் அமெரிக்க அதிபரானார். அதற்குப் பின் இருந்தது, லண்டனைச் சேர்ந்த ஒரு தரவியலசல் நிறுவனம்.  நாமெல்லாம் முக நூல் என்றறிந்த ஒரு செயலி வழியேயும், செயல் பேசி அனுப்பித்தரும் அரிய தகவல்களையும் வைத்துக் கொண்டு, மக்களின் மன நிலையையே மாற்றி, ஒரு தொழிலதிபரை அமெரிக்க அதிபராக்க முடியும் என்று காட்டியது அந்த நிகழ்வு.  இது புதிதல்ல, இதற்கு முன்பே இது 2014ல் உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டொன்றில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு வெற்றியும் பெற்றது. சனநாயக நாடுகளில் ஆட்சி மாற்றம் காணும் உத்தியாக இருந்த இது, கம்யூனிச நாடுகளில் எடுபடவில்லை. ஏனென்றால் அவை ஊடகங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

மக்களைப் பற்றிய தரவுகள் அவர்களறியாமலேயே சேகரிக்கப்பட்டு வந்தது இன்று நேற்றல்ல. இதற்குப் பெயர், ஒற்றறிதல்.  அய்யன் வள்ளுவன் ஒற்றாடல் என்றொரு அதிகாரமே எழுதியிருக்கிறார். இன்று அரசுகள் நவீன தொழில் நுட்பங்கள் வழியாக ஒற்றாடலைத் திறம்படக் கையாள்கின்றன. அமெரிக்க அரசு ஒரு படி மேலே போய் ஒற்றாடலின் உச்சத்தில் உள்ளது. சிக்கல் என்னவென்றால், அறிந்து சேர்த்த அனைத்துத் தரவுகளையும் ஆராயவோ, அவற்றைப் பகுத்துணர்ந்து செயலாக்கம் பெற வைக்கவோ நேரமும் இல்லை, ஆட்களும் இல்லை. எனவேதான் முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க முடியாமல் அரசுகள் திணறிப்போகின்றன. தரவுகளின் அடிப்படையில் குற்றம் நிகழ்ந்த பின் குற்றங்களை ஆராயவே அவை பெரும்பாலும் பயன்படுகின்றன. குற்றக் கண்காணிப்பு குற்றத் தடுப்புக்கு ஆதாரம்.

ஆனால் குற்றக் கண்காணிப்புத் தொழில் நுட்பம் அரசியல் எதிரிகளை அழித்தொழிக்கவே இன்றைக்கு அரசுகள் பயன்படுத்துகின்றன. பல நாடுகளில் பிகாஸஸ் என்னும் செயல்பேசிச் செயலி ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் அடங்கிய பாடில்லை. அமெரிக்க அரசு ஜெர்மன் அதிபரின் உரையாடலை ஒட்டுக்கேட்ட தருணம் கூட்டணிக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சியைச் சொல்லி மாளமுடியாது.  இந்தியாவின் நீதிமன்றங்கள் உள்ளூர் அரசியலில் அந்தச் செயலி ஏற்படுத்திய அதிர்ச்சியில் திகைத்துப் போய் நிற்கின்றன. தரவியம் நன்மையையும் தருகிறது தீமைகளையும் தருகிறது.

தரவுகளைப் பயனாளர்கள் அறியாமலேயே சேகரித்தல், பின்னர் அவற்றை வணிகமாக்கி விற்றுப் பணம் சேர்த்தல் என ஒரு பெரிய வர்த்தகமே இங்குள்ளது. இலவசம், பரிசுகள் என்னும் தரவியத் தூண்டில்களில் சொருகப்பட்ட புழுக்களுக்காக, தமது தேசிய அடையாள எண், முகவரி, செயலி எண், சம்பளம், வேலை செய்யும் இடம் என அனைத்தையுமே  நாமே உரித்துக் காட்டும் அவலம் நாம் அறியாமலேயே நடக்கிறது.  விளைவு கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சூதாட்ட விளம்பரங்கள் என கண்ணுக்குத் தெரியாத மிக நுணுக்கமான தூண்டில்கள் நம் சேமிப்பை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்திய வங்கியொன்றின் குறுஞ்சேதிச் சேவை ஒன்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி வங்கிக் கணக்கை சூறையாடிய சம்பவம் அதற்கொரு உதாரணம். யாரும் யாரையும் குறை சொல்ல முடியவில்லை. லாபத்தில் நட்டம் என வங்கி இழப்பைச் சரிசெய்தது தான் மிச்சம்.

நாம் பயன்படுத்தும் செயல்பேசியிலிருந்து, நாம் அன்றாடம் பாவிக்கும் இணைய உலாவிகள் வரை நம்மைக் கண்காணிக்கின்றன. நம்மைப் பற்றிய தரவுகளை யாருக்கோ அனுப்புகின்றன. நாம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். நம்மைப் பற்றிய தரவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன. தரவியத்தின் நிழல் கரங்கள் நம்மை எப்போதும் நிரடிக்கொண்டே இருக்கின்றன. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் நம்மை இணையப் போதையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். கடந்த இதழில் சிவானந்தம் நீலகண்டன் இது பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.

தனி நபர் சார்ந்த தரவுகள் எப்படி ஆட்சி மாற்றத்தையும், தனி நபர்களுக்கான இழப்பையும் ஏற்படுத்துகின்றன எனப் பார்த்தோம். ஆனால் நம் கண்ணில், காதில், கைகளில் திட்டமிடப்பட்டுப் பரப்பப்படும் பொய்த் தரவுகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?

ஊடகங்கள் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று பறை சாற்றப்பட்டு அதற்கென முக்கியத்துவம் கொடுப்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். இது சன நாயகம் அல்லது கம்யூனிசம் சாரந்தது எனப் பிரிக்க இயலாது அனைவரும் மதிக்கும் ஒரு அம்சம்.  ஊடகங்கள் தொடர்ந்து இயங்க பொருளாதாரம் மிக முக்கியம். அந்த வகையில் லாப நோக்கோடு இயங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஊடகங்கள் இலக்காகின. விளைவுகள் வேறு மாதிரியாக உருவெடுத்தன. ஆதிக்க அரசுகள் சாதிக்க வேண்டி ஊடகங்களைத் தம் கைக்குள் வைத்துக் கொண்டன. ஊடகங்களின் வழி அரசுகளின் பொய்கள் அச்சடிக்கப்பட்டு உண்மையாக உரைக்கப்பட்டன. உரத்துப் படித்த பொதுஜனம் அச்சடித்த பொய்களை உண்மையென நம்பினார்கள், அவற்றைச் சான்றாகவும் காட்டி மேலும் பல பொய்களைக் கட்டமைத்தார்கள். ஈராக்கில் அணுகுண்டு இருப்பதாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்யை பல்லாயிரம் உயிர்கள் இழந்து ஒரு நாடு அழிந்து கீழ் நிலைக்குப் போன பின் அந்தக் கூற்று பொய்யென அறிவித்தது ஒரு வல்லரசு.

இப்படிப்பட்ட பொய்களை ஆராய்வதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் அரசின் செலவிலேயே ஒரு அமைப்பு பொய்ச் செய்திகளைப் பரப்புவோரைப் பற்றி ஆராய அமைக்கப்பட்டது. அதன் பெயர் https://www.disinfo.eu/  இந்த தன்னார்வ அமைப்பு பிரஸ்ஸல்ஸிலிருந்து இயங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன் (2019) இந்த அமைப்பு இந்தியாவிலிருந்து எப்படிப் பொய்ச்செய்திகள் பரப்பப்படுகின்றன என்று ஒரு புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதைப் படிக்கப் படிக்க திகிலாக இருக்கிறது. பின் குறிப்பில் உள்ள இதன் குறிலில் அந்த அறிக்கை உள்ளது. வேடிக்கை என்னவென்றால், அந்த அமைப்பின் பெயரையே உல்டா செய்து ஒரு அனானியாக ஒரு அமைப்பு https://thedisinfolab.org/ ஒன்று உருவாகி இருக்கிறது. மூல ஆதாரங்கள் எதையும் இந்த அமைப்பு காட்டுவதில்லை, அதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை.

மக்களை இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளிலிருந்து காப்பாற்றுவது இப்போதெல்லாம் நாடுகளின் முக்கியமான ஒரு வேலையாக இருக்கிறது. சிங்கப்பூர் அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றிய சில சட்டங்கள் கடுமையான வரைமுறைகளை கொண்டிருந்தாலும், அவற்றின் நோக்கம் நாட்டை பொய் சூழ்ச்சி செய்து குழப்பம் விளைவிப்போரை நோக்கியே இருப்பதால் நல்ல எண்ணம் கொண்டோர் அச்சப்படத் தேவையில்லை.

நம்மைப் பற்றிய தரவுகள் நம்மையறியாமலேயே இணையமெங்கும் விரவிக்கிடக்கின்றன. இனி வரும் குழந்தைகள் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இணையத்தில் புழங்கிப் பதிந்த நம்முடைய மின் தடங்களைத் தேடி அழிக்கிற சாத்தியம்  இனி இல்லை என்றே தோன்றுகிறது.

தரவியம் ஒரு மதம் என்கிறார்  யுவால் நோவா ஹராரி என்கிற இஸ்ரேலிய கட்டுரையாளர். மதத்தில் சில கோட்பாடுகள் உண்டு, கட்டுப்பாடுகள் உண்டு,  என அனைத்துமே தரவியம் என்கிற மதத்தில் உண்டு என்கிறார் அவர். தரவியம் வழி ஒரு மனிதனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதும், அந்த மனிதனே அவனைப் பற்றி அறிந்திராத பல செய்திகளைத் தரவியம் அறிந்திருக்கும் என்பதும் அவர் கூற்று. ஒரு மனிதனின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை சில தரவுகளை மாற்றுவதன் மூலம் மாற்ற முடியும் என்கிற கோட்பாடுதான் நோவா ஹராரியின் தரவிய மதம்.

தரவுகளைச் சேகரித்து சேமித்து ஆராய்ந்து அதன் வழி பிரயோசனப்படும்படியான செயல் முடிவுகளை அறிவதற்குத் தரவியம் பயன்பட்டாலும், அதன் சில கூறுகளை மாற்றித் தனக்குத் தேவையான மாற்றங்களைச் சமூகத்தில் ஏற்படுத்துவது அதன் மிகப்பெரிய சாதனை. ஆனால் இது பெரும்பாலும் சனநாயக நாடுகளில் ஆட்சிகளை மாற்றவும், அதிகாரமிக்க நாடுகளில் மக்களைக் கட்டுப்படுத்தி கைக்குள் வைத்துக் கொள்வதற்குமே பயன்படுகிறது. தமக்குச் சாதகமற்ற ஒருமித்த கருத்து மக்களிடையே ஏற்பட்டு விடாமல் தடுப்பதே அரசு சார்ந்த இந்த தரவியப் பேருருவின் முக்கிய நோக்கம். அந்தக்கருத்துருவைத் தனக்குச் சாதகமாகவோ, எதிரி நாடுகளுக்குப் பாதகமாகவோ மாற்றுவதுதான் அரசுகள் இவற்றைக் கையாள்வதின் முக்கியக் காரணமும் கூட.

 

Ref:

  1. https://www.disinfo.eu/publications/indian-chronicles-deep-dive-into-a-15-year-operation-targeting-the-eu-and-un-to-serve-indian-interests/
  2. https://www.disinfo.eu/publications/indian-chronicles-a-total-abuse-of-the-un-human-rights-council/
  3. https://www.disinfo.eu/publications/indian-chronicles%3A-a-recipe-to-set-up-fake-media-and-fake-journalists/

[/vc_column_text][/vc_column][/vc_row]