சனநாயகமும் நம்பிக்கையும்
உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியாவின் சனநாயகத்தைப் பற்றி சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது இந்திய ஊடகங்களில் பிறழ்வுடன் திரிக்கப்பட்டது. பலருக்கும் சங்கடமான ஐயம். பிரதமரின் முழு உரையையும் படித்திருக்கப் பலருக்கும் வாய்ப்பில்லாத குறைந்த நேரத்தில் ஊடகங்கள் நம்மிடம் நிறுவ முயற்சிக்கும் கருத்துகள் மட்டுமே நம்மை நோக்கித் தொடர் அம்புகளாக வரும்போது யார்தான் தப்ப முடியும்?
பிரதமர் உண்மையில் என்னதான் சொன்னார் என்று ஆய்வதற்கு முன் சனநாயகம் எப்போது ஆரம்பித்தது, அதனால் விளையும் நம்பிக்கை என்ன என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளில் கிரேக்க ஏதென்ஸில் அறிவார்ந்த குழு ஒன்று சனநாயகம் பற்றித் தீவிரமாக விவாதித்து அதை நடைமுறைப்படுத்துவது என்று தீர்மானித்துப் பரிசோதனை முயற்சியும் செய்தார்கள். அடுத்த நூறு ஆண்டுகளில் ரோமாபுரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. சாக்ரடீஸ், அவரின் சீடர் ப்ளாட்டோ, அவரின் சீடர் அரிஸ்டாட்டில் என சிந்தனையாளர்களின் காலம் அது.
அதாவது, வாரிசு அடிப்படையில் அதிகாரம் முழுக்க ஒரு இடத்தில் குவிந்து கிடக்காமல், மக்களால் மக்களுக்காக மக்களிலேயே ஒருவரை ஆட்சி செய்யத் தேர்ந்தெடுப்பது. அது வெற்றிகரமாகவும் நடந்தேறியது. ஆனால், அப்போதைய வடிவத்திற்கும் தற்போதைய நிகழ்கால சனநாயகத்திற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. என்றாலும் ரோமாபுரத்து சனநாயகச் சிந்தனைகளே நவீன சனநாயகங்களுக்கான தோற்றுவாய் எனலாம்.
சோழ நாட்டில் குடவோலை முறை இருந்திருக்கிறது. வாரிசு அரசியலின்றி. நியமனமின்றி, தகுதி வாய்ந்த ஒருவரை குலுக்கலின் மூலம் தேர்ந்தெடுக்கின்ற வழக்கம் இருந்திருக்கிறது. அது உள்ளூர் நிர்வாகத்திற்கு மட்டுமேயன்றி நாட்டை ஆள்வதற்கில்லை. இது சனநாயகத்தில் சேருமா இல்லையா என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
கி.பி.1610வாக்கில் இங்கிலாந்தில் மன்னருக்கு மக்களுக்கான பொதுச் சட்டத்தை எவ்வகையிலும் மற்றவோ, நீக்கவோ அதிகாரம் கிடையாது என்று ஒரு தீர்மானம் ஏற்றப்பட்டு மன்னரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனாலும் மன்னராட்சி ஒரு பக்கம் இருந்தாலும், குடவோலை முறைப்படி கிராமங்கள் நிர்வகிக்கப்பட்டது போல, இதே முறையை பல நாடுகள் இன்றளவும் பின்பற்றி வருகின்றன. உதாரணம் இங்கிலாந்து, மலேசியா, தாய்லாந்து.
முழுமையான சனநாயகம் என்பது அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது எனலாம். எனினும் அமெரிக்காவில் பெண்களுக்கென ஓட்டுரிமையே 1920களில்தான் கொடுத்தார்கள். அது வேறு கதை. முதலாம் உலகப்போர் ஒரு குழப்பமாக முடிவுக்கு வந்திருந்த வேளையில், மன்னராட்சியா, மக்களாட்சியா என்கிற குழப்பம் பல நாடுகளில் தோன்றியிருந்தது, அதற்கு முக்கியக் காரணம் போர்மேகங்கள் விலகியிருந்த அந்தக் காலக்கட்டத்தில் இருந்த அமெரிக்காவின் வளர்ச்சி சனநாயகத்தின் மீதான ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது.
இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தபோது, சனநாயகம், கம்யூனிசம் என இரு துருவங்கள் தோன்றியிருந்தன. பிற்பாடு வந்த பல தசாப்தங்கள் சனநாயக கம்யூனிச ஒப்பீடுகளிலும் ஒடுக்கப்படலிலுமே (பனிப்போர்) கழிந்தன. அப்படி இரண்டாம் உலகபோருக்குப்பின் தோன்றிய பல சனநாயகங்கள் உண்டு. இஸ்ரேல் (1948), இந்தியா (1950), சிங்கப்பூர் (1965) ஆகியவற்றைப் பற்றி மட்டும்தான் நாம் பார்க்கப் போகிறோம். ஏனென்றால் நம் பிரதமர் இந்த மூன்று நாடுகளைப் பற்றித்தான் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஹிட்லரின் கோர முடிவோடு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபின், பல இடங்களில் தோற்று, பொருளாதார நிலையில் பலவீனமாக இருந்த இங்கிலாந்து பல்வேறு காலனிகளுக்கு சுதந்திரம் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்நிலையில், ஹிட்லரால் பாதிக்கப்பட்டிருந்த யூதர்களுக்கு தார்மீகக் கடன்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. அப்போதைய யூதர்களின் தலைவராக தாவித் பென் குரியன் 1948 மே 14ஆம் தேதி மதியத்தில் இறுக்கமான சூழலுடன் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு சிறு அறையில் வேர்க்க விறுவிறுக்க தனது சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். தம் இஸ்ரேலிய நாடு எப்படி இருக்க வேண்டும் என்கிற தனது கனவை இவ்வாறு வாசிக்கிறார்:
“உலகெங்கிலுமுள்ள யூதர்களையும், நாடின்றித் தவிப்போர் எவரையும், இந்த இஸ்ரேல் நாடு வரவேற்கிறது. இந்த நாடு இந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கான வளர்ச்சியில் கவனம் செலுத்தும். இஸ்ரேலிய முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த சுதந்திரம், நீதி, அமைதி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், சமூக சமத்துவம், அரசியல் உரிமை ஆகியவற்றை, மத, இன, பால் வேறுபாடின்றி அனைவருக்கும் அளிப்பதுடன், தம்முடைய மதச் சுதந்திரம், கருத்துரிமை, மொழி, கல்வி மற்றும் கலாச்சாரத்தை முழுச் சுதந்திரத்துடன் அனுபவிக்க இந்த அரசு உறுதி பூண்கிறது. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க இந்த அரசு உறுதி கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபை வகுத்த கொள்கைகளின் படி இஸ்ரேல் தொடர்ந்து நடக்கும்”
இதன்படியே இஸ்ரேலிய அரசு சனநாயக அரசை நிறுவியது. தேர்தல்கள் நடந்தன. யூதர்கள், அரபுகள் என அனைவரும் வாக்களித்தனர். மத்தியக் கிழக்கில் பாலைவனத்தில் பூத்த ரோஜாவாக இஸ்ரேல் அக்காலத்தில் இருந்தது.
இஸ்ரேல் தனது எல்லையை 1970களில் விரிவுபடுத்த ஆரம்பித்தபோது, பென் குரியன் தனது கனவுகளை மீறி இஸ்ரேல் நடப்பதாக மிகுந்த வருத்தம் தெரிவித்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்றளவும், சுதந்திரப் பிரகடனத்தில் சொல்லப்பட்டிருந்தவற்றிற்கு மாறாக மதம், எல்லைகள், சனநாயகம், சட்டம், யூத உரிமைகள் ஆகிய ஐந்து விடயங்கள் விவாதங்களுக்குட்பட்டே இருந்து வருகின்றன. பென் குரியன் தன் கனவு சிதைந்து உருமாறியதைக் கண்டு கலங்கியே மாண்டு போனார்.
வருடம் | தேர்தல் நாள் | நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாள் | நாடாளுமன்றத்தின் ஆயுள் |
2019 | 9 Apr 2019 | 30 May 2019 | 52 நாட்கள் |
2019 | 17 Sep 2019 | 11 Dec 2019 | 86 நாட்கள் |
2020 | 2 Mar 2020 | 21 Dec 2020 | 295 நாட்கள் |
2021 | 23 Mar 2021 | – | நடப்பு நாடாளுமன்றம் |
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நான்கு முறை தேர்தல் நடந்திருக்கிறது. பென் குரியன் காலத்து ஆட்களுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் சரிக்குச் சமமான உட்கட்டப் போர் உச்சத்தை அடைந்திருப்பதன் காரணமாக இப்படி, பென் குரியனின் சுதந்திர இஸ்ரேலியக் கனவு உருமாறி விட்டிருக்கிறது என்கின்றனர்.
1947ல் விடுதலை பெற்று, 1950ல் குடியரசான இந்தியாவை தனது சகாக்களுடன் கட்டமைக்கத் தலைமையேற்றவர் ஜவஹர்லால் நேரு. ஏழைகள் மிகுந்த ஒரு நாட்டைக் கட்டமைக்க பெரும் கனவு காண வேண்டியிருந்தது மேல்தட்டுவாசி நேருவுக்கு. அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு முப்பது மாதங்களாக உழைத்து அரசியலமைப்பை உருவாக்கியது. அதன் முதல்பக்க முகப்புரை மொத்தக் கனவையும் இப்படிச் சொல்கிறது:
இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச் சமுதாயமும் சமயச் சார்பின்மையும் கொண்ட மக்களாட்சிக் குடியரசாக நிறுவவும்; அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல், நீதி, எண்ணம், வெளிப்பாடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் சுதந்திரமான தன்னுரிமை; சமுதாயப் படிநிலை, வாய்ப்பு, நலம் இவற்றில் சமத்துவம் ஆகியவற்றை எய்திடச் செய்யவும்; அவர்கள் அனைவரிடையேயும் தனிமனித மாண்பு, நாட்டு மக்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949ம் வருடம் நவம்பர் 26ம் நாளான இன்று, ஈங்கிதனால், இந்த அரசியலமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்.
உலகின் மிகப்பெரிய சனநாயகமான இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் வழி புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் என்பதே தேர்தலில் போட்டியிட அதிகபட்சத் தகுதி. அனைவரும் பங்கேற்க வசதியாக இந்தியச் சனநாயகம் தனது கதவுகளை விரியத் திறந்து வைத்தது.
ஆனால் நாடாளுமன்றத்தில் உள்ளே நுழைந்தோர் பெரும்பாலும் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருந்த உரிமைகளின்படி உள்ளே நுழைந்திருந்தாலும், குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வேட்பாளர்களைப் பற்றி கல்வித்தகுதி, பொருளாதாரத்தகுதி, வழக்குகளின் எண்ணிக்கை போன்றவற்றை இந்தியத் தேர்தல் ஆணையம் இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. குற்றப்பிண்ணனி மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகரித்து வருவது நாடாளுமன்ற அவை மாண்பு காக்கும் வகையில் இல்லை.
வருடம் | குற்றம் நிலுவையிலுள்ள எம்பிக்கள் (மொத்தம் – 544) | சதவீதம் | கடும் குற்றம் நிலுவையிலுள்ள எம்பிக்கள் (மொத்தம் – 544) | சதவீதம் |
2004 | 128 | 24% | 58 | 11% |
2009 | 162 | 30% | 76 | 14% |
2014 | 185 | 34% | 112 | 21% |
2019 | 233 | 43% | 159 | 29% |
இந்திய நாடாளுமன்றத்தில் குற்றப் பின்னணிகொண்ட உறுப்பினர்கள்
(Source: adrindia.org)
பனிப்போர் காலகட்டத்தில் கம்யூனிச நாடுகளுக்கெதிராகப் பரப்பப்பட்டிருந்த எதிர்மறையான கருத்துக்கள், சனநாயகத்தை மிகைப்படுத்திப் பேசுவதாக அமைந்திருந்தது. ஆனால் உண்மையில் சனநாயகம் வல்லான் வகுத்தது வாய்க்கால் என்போருக்கு மட்டுமே வாழ்வையும் வளர்ச்சியையும் தந்தது. இது உலகெங்கிலுமுள்ள சனநாயக நாடுகளில் வழமையாக இருந்தது.
இப்படிப்பட்ட மாறுதலைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் சிங்கப்பூரை மலேசியா வெளியே தள்ளிக் கதவை மூடிக்கொண்ட சம்பவம் நடந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆளுமைக்குள்ளாகவே பெரும்பான்மையாக இருந்து வந்திருந்த சிங்கப்பூருக்கு சனநாயகத்தை முன்வைத்துத் தனி நாடாகும் சாத்தியம் வந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. தனது சுதந்திரப் பிரகடனமாக தேசத்தந்தை முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ பேசும்போது தமது கனவாகக் கண்டதும், சொன்னதும், செய்து காட்டியதும் இதுதான்:
மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ ஏற்ற, சமத்துவம் வாய்ந்த அனைவருக்கும் நேர்மையான சமமான வாய்ப்பளிக்கிற, சுதந்திரமும், நீதியும் அடிப்படையாகக் கொண்ட சனநாயக நாட்டை உருவாக்குவோம் என்றார்.
மக்களுக்காக, மக்களால் என்று உறுதி சொல்லப்பட்டு உருவாக்கப்பட்ட சனநாயகத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அடிப்படை நம்பிக்கை எந்நாளும் காப்பாற்றப்படல் வேண்டும். என்றைக்கு அந்த நம்பிக்கை சிதைகிறதோ, கேள்விக்குறியாக்கப் படுகிறதோ, அன்றைக்கே சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கிறார்கள்.
ஆகவேதான், அண்மையில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு அளித்த அறிக்கையின் மீது உரையாற்றிய பிரதமர், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அந்த நம்பிக்கையைக் காலப்போக்கில் சிதையவிட்ட சில நாடுகளைக் குறிப்பிட்டார்.
எந்த ஒரு சனநாயக நாட்டிலும், அதன் அரசியல்கட்சிகளும் ஆளும் பிரதிநிதிகளும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், சனநாயக மதிப்பீடுகளின் மீதான தரம் தாழ்ந்துவிடாமல், சரியான தனிநபர் ஒருங்காண்மையுடன் (self-righteousness), தவறுகளைத் தயங்காமல் சுட்டவும், ஒத்துக்கொள்ளவும், அதற்குரிய தண்டனைகளுக்காட்பட்டு, சனநாயகக் கட்டமைப்புகளின் மாண்பைக் கட்டிக்காத்து, பொய்கள், தவறான செய்கைகள், சட்டமீறல் போன்ற தீமைகளை ஒதுக்கி, சனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை எக்காலத்திலும் காப்பாற்றியாக வேண்டும்.
முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜார்ஜ் ஷூல்ட்ஸ் ஒருமுறை சொன்னார்: “Trust is the coin of the realm. When trust was in the room, whatever room that was — the family room, the schoolroom, the locker room, the office room, the government room or the military room — good things happened. When trust was not in the room, good things did not happen. Everything else is details.“
இது சனநாயகத்திற்கும் பொருந்தும். சனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது மிக முக்கியம். அடிப்படையான நம்பிக்கை இல்லாமல் போனால், நல்லது எதுவும் சனநாயகத்தால் விளையப் போவதில்லை. மற்றவை எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் அவை எதுவுமே முக்கியமில்லை.
சனநாயகத்தின் நம்பிக்கை மீதான கடப்பாடு என்பது மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அனைவருக்கும் பொதுவானது. நமது கடப்பாடு நம் நாட்டின் சனநாயகத்தின் மீதுதான் இருக்க வேண்டுமே ஒழிய, கட்சிகளுக்கோ தலைவர்களுக்கோ இல்லை. அப்போதுதான் நாம் ஒரு சிறந்த மகிழ்ச்சியான வசிக்கும் சூழலை நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்ல முடியும்.
உசாத்துணை
- https://www.washingtonpost.com/opinions/2020/12/11/10-most-important-things-ive-learned-about-trust-over-my-100-years/
- https://www.adrindia.org/
(இக்கட்டுரை 2022ம் ஆண்டு மார்ச் மாத தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளியானது.)