[vc_row content_placement=”top”][vc_column][vc_column_text]
அது 2004 ஜூலை மாதமாக இருந்திருக்கும். ஒரு வழக்கமான வேலைநாளின் மதியத்தில் முன்பின் அறியாத மலேசிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. இப்போது போலன்றி அப்போதெல்லாம் தொலைபேசி ஏமாற்று அழைப்புகள் பிரபலமாக இல்லாத காலமாதலால், உடனே எடுத்தேன். மறுமுனையில் எனது கல்லூரித்தோழன் முரளி பேசினான். தற்காலிகமாக சென்னையில் வசித்து வந்த திருச்சி முரளி தனது புதிய தொழிலான பயண முகமை நிறுவனம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அடுத்தநாள் இரவு கேஎல்லிருந்து திருச்சி செல்வதாகக் கூறினான். வழக்கமான விசாரிப்புகளுடன் பேச்சு முடிந்தது.
அன்றிரவு ஒரு எட்டு மணியிருக்கும், மீண்டும் முரளியிடமிருந்து போன். “திருச்சிக்குச் செல்லும் முன் பாலிக்குப் போய் இரண்டுநாள் இருந்துவிட்டு ஊருக்குப் போகலாம் என்றிருக்கிறேன். காலையில் கிளம்பி பாலி வந்துவிடு, உன்னை ஏர்போர்ட்டில் பிக்கப் பண்ணிக்கொள்கிறேன்” என்றான். சாத்தியம் இல்லையென்று மறுத்து வாதாடி எல்லாம் பார்த்தேன். விடுவதாக இல்லை. கல்லூரிக் காலங்களில் நாங்கள் அடித்த கொட்டங்கள் ஒரு நிமிடம் மின்னலாய் வந்து போனது. என்னையறியாமலேயே “சரிடா காலையில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டேன்.
பிறகுதான் நடைமுறைச் சிக்கல்கள் உணர முடிந்தது. மனைவியிடம் சொல்ல வேண்டும். அலுவலகத்தில் பொய் சொல்லி விடுப்பு எடுக்கவேண்டும். எந்த விமானம் நேரடியாகப் போகிறதென்று பார்த்து இணையத்தில் பயணச்சீட்டு பெறவேண்டும். மனைவியிடம் சமாளித்து அனுமதி வாங்கியபின், டைகர் ஏர்வேஸில் பார்த்தால், அதிகாலை 7 மணிக்கு ஒரு விமானம் இருந்தது, நல்லவேளையாக அதில் ஒரு பயணச்சீட்டும் உறுதி செய்தாயிற்று. பிறகு மேலாளருக்கும் பொய்யான காரணம் ஒன்று சொல்லி குறுஞ்செய்தி அனுப்பி அவசர விடுப்பு சொல்லியாகி விட்டது.
காலையில் 4.30க்கு எழுந்து, 5.45க்கு எல்லாம் சாங்கி விமான நிலையம் வந்து, விமானம் கரு நீலப் பரப்பின் மேல் பறக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று மாலை வரை எனக்கு இப்படி ஒரு பயணம் போவோம் எனத் தெரியாது. இப்போது பறந்து கொண்டிருக்கிறோமே என வினோதமான உணர்வுகளுடன் ஜன்னல் வழியே பார்த்தபடி உறங்கிபோனேன். அப்போது தான் இதுவரை கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது 4 முறை வந்திருந்த அதே கனவு திரும்பவும் அச்சுப்பிசகாமல் ஐந்தாவது முறையாகவும் வந்தது.
ஒரே கனவு யாருக்காவது திரும்பத்திரும்ப வருமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு வந்தது. அது என்ன கனவு என்றால்… அது ஒரு மலைப்பிரதேசம், மலையின் உச்சி. உச்சியை நோக்கிப் போகும் வழியில் மலையில் சுனையில் இருப்பது போன்று ஒரு நீர்த்தேக்கம். ஆனால் இது மிகப்பெரிய சுனையாக இருந்தது. பெரும் ஏரியை ஒத்து பரந்து இருந்தது. மண்கரைகள் கிடையாது, முழுக்கப் பாறைகள் தான் கரை. கரும்பச்சை நிறத்தில் பிரம்மாண்டமாக விரிந்து அமைதியாகப் பரந்து இருந்தது. இடப்பக்கமாக பின்புறத்தில் ஏறி, நீண்டு ஏறிச் செல்லும் பாதையில் ஓரங்களில் மரங்கள் கொடிகள் என அடர்ந்து மேலேறும் பாதையில் போனால், ஒரு கோவில் போல தெரிந்தது.
அந்த மலையின் உச்சியில் ஒரு கோவில் உள்ளது. மிக எளிமையான கோவில். கோவிலின் அருகில் சடாரென குறைந்தது நூறடி ஆழமாக தாழ்ந்து கடல் ஆரம்பிக்கிறது. கடலின் அலைகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. அலை எழும்பி விழும்போது திண்ணிய நுண்துகள்களாக தண்ணீர் விரவுகிறது. அந்த அலையின் உயரம் பயமாய் இருக்கிறது. அவ்வளவு பெரிய அலைகள் உள்ள கடலை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அந்த சிறிய கோவிலின் உள்ளே சென்றால், ஒரு சிறிய கல்லாலான சாளரம் வழியே எட்டிப்பார்த்து கண்ணைமூடித் தியானித்து வேண்டிச் சென்று கொண்டிருந்தனர். அத்துடன் கனவு முடிந்து விடுகிறது. இதே கனவு திரும்பத் திரும்ப எனக்கு ஆறுமாதங்களாக அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. ஊர் சுற்றிப்பார்ப்பதில் ஆர்வமிகுந்த என் தந்தையிடம் கனவை விவரித்து, “இந்தக் கோவில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றேன். அவர், திரிகோணமலையில் மேல் ஒரு கோயில் இருப்பதாகவும் ஏறக்குறைய நான் சொன்ன அடையாளங்களுடன் இருக்கலாம் என்றும் சொன்னார்.
விமானம் பாலியில் தென்பசார் விமான நிலையத்தில் தரையிறங்கியது. சுங்கப்பரிசோதனைகள் முடித்து வெளியே வந்தால், முகங்கொள்ளா பெரும் சிரிப்புடன் முரளி நின்று கொண்டிருந்தான். நான் எல்லாம் மறந்து கல்லூரி மாணவனாக உணரத் தொடங்கியிருந்தேன். பெட்டியை வழுக்கட்டாயமாக வாங்கி இழுத்து கொண்டு, கார் நிறுத்தத்தில் போய்ப் பார்த்தால் ஒரு வேன் கொண்டு வந்திருந்தான். நாங்கள் இருவர் மட்டுமே அதில் பயணித்தோம். அடுத்த இரண்டு நாள்களுக்கு ஓட்டுநரும் நம்முடன் இருப்பார் என்றான். மதியம் சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்ற ஆரம்பித்தோம். மாலையில் இரவு விடுதிகள் இருக்கும் பகுதிக்குப் போவதாகத் திட்டம்.
கல்லூரிக் காலத்திலிருந்தே நண்பர்கள் எங்களுக்குள் ஒரு வழக்கம். இந்த மாதிரி சுற்றூலா போகும்போது கவுண்டர் (கோவிந்தராசு) மட்டுமே எல்லாருக்குமாக செலவு செய்வான். அதற்கு அவன் கணக்கும் எழுதி வைத்துக் கொள்வான். பணம் குறைவதாக இருந்தால் பணம் வைத்திருக்கும் நண்பர்கள் மொத்தமாக அவனிடம் கொடுத்துவிடுவார்கள். பயணம் போய் வந்தபின் கணக்குப் பார்த்து, சமமாகப் பிரித்து எவ்வளவு என்று சொல்வான். அதை மற்றவர்கள் அவனிடம் கொடுத்து விடுவார்கள். முன்பணம் கொடுத்திருந்த நண்பனுக்கு அவனுடைய பங்கு போக மீதப் பணத்தை கொடுத்து கணக்கை நேர்செய்து விடுவான். இதனால், என்னிடம் பணம் இல்லை, நான் சுற்றுலா வர முடியாது என யாரும் காரணம் சொல்லித் தப்பிக்கவே முடியாது.
அதே சமயம் சிகரெட் பிடிக்காதவன், கம்மியாகச் சாப்பிட்டவன், சைவ உணவு மட்டும் சாப்பிட்டவன் என்றெல்லாம் பங்கு பிரிக்கும்போது எந்தப் பாகுபாடும் கிடையாது. சம பங்குதான். அதனால் அங்கு ஒரு சமத்துவமும், நியாயமும் விட்டுக்கொடுத்தலும் இருந்தது. 2 வருட காலத்தில் மாதமொன்றுக்கு இருமுறை என அக்கம்பக்க மாநிலங்களில் நாங்கள் சுற்றுலா போகாத இடமே இல்லை. கடைசியாக அந்தமானுக்கு கப்பலில் போவதென தீர்மானித்திருந்தோம். அது கடைசிவரை போக வில்லை என்பது வேறு விசயம். முரளியுடன் வேனில் ஏறி உட்கார்ந்து பயணம் போனேனே ஒழிய ஒவ்வொன்றுக்கும் பணம் கொடுப்பதைப் பற்றியே நான் யோசிக்க வில்லை. ஏனென்றால் அது இருவருக்கும் புரிந்த எழுதப்படாத விதி.
ஒரு உணவகத்தில் போய்ச் சாப்பிட்டோம். அங்கு பரிமாறிய பெண்ணிடம் போய் சிறிது நேரம் பேசி வந்தான். அந்தப் பெண் என்னமோ பல வருடம் பழகிய மாதிரி முரளியிடம் வழிந்தாள், பிரியா விடை கொடுத்தாள். பிறகு முரளி கிடுகிடுவென எங்கெல்லாம் போகிறோம் என பட்டியல் போட்டான், அவையெல்லாம் அதிகம் பிரபலமில்லாத ஆனால் சுவராசியமான இடங்கள் என்பது ஓட்டுநர் அரைகுறையாக தலையாட்டியதிலிருந்து தெரிந்தது. அந்தப் பெண்ணிடம் கேட்டு அறிந்து வந்திருக்கிறான் என்பது புரிந்தது.
முரளியிடம் உள்ள விசேச குணாதிசயம் அது. நாமெல்லாம் திரையரங்கில் சீட்டு கிடைக்காமல் நின்றிருப்போம். இவன் போய் ‘கூலாக’ அனைவருக்கும் மேலாளரை அணுகி அனுமதிச்சீட்டு வாங்கி வருவான். அது மட்டுமின்றி, அவர் மரியாதையாக இவனுக்கு வணக்கம் எல்லாம் சொல்வார். நாங்கள் அடிக்கடி போகும் இடங்களிலுள்ள வாட்ச்மேன்கள், டீ போடுபவர் என எல்லோரும் முரளியிடம் மட்டும் சினேகமாக சிரிப்புடன் வணக்கம் வைப்பர். அந்த ரகசியம் இன்று வரை எனக்குப் புரியவே இல்லை. அதைக் கேட்டால் ஒரு புன்னகையுடன் நகர்ந்து விடுவான்.
என் பெட்டிகளைக் கொண்டு போய் அறையில் வைத்து விட்டு, சுளுபான் (PANTAI SULUBAN) பீச்சுக்குப் போய் அலை நீச்சல் (SURFING) வேடிக்கை பார்த்து விட்டு பிறகு அருகாமையில் உள்ள உளு வட்டுவில் உள்ள சங் யங் விதி வாசா (அசிந்தியா) கோவிலுக்குப் போய்விட்டு பின் நேராக குட்டாவில் உள்ள இரவு விடுதிகளுக்குப் போவதாகத் திட்டம். சுளுபான் கடற்கரைக்குப் போனால், கரு நீல வண்ணத்தில், அலை ஒவ்வொன்றும் 40 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக எழுகிறது. அதில் அனாயசமாக ‘சர்பிங் போர்டில்’ நீந்தி சாகசமாக நீந்தி வருவது ‘பேவாட்ச்’ தொடர் பார்ப்பது போலிருந்தது. அப்போது தான் கவனித்தேன் அலையின் நுனியில் நுண்ணிய நீர்த்தவலைகள் ஆவி போல் எழுவது, சடாரென என் கனவில் கண்ட காட்சியை நினைவுறுத்தியது. ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தென்கிழக்காசியாவில் பிரமாண்டமான அலைகளுடன் கூடிய செலவு குறைந்த மிகச் சிறப்பான அலை நீச்சல் கடற்கரை இது தான்.
பிறகு அங்கிருந்து மலைப்பாதைகள் வழியே உளுவட்டு விதிவாசா கோவிலுக்குப் பயணமானோம்.. விதிவாசா உளுவட்டுக் கோவில் பற்றிய செவிவழிக் கதைகள் பாலித்தீவின் பூர்வகுடியினரிடையே பிரபலம். அசிந்தியா என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது இந்தக் கோவிலின் தெய்வம். சிறப்பு என்னவென்றால், உருவம் என்று ஒன்று வடித்திருந்தாலும் உருவத்தை யாரும் வணங்குவதில்லை. ஏனென்றால் விதிவாசாக் கடவுள் ஒரே கடவுள். காணும் யாதொரு கடவுளரும் அவரின் உருவங்களே. உருவமற்றவர், பிரபஞ்சம் முழுவதும் விரவியிருப்பவர், சூரியனாகவும், வான்வெளியாகவும், கடலாகவும், காற்றாகவும் இருக்கிறார். உருவமாக வழிபட நடராஜர் சிலை ஒத்த வடிவில் நிர்வாணமாக ஒற்றைக் கால் தூக்கி தாமரையின் மேல் நிற்பது போன்ற ஒரு உருவத்தை வெளிப்புறத்தில் வைத்திருக்கிறார்கள். மூலத்தனத்தில் சிலை எதுவும் இல்லை. மேற்கு நோக்கிய ஒரு ஒற்றைச் சாளரம் இருக்கிறது, அதன் வழி விதிவாசாக் கடவுள் காட்சி தருவார் என்பது ஐதீகம்.
கோவிலின் எல்லைக்குள் நுழையும் போது அந்தச் சூழல் மிகப் பரிச்சயமாகத் தோன்றியது. உயரமான மலைப் பகுதியிலிருந்து கடலை ஒட்டி ஒரு முகட்டை நோக்கி படி இறங்குகிறது. குத்தாக அந்த முகடு கடல் பரப்பிலிருந்து ஏறக்குறைய 200 அடிக்கும் மேலான உயரத்தில் இருக்கிறது. அந்த முகட்டில் கோவில் உள்ளது. அப்போது தான் சடாரென எனக்கு உறைத்தது ஐந்தாவது முறையாகவும் கனவில் வந்த கோவில் இதுதான் எனத்தோன்றியது. எனக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அந்தக் கோவிலின் தாழ்வாரம், அதன் கருப்புப் படிந்த காரைச் சுவர், தரை என அப்படியே என் கனவில் கண்டதை அங்கு கண்டேன். மூலத்தானம் பாறையின் விளிம்பில் இருந்தது. உள்ளே போகத் தடை என்று கயிறுகட்டி இருந்தது. “உள்ளே போய்ப் பார்த்தே ஆகணும்டா” என்று முரளியிடம் சொன்னேன். வழக்கம்போல எங்கிருந்தோ ஒரு வழிகாட்டியைக் கூட்டி வந்தான். அந்த ஆள் எங்களை உள்ளே கூட்டிச் சென்றான்.
மூலத்தானத்தில் நான் எதிர்பார்த்தது போல சிலை எதுவும் இல்லை. வெற்றுத் தாமரைப் பீடம் மட்டும் இருந்தது. அதன் பின்புறம் ஒரு சாளரம் இருந்தது. அதன் வழியே எட்டிப்பார்த்தால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கரு நீலத்தில் அமைதியாகப் பிரமாண்டத்தைப் பறைசாற்றிக்கொண்டு கடற்பரப்பு. அப்போது சூரியன் அஸ்தமனாகிக் கொண்டிருந்தது. கடவுளை இந்த சாளரத்தின் வழியேதான் தரிசிக்க வேண்டும் என்று வழிகாட்டி சொல்லிக்கொண்டிருந்தது என் காதுக்குள் ஒலித்துத் தேய்ந்து மறைந்தது.
வெற்று வெளியிடை அமைதியினுள் விரிந்து பரந்த ஆகாயத்தைக் கண்ட அந்தக் கணத்தில், அந்த பேரமைதி என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டிருந்தது. அந்தக் காட்சியைக் கண்டுகொண்டே ஆனந்தப் பரவச நிலை ஒன்று உடலெங்கும் பரவியிருந்தது. உடல் லேசாக ஆன மாதிரி இருந்தது. மனம் பூர்வ அமைதியாக இருந்தது. முரளி இந்த மாற்றத்தைக் கவனித்து “என்ன ஆச்சு” என்று பதறினான். “சொல்றேன்” என்று, வெளியில் வந்து ஒரு திட்டில் உட்கார்ந்து என் கனவைப் பற்றி அவனிடம் விவரிக்கலானேன்.
எனக்கு ஏன் அந்தக் கனவு திரும்பத் திரும்ப வரவேண்டும்? எதிர்பாராத ஒரு கணத்தில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் திடீரெனப் புறப்பட்டு கனவில் கண்ட கோவிலை ஏன் நிஜத்தில் காணவேண்டும்? ஓரிறைத் தத்துவத்தைப் பின்பற்றி உருவமற்ற இறைவனை வணங்கும் இனத்தில் பிறந்த நான் ஏன் இங்கு வரவழைக்கப்பட்டேன்? இக்கேள்விகள் எதற்கும் இன்றுவரை என்னால் விடைகாண முடியவில்லை.
முரளியிடம் விவரித்துக்கொண்டிருந்தபோதுதான் என் கனவில் வந்த ஏரியைக் காணமுடியவில்லை என்பதை உணர்ந்தேன். ஓட்டுநரிடம் இங்கு ஏரி இருக்கிறதா என்று கேட்டபோது, “நாம் குறுக்கு வழியில் வந்ததால் ஏரியின் வழியாக வரமுடியவில்லை. ஏரியைக் காண்பிக்கிறேன்” என்று காண்பித்தார். அதே கரும்பச்சை நிறத்தில் கனவில் வந்தபடியேயான பெருஞ்சுனையாக ஒரு ஏரி இருந்தது.
அன்று இரவு முழுக்க அந்தப் புரியாத புதிர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்துவிட்டு அடுத்தநாள் மதியம் விமானத்தைப் பிடித்து நானும் முரளியும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பினோம். அதன்பிறகு எனக்குத் திரும்பவும் அந்த கனவு வரவில்லை. அந்தப் பயணத்தில் என் கனவுக்கு ஒரு விடை கிடைத்தது என்றாலும் ஏகப்பட்ட கேள்விகள் புதிதாக முளைத்திருந்தன.
2019 டிசம்பரில் ஒரு அதிகாலையில் முரளி மாரடைப்பால் காலமாகிப் போனான்.
[/vc_column_text][vc_column_text]

Uluwatu Temple

Suluban Surfing Beach
