தி சிராங்கூன் டைம்ஸ், 2021 ஜூன்
அகவைக்கோடல் (Ageism)

அகவைக்கோடல் (Ageism)

ஜமால் சேக்

[vc_row content_placement=”top”][vc_column][vc_column_text]

அகவை மூப்பின் காரணமாக ஏற்படும் சமூகத் தாக்கங்களிலிருந்து மூத்தோரைக் காக்கும் அறிவுறுத்தல் சமீப காலமாக மேற்கத்திய நாடுகளிலும் குறிப்பாக ஐ. நா. சபையிலும் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக சமீபத்தில் ஐ. நா. சபை, உலக சுகாதார நிறுவனம், மற்றும் மனித உரிமைக்கழகங்கள் சேர்ந்து உலகெங்கிலும் உள்ள 57 நாடுகளில் 83 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தி உலகளாவிய அகவைக்கோடல் அறிக்கை, (Global Report on Ageism) முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முடிவுகள் கவலையளிப்பதாக உள்ளன. பரிந்துரைகள் தனி நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு, அரசுகளுக்கு, தொண்டு நிறுவனங்களுக்கு என பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றைச் செயல்படுத்துவதில் எப்போதுமே சிக்கல்கள் இருந்து வந்திருக்கின்றன, தொடர்ந்து இருக்கவும்தான் போகிறது. அவற்றை எவ்வாறு கையாண்டு மூத்தோருக்கென சுமூகமான சமூக வாழ்வியல் சூழல்களை உருவாக்குவது என்பதே அனைவருக்குமான உலகளாவிய சவால்.

மூப்பு என்பது பிணி என்றே தமிழிலக்கியங்கள் வரையறுக்கின்றன. ஆனால் மனித வாழ்வில் தவிர்க்கவே முடியாத பிணி மூப்பு.  இளமையில் நாம் பெரும்பாலும் மூப்பு பற்றி சிந்திப்பதே இல்லை. அதற்காக திட்டமிடுவதும் இல்லை. ஆனால் கண் முன்னே அகவை மூப்பின் காரணமாக மூத்தோரகள் அடையும் இன்னல்களைக் கண்டுகொண்டே எதுவும் செய்யாமல் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம்.

ஆராய்ந்து நோக்கும்போது, மூப்பு என்பது பல வகையான உட்காரணிகளைக் கொண்டதாக இருக்கிறது. பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மனோவளம், ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. இதில் எது ஒன்று குறைந்தாலும் அது மூத்தோர்களிடத்தில்  பிறருக்கும் தனக்கும், சமூகத்திற்கும், அரசிற்கும் இடையிலேயான  சிக்கல்களை உருவாக்குகின்றன.

இந்த மூன்று காரணிகளிலும் அடிப்படையான மூல ஆதாரமான கூற்று என்னவென்றால், மூத்தோருக்கு முதுமைக்காலத்தில் மரியாதையும், கண்ணியமும் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாகப் படுகிறது. ஆனால், இதைத் தீர்மானிப்பதில் பொருளாதாரம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூத்தோர் பொருளாதார ரீதியாக தாம் யாரிடமும் சாராது இருக்கும் போது அவர்களால் மரியாதையுடன் கூடிய கண்ணியமான ஒரு ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து கொள்ள முடிகிறது. பொருளாதாரம் குறைந்த, அல்லது, பொருளாதாரத்தில் பின் தங்கிய சூழலில் மூப்படையும்போது தனக்கான பொருளாதரத்தேவைகளை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அடைவது அவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. அது ஆரோக்கியக் குறைவிற்கும், மனரீதியான பாதிப்புகளுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.

இந்த செயல்பாடுகளை தனி நபர்கள் மட்டுமோ, தொண்டூழிய நிறுவனங்களோ மட்டுமோ நடத்தி விட முடியாது. நிறுவனங்களும் அரசுகளும் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டியதிருக்கிறது. அது எப்படிச் செய்யலாம், என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அலசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

மூத்தோர் எதிர்நோக்கும் சவால்களை பின்வருமாறு பொதுவாக வகைப்படுத்தலாம்.

  1. பொருளாதாரம் சார்ந்த சவால்கள்
  2. உடல் நலம் மற்றும் மருத்துவத்தேவைகள் சார்ந்த சவால்கள்
  3. மன நலம் சார்ந்த சவால்கள்.

இப்போது இவற்றில் பொருளாதாரம் சார்ந்த சவால்களைப்பற்றிப் பார்க்கலாம்.

இன்று இளையோராக உள்ள நாமும் நாளை மூத்தோராக ஆவோம், அதற்கான பாதுகாப்பான  சூழல்களை இன்றே சமூக அமைப்பிற்குள்  நாம் உருவாக்கினால்தான் நாளை நம்  மூப்பின்போது நமக்கான சுமுகமான சமூக சூழல்கள் இருக்கும்.

சமூகங்கள் கல்வி, பொருளாதார, உட்கட்டமைப்புகளில் வளர வளர சமூகத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குப் போகிறது. மூன்றாம் நாடுகளின் தரத்தில் இருந்து மேம்பட்ட சமூகமாக வளர்ச்சி அடையும் போது, சில சமூக ரீதியான பெரு மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிடுகின்றன. அதில் முக்கியமான ஒன்று, மக்கள்தொகை. சிங்கப்பூரும் இந்தத் தாக்கத்தில் தப்ப இயலாமல் போனதில் ஆச்சரியமொன்றுமில்லை.

இந்த மாதிரியான வளர்ச்சியடைந்த நாடுகளில் முக்கியமாக பிறப்புவிகிதம் குறைகிறது. கணவன் மனைவி இருவரும் கை நிறைய சம்பளம் வாங்கும்போது அவர்களால் தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதுடன் தமது பிள்ளைகளுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை அளிக்கத் திட்டமிட முடிகிறது. இதனால் போதிய நேரமின்மை, மற்றும் தம்மை விட தரமான வாழ்க்கைச் சூழலை தமது குழந்தைகளுக்கு அளிக்க ஆசைப்படும் காரணங்களினால், குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்கிறார்கள். 1900களில் ஸ்பானிஷ் காய்ச்சலினால் கணக்கிடமுடியாத இறப்புக்களால், அக்காலத்திய பெற்றோர்கள் 10க்கும் அதிகமான குழந்தைகளைப் பெற்று வளர்த்தார்கள். மருத்துவம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் அதற்கான தேவைகளும் குறைந்து விட்டதால், மறுபிறப்பு விகிதம் வளர்ந்த நாடுகளில் கடந்த தசாங்கங்களில் கணிசமாகக் குறைந்து விட்டது. வீட்டு வேலைக்கும் தோட்ட வேலைக்கும் வெளினாடுகளில் இருந்து வேலையாட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். ஆனால் பொருளாதாரம் உயர்ந்த வேளைகளில், மேம்பட்ட தொலைநோக்குத்திட்டங்களின் காரணமாக அறிவுசார் தொழிலாளர்களையும் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால், வெளிநாட்டினர் சரளமாக இங்கு வந்து தங்கி வேலை பார்க்கும் சுமுகச் சூழலை அரசு ஏற்படுத்தியது.

இதனால் பொருளாதாரம் மேம்பட்டது, அரசுக்குக் கூடுதல் வருவாய் வந்தது. இதனால் ஏற்படும் சார்புனிலைப் பொருளாதாரமும் வளர்ந்தது. ஆனால் இது வேறு வகையாக சமூக பொருளாதார சமன்பாட்டில் ஒரு சவாலாக சிறிது சிறிதாக உருமாறியது. 40-45 வயதில் வேலை இழந்தாலோ, வேறு வேலை மாற நினைத்தாலோ, நிறுவனத்திற்குள்ளேயே வேறு பதவிகள் தேடினாலோ அதற்கான வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப்பட்டு இளம் வயதினருக்கும், வெளிநாட்டு திறனாளர்களுக்கும் அந்த வாய்ப்பு போகும் சூழல் அங்கங்கே உருவானது. அகவைக்கோடல் (Ageism/Age Discrimination) காரணமாக பணியிடத்துச் சிக்கலான சூழல்கள் தோன்றியது. இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டது சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும். ஒரு பக்கம் வீட்டுக்கடன், மறுபக்கம் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புச் செலவினங்கள், குறைத்துக் கொள்ள இயலாத வாழ்க்கைத்தரம் என பல்வேறு இடியாப்பச் சிக்கல்களுக்குள் சிக்கும் மத்திய வயதினருக்கு வேலையின்றி சேமிப்பிலிருந்து செலவு செய்துகொண்டு தொடர்ந்து கிடைக்காத ஒரு வேலையைத் தேடுவது போன்றவை சிங்கப்பூர் மாதிரியான சொர்க்கபூமி நரகமாகத் தோன்றுவதற்கு ஆரம்பிக்கிறது. இது ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமான அளவில் இருந்தது.

இந்தச் சூழல் சிங்கப்பூரில் மட்டும்தான் இருக்கிறதா என்று நோக்கினால்,  வளர்ந்த நாடுகளிலும்  இது இருக்கிறது. ஆனால் அது கூடுதலாக பாலியல் மற்றும் இனரீதியான பாகுபாடுகளையும் (Discriminations)  முன்னிறுத்துகிறது.

இந்தப் போக்கு வேலைவாய்ப்புக்களில், அது உணவுக்கூடங்களில் பணியாற்றும் மூத்தோராக இருந்தாலும் சரி, உயரிய பதவிகளில் வசிப்போரானாலும் சரி, எங்குமே ஒரே மனப்பாங்குதான் தெரிகிறது. அது வெறுமனே வயது சார்ந்து மட்டுமின்றி, திறன் பாகுபாடு, பாலியல் பாகுபாடு, மற்றும் இனப்பாகுபாடு என விரிகிறது. இதன் வேர் தொடர்ந்து வேற்றுமைகளைக் கண்டு அதன் வழியே குறுகிய வட்டத்துள்  யார் பயன் பெறலாம் என்பதைத் தீர்மானிக்கிறது.

ஐ. நா. சபை உட்பட நான்கு அமைப்புக்கள் கூட்டாகச சேர்ந்து  உலகளாவிய ஆய்வு செய்து மூத்தோர் நலன் பேண என்ன செய்யலாம் என சில வழிகாட்டுதல்களை அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையின் படி, மூத்தோருக்கான வேலை வாய்ப்புகள் சரியான தகுதிகளிருந்தும்  மூப்பு காரணமாகவே தள்ளிப் போகின்றன என்பதை பெரும்பாலோனோர் உறுதிபடுத்தியுள்ளனர். அடுத்ததாக இளையோர்கள் மூத்தோரை கண்ணியமும் மரியாதையுமாக நடத்துவதில்லை என்கிற கசப்பான உண்மையும் வெளிப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில், அதிக அளவில் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது அதிர்ச்சியான தகவலாகும். அது மட்டுமின்றி நிறுவனங்களின் நீக்குப்போக்கான நடவடிக்கைகளால் மூத்தோர்கள் பணியிடங்களில், சமூக ஒன்று கூடல்களில், தவிர்க்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது என்றே அந்த அறிக்கை கூறுகிறது.

அதற்கான தீர்வை அடிப்படையாக மூன்று வழிகளில்  அடையாளம் கண்டு அதற்கான தீர்வையும் முன் வைக்கிறது. தனி நபர் அளவில் மூத்தோரைப் பற்றி நாம் என்ன மாதிரியான மதிப்பீடுகள் வைத்திருக்கிறோம், அவர்களை எதிர்கொள்ளும் சூழலில் அவர்களைப் பற்றி என்ன அவதானிக்கிறோம்., அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றியது. இது உறவுகளுக்குள்ளும் சரி, சமூகப் பொது வெளியிலும் சரி, எப்படி இந்த தனி நபர் மற்றும் சமூக அளவிலான மதிப்பீடுகளை மாற்றிக் கொள்வது மற்றும் அதன் மூலம் சுமூகமான சூழலை, மூத்தோருக்கு கண்ணியமும் மரியாதையும் தரும் விதத்தில் உருவாக்குவது என்பதே இதன் அடிப்படை நோக்கம்.

ஊக்கங்கள், திட்டங்கள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒன்றுபட்ட நெருங்கிய சமூகமாக பின்னிப்பிணைந்து வளர்ந்திருந்த சிங்கப்பூர் சமூகக் கட்டமைப்பிற்குள் சில கண்ணுக்குத்தெரியாத பிளவுக்கோடுகள் காணப்படத் தொடங்கின. தரையில் எப்போதும் காதை வைத்துக் கவனித்திருக்கும் அரசு இதனை உடனே உணர்ந்து அதைச் சரிசெய்வதற்கான திட்டவரைவுகள், செயல்பாடுகளைத் தொடங்கினர்.  மனிதவள மேம்பாட்டு அமைச்சு (Ministry of Manpower) இரு வகையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கிறது. அவையாவன –

  1. Fair consideration Framework
  2. Tripartite Guidelines on Fair Employment, which contains specific guidelines for Aged Workers.

மாறிவரும் காலச் சூழல்களுக்கேற்றவாறும் தொடர்ந்து மூத்தோருக்கான பொருளாதார நலன்களில் குறிப்பாக பணியிடத்துப் பாதுகாப்புகளில் சிங்கப்பூர் அரசு கவனம் செலுத்தியே வருகிறது. இதுபோக கூடுதலாக, மூத்தோரின் நலன் கருதி அரசு மேலும் என்ன செய்யலாம்?

  1. மூத்தோரகளின் வேலைகளில் மாற்றாக வந்தமரும் திறன் மிக்க வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பளம் அதே தகுதிகளுடன் உள்ள மூத்த உள்ளுர்வாசிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும்.
  2. உள்ளூர் மூத்தோரின் வேலையிடத்தை நிரப்பும், திறன்மிக்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேம நிதி (CPF) கிடையாது என்பதால், அது முதலாளிகளுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, 55 வயதுக்கு முற்பட்டு வழங்கப்படும் அதே சேம நிதிக்குச் சமமான அளவில் மூத்தோரும் கிடைக்கப் பெறும் வகையில், அந்த சேம நிதிச்சதவீதம் லெவியாக விதிக்கப்பட்டு (50 – 55 வயதினருக்கு 6%, 55 – 60க்கு 14.5%, etc ) அப்படிப் பெறப்படும் தொகையை மூத்தோரின் சேம நிதிக் கணக்கில் அரசே மாதாமாதம் வழங்க வேண்டும். இது வேலை செய்யும் மூத்தோருக்கு மட்டுமே பொருந்தும். இதன் வழி சம்பள வேறுபாடுகள் களையப்படுவதுடன் மூப்பின் காரணமாக குறையும் சேம நிதியைச் சமன்படுத்தவும் உள்ளூர்வாசிகளை வேலையில் நியமிக்க ஊக்கமளிக்கவும் உதவும்.
  3. குறிப்பிட்ட ஒரு துறையில் அனுபவமும் மேம்பட்ட அறிவும் பெற்ற மூத்தோரின் ஆலோசனைகள் பெரும்பாலும் பயனின்றி நலங்கெடப் புழுதியில் எறிந்த வீணையாகிப் போகிறது. இதைத் தவிர்த்து நிறுவனங்களின் போட்டித்தன்மையை கூட்டும் பொருட்டு, துறை ஆலோசகர்கள் ( ) என்று ஒரு பதவியை உருவாக்குவதைக் கட்டாயமாக்கி அப்படி மூத்தோர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் 25% அரசே பொறுப்பேற்று வழங்கியும், 50% சம்பளத்தை முதலாளிகளின் நிறுவன வருடாந்திர வரிக்கணக்கீட்டில் கழித்துக் கொண்டும்,  நிகரமாக வெறும் 25% சதவீத சம்பளம் மட்டுமே முதலாளிகள் வழங்குவதால், அனைத்துத் தரப்பினருக்குமே பலன் ஏற்படும்.

தற்போதைய சூழ்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை  சட்ட ரீதியாக நடைமுறைப் படுத்தும் வாய்ப்புகள் சிங்கப்பூரில் இல்லாதிருந்தாலும்,  கடிதோச்சி மெல்ல எறிக வகையிலான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே இருந்தாலும், தொடர்ந்த கண்காணிப்பும், நீக்குப்போக்கான அணுகுமுறையும் இதற்குத் தேவைப்படுகிறது. அரசு மூத்தோரைக் காக்க ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்க முடியும், அதைச் செய்திருக்கிறது, தொடர்ந்து அவதானித்தும் வருகிறது.  ஆனால் இது சட்டத்தின் வழி மட்டுமே சாதிக்க முடியாது என்பதால், தனி நபர்களின் கண்ணோட்டமும் எண்ணங்களும் செயல்பாடுகளும் மாற வேண்டும். தனி நபர்கள் சேர்ந்ததே சமூகம்.  இன்று இளையோராக உள்ள நாமும் நாளை மூத்தோராக ஆவோம், அதற்கான பாதுகாப்பான  சூழல்களை இன்றே சமூக அமைப்பிற்குள்  நாம் உருவாக்கினால்தான் நாளை நம்  மூப்பின்போது நமக்கான சுமுகமான சமூக சூழல்கள் இருக்கும். நாளை நாமும் மூப்படைவோம் என்கிற எண்ணத்தை முன்வைத்து அனைவரும் இதில் பங்காற்ற வேண்டும் என்பதே நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய சங்கல்பம் ஆகும்.  எனவே இன்றிலிருந்தே மூத்தோரைக் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் காணும்போதும், எண்ணும்போதும் நடத்த ஆரம்பிப்பதே அதற்கான வழி.

Sources:

  1. Global Report on Ageism – https://www.who.int/publications/i/item/9789240016866

இக் கட்டுரை தி சிராங்கூன் டைம்ஸ், 2021 ஜூன் மாத இதழில் வெளியிடப்பட்டது.

[/vc_column_text][vc_column_text]