தி சிராங்கூன் டைம்ஸ், 2021 மார்ச்
மின்காசு

மின்காசு

ஜமால் சேக்

 

[vc_row content_placement=”top”][vc_column][vc_column_text]

க்ரிப்டோ கரன்சி (Crypto Currency) எனப்படும் மின்காசு பற்றி நாளேடு, காணொலி, வானொலி,  இணையத்திலிருந்து நம் கவனம் பெற,  செய்திகள் வராத நாளே இல்லை.

ஆமாம், மின்காசு என்றால் என்ன?

2008ல் சடோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்கிற புனைப்பெயரில் பெயர்வெளியிட விரும்பாத ஒருவரோ சிலரோ பிட்காயின் (Bitcoin – BTC) பற்றிய தொழில் நுட்பத்தை ஒரு வெள்ளைக் கட்டுரையாக வெளியிட்டனர். பிட்காயின் என்ற பெயரும் குறிப்பிட்டு அதை உருவாக்குவதற்கான வழிமுறைகள், சூட்சுமம் போன்றவை அந்தக் கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பின்பற்றி 2009ல் பிட்காயின் உற்பத்தியாக ஆரம்பித்தது. அப்போது அதன் விலை $0.0003 தான். அப்போது 2,00,000 பிட்காயின் கொடுத்து ஒருவர் Pizza  வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போதைய விலை என்ன என்று எழுதி நீங்கள் இந்த இதழைப் படிக்கும்போது அது வேறு எங்கோ போயிருக்கும். எனவே இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பிட்காயின் பயன்படுத்தும் சூட்சுமம் (Algorithm) வழி மொத்தமே 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். மார்ச் 2021 படி ஏறக்குறைய 18.6 மில்லியன் பிட்காயின்கள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. எஞ்சிய பிட்காயின்கள் உற்பத்தி செய்து முடிக்க எப்படியும் 2035 ஆகிவிடும். அதற்கப்புறம் மொத்தமே 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே 700 கோடி மக்கள் பயன்படுத்த கிடைக்கும். ஆகவே தோண்டத்தோண்ட வரும் தங்கத்தையும் வெள்ளியையும் வைரங்களையும் விட பிட்காயின் விலை அதிகமாக இருக்கும் என சில வியாபாரிகள் கருதுகின்றனர்.

(தரவுத்துறப்பு: இந்தக் கட்டுரை பிட்காயின்கள் என்ன என்பது பற்றி விளக்கி தமிழில் வெளியிடப்படும் செய்தியே அன்றி, பிட்காயினில் முதலீடு செய்ய ஆலோசனை அல்ல. பிட்காயினில் முதலீடு செய்வதும் செய்யாததும் உங்களின் தனிப்பட்ட முடிவுகள் ஆகும்)

பிட்காயின் எனப்படும் மின்பணம் பரிவர்த்தனை செய்யப் பயன் படுத்தப்படும் தொழில் நுட்பம் தான்  மின்பணத்தின் பலம். தொடர்ச்சங்கிலி தொழில் நுட்பம் (Distributed Ledger Technology – BlockChain ) ஒரு விந்தையான முறை. பொதுவாக வங்கிகளில் ஒரு கணக்கு ஏடு வைத்திருப்பார்கள், அதில் நம் கணக்குகள் பற்றிய குறிப்புகள் இருக்கும். அந்த வங்கி பிறருக்கு அதைக் காட்டினாலொழிய வேறு யாருக்கும் கணக்குகள் தெரியாது. ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்ப இருவரும் ஒரு சங்கேதமான உறுதிபபடுத்திக் கொள்ள வழிவகுக்கும் வகையில், ஒரு பொதுவான நம்பகமான மூன்றாம் நபர் மூலம் பரிமாற்றம் நடக்கும். அனுப்புபவர் பெறுபவர் அனுப்பும் வங்கி பெறும் வங்கி இவை அனைத்தும் சரிபார்த்து பணம் அனுப்பியாக வேண்டும். இதற்கு முன்பெல்லாம் ஓரிரு நாட்கள் பிடிக்கும், ஆனால் தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியால் உடனே மாற்ற முடிகிறது.  தொடர்ச்சங்கிலி தொழில் நுட்பம் இந்த மூன்றாம் நபரின் தேவையை நீக்குகிறது. ஏனென்றால் கணக்கு ஏடு பொதுவாக்கப்படுகிறது. பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைவரும் ஏட்டின் பிரதியை வைத்திருப்பர். சரிபார்க்க மூன்றாவது நபர் தேவையில்லை. சரி, ஏட்டில் குறிப்பை மாற்றிவிட முடியாதா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால், அதற்கும் விடை உள்ளது. ஒருவர் ஏற்படுத்தும் மாற்றத்தை பலரும் சரிபார்த்து உறுதி செய்தால் தான் அந்த மாற்றம் நடக்கும். அந்தப் பலர் யார் என்றால், அவர்கள் உலகெங்கும் இருப்பார்கள், யாரையும் யாருக்கும் தெரியாது. அதனால் கூட்டுச் சேர்ந்து ஒரு திருத்தம் செய்துவிட முடியும் என்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அதில் உள்ள கணக்கு சரியானதுதான் என்பது உறுதிப்படுத்தப் படுகிறது. இப்படி கணக்கைச் சரிபார்ப்பவர்கள், அதற்குக் கூலியாக ஒரு சிறிய சதவீதத்தைப் பெறுவார்கள். அது 1,000,000ல் சில பங்குகளாக இருக்கலாம். அதாவது 0.00002 பிட்காயின் ஆக இருக்கலாம்.

பிட்காயின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தொடர்ச்சங்கிலித் (Distributed Ledger Technology) தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தி சங்கிலி வளையங்களை உருவாக்குவதும், இணைப்பதும், அதன் இணைப்பை தொடர்ந்து உறுதி செய்வதுமே இந்த கூட்டமைப்பின் முக்கிய சேவை. அதற்கான கூலியாக இந்த முயற்சியில் உருவாகும் பிட்காயின்கள் அளிக்கப்படுகின்றன. இதனால் உலகெங்கும் யார் வேண்டுமானாலும் இந்தக் கூட்டமைப்பில் சேர்ந்து மேற்படி சேவைகளில் ஈடுபட முடியும். தடையே கிடையாது. இப்படி   தொடர்ச்சங்கிலி (BlockChain) தொழில் நுட்பம் உருவாக்கப்படும் ஒவ்வொரு ஏடும் முந்தைய ஏட்டின் தொடர்ச்சியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது முதலாவது ஏட்டின் அடியை ஒற்றி அடுத்த ஏடு உருவாகும். இது பி.எச். அப்துல் ஹமீதுவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் ஒருவர் பாடி நிறுத்தும் எழுத்திலிருந்து அடுத்தவர் பாட ஆரம்பிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு ஏட்டையும் உருவாக்கும் போது பல ஏடுகள் சேர்ந்து ஒரு சங்கிலி வளையம் (Block)  உருவாகிறது. இந்த ஒரு சங்கிலி வளையம் முன்னுள்ள சங்கிலியின் தொடராக இணைவதால் எண்ணிலடங்கா வளையங்களுடானான சங்கிலித்தொடர் (BlockChain) உருவாகிறது. இந்த சங்கிலித் தொடர் பொதுவில் வைக்கப்பட்டு சேவையில் ஈடுபடும் அனைவரும் இதன் பிரதியையும் வைத்திருப்பர். இதனால் இந்த சங்கிலித்தொடர் யாராவது வேண்டுமென்றோ தெரியாமலோ அழித்து விட முடியாது. அதே சமயம் சங்கிலியின் ஒற்றை வளையத்தை கூட மாற்றிவிட முடியாது, ஏனென்றால் அதற்கு பிந்தைய அத்தனை சங்கிலிகளும் மாறி விடும். இவ்வாறாக தொடர்ச்சங்கிலித் தொழில் நுட்பம், அதிகாரத்தைப் பரவலாக்கி, உரிமைகளைப் பரவலாக்கி, மத்தியஸ்தர் இல்லாமல் ஒருவொருக்கொருவர் நேரடியாக உண்மையான பரிவர்த்தனையை செய்துகொள்ள உதவுகிற அமைப்பாக பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறது.  ஒவ்வொரு சங்கிலி கட்டையும் உருவாக்க பலருடைய கூட்டுழைப்பு (Bitcoin Mining) தேவைப்படுகிறது. அப்படி உழைக்கும்போது அனைவருக்கும் உழைப்பின் அளவிற்கு அந்த சங்கிலி கட்டை உருவாக்கி முடிக்கும் தருவாயில் பிட்காயின்கள் தரப்படுகின்றன. அதை அவர்கள் தம் மின்சுருக்குப் பையில் (Wallet) பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். அப்படி என்றால் பிட்காயின் உண்மையில் எப்படி இருக்கும்.

இப்படித்தான் இருக்கும்.

1BvBMSEYstWetqTFn5Au4m4GFg7xJaNVN2

இது உண்மையில் பிட்காயின் தானா அதன் மதிப்பு என்ன என்பதை உறுதி செய்ய தொடர்ச்சங்கிலித் தொழில் நுட்பம் வழி உறுதி செய்வார்கள். சரியாக இருந்தால் பெறுபவர் மின் சுருக்குப்பைக்கு அது பரிமாற்றப்படும்.  இந்த மின்சுருக்குப்பைகளை உருவாக்கி அதைப் பாதுகாத்து வருபவர்கள் மின்பணப் பரிவர்த்தனை நிலையம் (Crypto Exchange) ஆகும். பல அடுக்கு பாதுகாப்பில் நம் பிட்காயின்கள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன. அதை விற்கவோ வாங்கவோ சொற்பமாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு பரிவர்த்தனை நடக்கிறது. சரி, உங்களுக்கு இப்படி அந்த நிலையங்களிடம் கொடுக்க விருப்பம் இல்லையென்றால் (USB Hardware Wallet) எனப்படும் கன ரக சுருக்குப்பைகள் வழியாக பாதுகாக்கலாம். அதற்கான சங்கேத வார்த்தையை (Password) மறந்துவிட்டால், அலிபாபாவின் அண்ணன் திருடர்கள் குகையில் மாட்டியதைப்போல் உங்களின் பிட்காயினை மறந்துவிட வேண்டியதுதான். இப்படித்தான் ஒரு பெரிய செல்வந்தர் தனது சங்கேத வார்த்தையை தன் வாரிசுகளிடம் சொல்லாமல் இறந்துவிட்ட காரணத்தால் அதில் இருந்த பல ஆயிரம் பிட்காயின்களை இன்றுவரை மீட்க முடியவில்லை.

இனி உயில்களில் குறிப்பிடப்பட்டு அதன் சங்கேத வார்த்தை இருக்குமிடத் தையும் சொல்லிவைக்க வேண்டும் போலிருக்கிறது.

பிட்காயின் எந்த ஒரு தனி அரசாலோ, தனி நிறுவனத்தாலோ, தனி நபராலோ கட்டுப்படுத்தப் படவில்லை என்பதால் அதை அழிப்பதும் இயலாத காரியம். எனவே அதை அதிக விலை கொடுத்து வாங்கி வைத்துக்கொண்டும் அதை வியாபாரம் செய்து கொண்டும் வரும் வழக்கம் அதிகமாகி வருகிறது. தற்போதைய் தீநுண்மிக் காலத்தில் தடம்புரண்டு போயிருக்கும் பொருளாதாரச் சூழ்னிலையில் பெரும் நிறுவனங்கள் இதை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி பில்லியன் கணக்கில் முதலீடுகள் செய்து வருவதால் திடீரென வரலாறு காணாத விலை உயர்வு காணப்படுகிறது. இது தொடருமா இல்லை விலை வீழுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

பிட்காயின் மட்டுமே மின்காசு, வேறு இல்லையா என்றால், நிச்சயமாக உண்டு. அவை எத்திரியம் (Ethereum – ETH), மேக்கர் (MAKER),  சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஷில் (ZIL) மற்றும் எண்ணிலடங்கா வகையில் மின்காசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மின்காசுகள் (CryptoCoins) என்பதும் மின்பணம் (Digital Currency) என்பதும் வேறு வேறு. அந்த வேறுபாட்டை பின்னர் பார்க்கலாம்.

பிட்காயின் 21 மில்லியன் அளவு மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இரண்டாவது அதற்கான நேரடியான பொருளாதரப் பயன்பாடு எதுவும் இல்லை. அதை ஒரு மின்சொத்தாகக் கருதிக்கொள்ளலாமே ஒழிய வர்த்தக ரீதியில் அதை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியவில்லை

இது ஒரு தடங்கலாக நினைத்த சிலர், தொடர்ச்சங்கிலி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு பல சேவைகளை செய்ய ஆரம்பித்தனர். அவற்றை மத்தியஸ்தர் இன்றி (No Middleman) சரிபார்க்கும் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் தேவைகள் உள்ள இடங்களுக்கு சேவை அளிக்க ஆரம்பித்தார்கள். அப்படி சேவை அளிக்கும்போது உருவாகும் மின்காசுகளை விற்க ஆரம்பித்தார்கள் அப்படி உருவானது தான் எத்திரியம் மற்றும் பல மின் காசுகள். அந்தக் காசுகள் உற்பத்தி செய்வதில் பிட்காயின்கள் போல எண்ணிக்கையில் எல்லை கிடையாது. எனவே பிட்காயின்கள் அளவுக்கு அவை விலை போவதில்லை. எனினும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்கிற மன நிலையில் உள்ள தனி நபர் முதலீட்டாளர்கள் எந்த மின்காசுகளையும் விட்டுவைக்கவில்லை.

இப்படி பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மின்னணுச்சாதனம் அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் வராமல் போனால் அரசுகள் எப்படி தனது நாட்டின் பணத்தின் மதிப்பை நிலை நாட்ட முடியும். அமெரிக்க டாலர்களை கடந்த ஐந்தாண்டுகளில் 8 ட்ரில்லியன் அளவிற்கு கூடுதலாக அமெரிக்க அரசு அச்சடித்து புழங்க விட்டிருக்கிறது. கணக்கு வழக்கின்றி இப்படி எவ்வளவு டாலர்  வெளியிட்டாலும் அமெரிக்க அரசு சாம பேத தான தண்ட முறைகளை மற்ற நாடுகளின் மேல் பிரயோகப்படுத்தி டாலருக்கு மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. பிட்காயின் போன்ற மின்காசுகள் அந்தத் தடைகளை உடைக்க ஆரம்பித்திருப்பதில் செய்வதறியாது அமெரிக்க அரசு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அரசுகள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துள்ளன. பிட்காயின் பயன்பாட்டைத் தடை செய்துவிடலாம் என அமெரிக்க அரசிற்குப் பரிந்துரைக்க்ப் பட்டுள்ளதாக செய்திகளும் வருகின்றன.

இதற்கிடையில் அரசுகளே இந்த தொடர்ச்சங்கிலி நுட்பத்தைப் பயன்படுத்தி தம் நாட்டின் பணத்தையே மின்பணமாக (Central Bank Digital Currency – CBDC) வெளியிட தீவிரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படிச் செயல்படுத்தும் முன்னணி நாடு சைனா. பரீட்சார்த்தமாக ஒவ்வொருவருக்கும் 200 மின்பண யுவான்களைச் செலவு செய்ய அவர்களின் WeChat செயலியில் கொடுத்திருக்கிறது சைனா அரசு. அதன் பயன்பாட்டின் பலனைப் பொறுத்து முதலில் நாடு முழுவதும் அமுலுக்குக் கொண்டுவர சைனா அரசு திட்டமிட்டுள்ளது. பின்னர் தாம் முதலீடு செய்து வர்த்தகம் செய்து வரும் பெல்ட் & ரோடு (Belt & Road) திட்ட நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முக்கிய பலன் என்னவென்றால், அமெரிக்க அரசு சைனாவின் மீதோ அதன் தோழமை நாடுகளின் மீதோ பொருளாதாரத் தடை விதிக்க முடியாது. அவர்கள் அவர்களுக்குள்ளாகவே அமெரிக்க டாலர் உதவியின்றி தாமே பரிவர்த்தனை செய்து கொள்ளுவார்கள்.

சிங்கப்பூர் நாணய வாரியமும் (MAS) பரவலான பயன்பாட்டுக்கு மின்காசுகளை அனுமதிக்கவில்லை.  DBS வங்கி மட்டுமே தற்போது அதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது, அதுவும் பெருந்தன முதலீட்டாளர்களுக்கு (Privileged Banking) மட்டுமே அதன் மின்காசு மற்றும் மின்பண வணிக வசதியைத் தருகிறது.  மேலும் சிங்கப்பூர் நாணய வாரியம் ப்ரொஜெக்ட் உபின் (Project Ubin) என்கிற மின்பண மற்றும் மின்காசுகளைப் பரவலாகப் பயன்படுத்த ஏதுவான தளத்தை உருவாக்கி வருகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.

மின்பணம் பெரும் புழக்கத்திற்கு வரும்போது என்ன பாதிப்புகள் உண்டாகும்?

தற்போது மணிசேஞ்சர்கள் எனப்படும் தொழில் ஏறக்குறைய முற்றிலும் உருமாறிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது மட்டுமல்ல, தற்போது பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் வங்கிகள் தம் முக்கியத்துவத்தை இழக்கும். ஏனென்றால், நீங்களும் நானும் நேரடியாக பணத்தை ஒரு செயலி வழியாக பரிமாறிக்கொள்ளும்போது தற்போது நடைமுறையில் இருக்கும் வங்கிகளுக்கு என்ன வேலை. ஆகவேதான் சிங்கப்பூரில் அலுவலகமோ பிராஞ்சோ இல்லாத டிஜிட்டல் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  அமெரிக்க டாலர் வழியாகத்தான் வர்த்தகம் நடக்க வேண்டும் என்கிற கட்டாயம் இனி இருக்காது. மாஸ்டர்கார்டு விசா போன்றவை தம் தொழில் நடைமுறையை மாற்றிக்கொண்டாலொழிய அவைகளின் பயன்பாடு நலிந்துவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

இன்னும் NFT, Stable Coins எனப்படும் பலப்பலத் தொழில் நுட்பங்கள் நம்மையும் நம் சூழல்களையும் மாற்றியமைக்கப் போகின்றன. அவற்றைப் பற்றி பின்னொரு இதழில் இன்னொரு கட்டுரையாகப் படிக்கலாம்.

ஓரிடந்தனிலே நிலை நில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே எனப்படும் மொடமொடக்கும்  வெள்ளி நோட்டுக்களைப் பார்க்கும் கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருப்போம் போல.

இக் கட்டுரை தி சிராங்கூன் டைம்ஸ், 2021 மார்ச் மாத இதழில் வெளியிடப்பட்டது

[/vc_column_text][vc_column_text]