கூரைப் பூக்களின் கொண்டாட்டம் – பொங்கலோ பொங்கல்
சேக் ஜமால்
[vc_row content_placement=”top”][vc_column][vc_column_text]
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
பள்ளிப் பருவத்தில் பொங்கல் வாழ்த்துக்களை கட்டுக்கட்டாக வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்பும் 80 கிட்ஸ் நினவுகள் இன்று மீள் நினைவு கொள்ள வைக்கிறது ..
அதிகாலைக் குளிரில் குளிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே போய் குளத்து வாசலில் நின்ற என்னை ராசுப்பயல் வலுக்காட்டி தள்ளிவிட, நடுங்கிக்கொண்டே குளத்தில் குளித்து, புதுத்துணியுடுத்தி, காலையிலேயே விறகடுப்பின் புகையின் கண்ணெரிச்சலுக்கிடையில், சூரியனை வானில் தேடி, பொங்கலோ பொங்கல் கூவி, இனிப்பான புதுஅரிசியின் வாசனையுடன் இருக்கும் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டு, பிறகு வீடுவீடாக பொங்கலைக் கொடுத்துவர என் அம்மா, ‘இது, இது’ இன்னாருக்கு என்று சொல்லித்தர வீடு வீடாய்ப் போய்க் கொடுத்துவருவேன்.
ஒவ்வொரு வீட்டிலும் வெறும் தட்டைத் திருப்பி அனுப்பாமல் பரிசுப்பொருள் ஏதாவது தருவார்கள். பழம், காய்கறி, காசு, இனிப்பு என்று, ஒரே வசூல்தான் அன்றைக்கு. அன்றைக்குப் பார்த்து காலையில் இந்தச் சூரியன் பத்துமணி வரை தலையைக் காட்டாது. ஒரே மப்பும் மந்தாரமுமாய் இருக்கும், வீதியெங்கும் புகை. அந்தக் காலங்களில் புதுத்துணியுடுத்திய பெண்கள் அன்று மட்டும் அதிகமாய் அழகாய்த் தெரிவதும் அவர்களை சடையைப் பிடித்து வம்பிழுப்பது விளையாடுவதும் எல்லோருக்கும் வாய்த்த காலம் அது ..
இன்றைக்கு சிங்கப்பூரில் ஒரு உள்ளரங்கத்திலோ அல்லது கோயிலிலோ தத்தம் பிள்ளைகளும் தாமும் பளபளக்கும் பட்டுடைகளில், மெர்சிடஸிலோ அல்லது லெக்ஸஸிலோ வரும் தமிழர்கள் கோயிலில் பக்திசிரத்தையாய் கும்பிட்டுவிட்டு பிள்ளைகளை பொங்கல் பொங்குவதைக் காண்பித்து ,புதிதாய் முளைத்த கேம்பல் லேன் கொட்டகையில் கட்டப் பட்டிருக்கும் மாடுகளை காண்பிக்கிறார்கள் , அங்கு பால்கறக்கும் நேரத்தின் கணக்கு தன் நேரப் பட்டியலுக்கு பொருந்துமா என்று கணக்காய் காத்திருக்கிறார்கள் ,மாடுகள் இந்த நிகழ்ச்சிக்காகவே ஜோஹோரிலோ அல்லது லிம்-ச்சு-காங்கிலோ உள்ள ஒரு பண்ணையில் இருந்து தற்காலிகமாக வாடகைக்கு கொண்டு வரப்பட்டு கொஞ்சம் கூடவே ஆடு, கோழி, சேவல், கிளிகளும் எனவே மாட்டுப்பொங்கல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றையக் குழந்தைகளுக்கு மாட்டைக் காட்டுவதற்கும் அதில் எப்படி அவர்கள் தினம் குடிக்கும் பால் வருகிறது என்று காண்பிப்பதற்கும் இந்த மாட்டுக் கண்காட்சி . மாடுகள் லிட்டில் இந்தியா சாலைகளில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வருவதை தவறவிட்டவர்கள் பொங்கல் ரிலீஸ் சினிமாவைத் தவறவிடாதவர்கள் ,
என் மகள் கேட்டாள், அரிசி எப்படி விளைகிறது என்று. அவளுக்கு அது புல் வகையைச் சேர்ந்தது என்று தெரிந்திருக்கிறது. மற்றபடி ஒவ்வொரு புல்லாக வளர்த்து அரிசி செய்வார்களா என்று கேட்க, எனக்கு அப்போது தான் உறைத்தது. மடைபாய்ச்சுவதிலிருந்து, உழுது, பாத்திகட்டி, நாட்டுநற்று, களையெடுத்து, உரம்வீசி, காவலுக்குச் சென்று, கதிரறுத்து, கதிரடித்து, மரக்காலில் அளந்து, மூட்டைகட்டி, காயவைத்து, குதிரில் இட்டு, அவியல்போட்டு ஆறவைத்து, ஆலைக்குத் தூக்கி, அங்கு அரைத்து, உமி தனியாக, தவிடு தனியாக, அரிசி தனியாக, குருணை தனியாகக் கட்டிப் பின் வீட்டுக்குக் கொண்டு வந்து, பானைக்குள் அளந்து கொட்டி முடிக்கும் வரை செய்திருந்த எனக்கு என் 6வயது மகள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மலைப்பாய் இருந்தது. எதையோ தேடப்போய் எதையோ இழந்துவிட்டோமோ என்று ஒருகணம் உலுக்கியது. சமூக பொருளாதார மாற்றங்கள் கலாச்சாரத்திற்குள் எப்படியெல்லாம் மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டது …
காடுதிருத்தி கழனியெல்லாம் பாடுபட்டு விளைச்சலை வீட்டுக்கு கொண்டுவந்து காரணமான பகலவனுக்குப் படைத்து நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள். இதில் மதமும் இல்லை, சாதியும் இல்லை. தமிழராய்ப் பிறந்தோர் எல்லோரும் கொண்டாடி மகிழ வேண்டிய பெருநாள், பொங்கலை ஆக்கி பாத்தியா ஒதும் இஸ்லாமியக் குடும்பங்கள் காகிதத்தட்டுக்களில் பொங்கலைப் பகிர்ந்துண்ணத் தரும் கிறித்துவக் குடும்பங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்தப் பொங்கல் என்ற தமிழர் திருவிழா. என் சிறு வயதில் பால்சோறு என்றும் அழைக்கப்படும் பொங்கலை அறுத்து எடுத்து வந்த நெல்லை உரலில் இட்டுக் குத்தி அரிசியாக்கி, அத்துடன் வீட்டிலிருக்கும் மாட்டின் பால் கொண்டு வெல்லம் சேர்த்து பொங்கி இறைவனுக்கு பிரார்த்தனை செய்தபின் அக்கம் பக்கத்தாரக்கு பகிர்வது உண்ணுவது வழக்கம். இப்போது தீபாவளியே பெரும் பண்டிகையாய்ப் போனது. பாலகங்காதர திலகர் தீபாவளியைப் பிரபலப்படுத்தும் வரை இது அஷ்டமி நவமி போன்றதொரு மற்றொரு நிகழ்வாகவே இருந்திருக்கிறது.
காலனித்துவ காலங்களில் சிங்கப்பூரில் பொங்கல் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தோமானால் ஸ்டரைட்ஸ் டைம்ஸ் இதழில் சனவரித் திங்கள் 15 ஆம் தேதி 1910ம வருடம் செட்டியார் சமூகத்தினர் பொங்கல் கொண்டாடியதைப் பற்றி குறிப்புகள் உள்ளன. கடலில் குளித்து சூரியனை வணங்கி பொங்கல் என்னும் உணவை சூரியனுக்குப் படைத்து விட்டு பின்பு தாமும் உண்ணுவார்கள் எனவும், மறுநாளில் மாடுகளுக்கான விழா கொண்டாடப்படுகிறது எனவும் அது குறிப்பிடுகிறது. மற்றுமொரு செய்தி மலாயா ட்ரிபியூனில் 1930 ம வருடம் வந்திருக்கிறது. அது செட்டியார்களின் சமூகத்தில் பொங்கல் பானையை ஏலம் விட்டு பொதுக்காரியங்களுக்குப் பயன்படுத்துவதைப் பற்றியது. 50 செண்டுகளுக்கு வாங்கிய புதுப்பானை பொங்களித்த பிறகு 400 அல்லது 500 வெள்ளிகளுக்கு ஏலம் விடப்படும். ஏலம் எடுத்தவர் அப்பானையை ஒரு மரசசட்டத்தில் பாதுகாத்து தனது கல்லாப்பெட்டிக்கு அருகில் வைத்துக் கொள்வார். பணம் பொங்கல் பொங்கியதைப் போல பொங்கும் என்பது நம்பிக்கை. ஏரிக்கரை (Tank Road ) தெண்டாயுதபாணி கோயிலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த நிகழ்வு பிற்பாடு தொடரவில்லை.
பொங்கலைப்பற்றி எழுதும்போது இது இங்குமட்டும் தான் வழக்கமா என்ற வழக்கமான ஒரு கேள்வி எனக்குள் எழ, கூகிளப்பனைக் கேட்டால் உலகெங்கும் பொங்கல் எத்தனை எத்தனை வகையாய் கொண்டாடப்படுகிறது என ஆசசரியமாய் இருந்தது.
Thanks Giving Day என்று வடஅமெரிக்காவிலும், லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும், Moon Festival என்று சீனர்களிடத்திலும், Tet Trung Thu என்று வியட்நாமிலும், Succoth என்று யூதர்களிடத்திலும், Kwansa மற்றும் Yam என்று ஆப்பிரிக்கர்களிடேயும், Chusok என்று கொரியர்களிடேயும், இது போக பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது, அமெரிக்காவிலும் கனடாவிலும் இது மதம் சாராத பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், லண்டனில் இது சர்ச் சார்ந்த பண்டிகையாக கடந்த ஒரிரு நூற்றாண்டுகளில் மாற்றம் அடைந்திருக்கிறது .
இக்கால சிங்கப்பூர் புளோக்குகளில் மாவிலையும் ,ஆவாரையும், பனை ஓலைக் குருத்துகளும் ,துளசியும் கூரைப் பூக்களாக பொங்கல் அன்று தோரணமாக தொங்கும் காட்சி ,இன்னும் நாம் வேர்களை மறந்து விடாமல் இருப்பதற்கு அத்தாட்சி …
இக் கட்டுரை தி சிராங்கூன் டைம்ஸ், 2021 ஜனவரி மாத இதழில் வெளியிடப்பட்டது.
[/vc_column_text][vc_column_text]