அசாபியா என்னும் குழுமமனப்பாங்கு
–ஜமால் சேக்
[vc_row content_placement=”top”][vc_column][vc_column_text]
சமீப காலங்களில் அசாபியா என்றொரு பதம் சிங்கை அரசியல் அரங்கில் உச்சரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. அரசியல் பொருளாதார பூகோள மாற்றங்கள் துரிதமாக நிகழ்ந்து வரும் இந்த தீநுண்மிக் காலக்கட்டத்தில் இந்த அசாபியா கருத்து பரிசீலனைக்கு உட்படுவது அதி முக்கியத்துவம் பெறுகிறது.
சரி, அசாபியா என்றால் என்ன? அதை யார் முதலில் சொன்னார்கள் என்றால், நாம் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்குப் பின்னால் மத்தியக் கிழக்கு அரசியலுக்குப் போயாக வேண்டும். இன்றைக்கு அல்ஜீயர்ஸ் என்றழைக்கப்படும் நாட்டில் பிறந்து பின் பல நாடுகளின் அரசவைகளில் ஆலோசராக பரிணமித்த அரசியல் வல்லுனர் இப்ன் கால்துன் (IBN KHALDUN) பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களின் கருத்துக்களைப் பற்றியும் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாத்தா சொத்து பேரனுக்குத்தான் என்றும், தாத்தா சொத்து பேரனைத் தாண்டாது என்றும் சொலவடை உண்டு. அதே மாதிரி மூன்று தலைமுறைக்கு மேல் அரசுகள் தங்காது என்றும் ஒரு உலகளாவிய சொலவடை உண்டு. அதாவது, சிரமப்பட்டு அரசை உருவாக்கும் ஒரு அரசன், அவன் மகன் காலத்தில் உச்சத்தில் போய், பேரனின் காலத்தில் பாழ்பட்டு எதிரி மன்னனின் போரில் தோற்று காட்டுக்குள் வாழ்வான் பேரன். பேரனின் மகன் தலையெடுத்து வந்து மீண்டும் ஆட்சியை உருவாக்கினால் உண்டு. இல்லையென்றால் அந்த வம்சம் அத்தோடு வரலாற்றுப் பக்கங்களில் கரைந்து போய் காணாமல் போய்விடும். வரலாறு மீது தீராக்காதல் கொண்டு பல நாட்டு வரலாறுகளையும் அவை அழிந்த விதத்தையும் ஆராய்ந்த இப்ன் கால்துன் என்ன மாற்றங்களைச் செய்தால் அந்த அரச வம்சம் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பதை ஒரு புத்தகமாக எழுதினார். அப்புத்தகத்தின் கருத்தாக்கம் அசாபியா என்றழைக்கப்பட்டது. அதோடு விடவில்லை. பொருளாதாரத்திலும் எது ஒரு நாட்டை வளமையாக தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்பதைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதினார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ரீகன் இந்தப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டுவந்த மாற்றங்கள் ரீகனாமிக்ஸ் எனப்பட்டது.
நாம் முதலில் அசாபியா என்றால் என்ன என்று பார்க்கலாம்.
அசாபியா என்கிற அரபிமொழிச் சொல்லுக்கு குழுமமனப்பாங்கு (Social Cohesion) எனலாம். குழுமம் என்றால் மதரீதியான (religion), இனரீதியான (race), மொழிரீதியான (language) ஒருங்கிணைந்த குழுக்கள் என்றில்லை, அதையும் தாண்டி தேசியரீதியான (nationalistic / patriotic) குழு எனவும் கூறலாம். புதிதாகத் தோன்றிய பேரரசுகளின் ஆரம்பக் காலங்களில் அவை மகத்தான வெற்றி பெற்றதற்கான காரணங்களை இப்ன் கால்துன் அடிப்படையாக சில காரணிகளுக்குள் உள்ளடக்குகிறார். அவையாவன – மொழி, கலாச்சாரம், இனக்குழு மனப்பான்மை. இந்த மூன்றில் ஒன்றிலாவது ஒரு சாரார் ஒத்த தன்மையுடன் இருந்தால் அந்தக் குழும மனப்பான்மைத் தன்மையை முன்வைத்து அக்குழு ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைந்து மகத்தான சாதனை சாதிக்க முடியும் என்கிறார். மிகச்சிரிய படைக்குழு, பெரும்படையை வீழ்த்தி சாம்ராஜ்யங்களை உருவாக்கிய வரலாறுகளை நாம் தொடர்ந்து உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் படிக்க முடிகிறது.
மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா வரை ஏறக்குறைய 600 ஆண்டுகள் ஆண்டு வந்த உதுமான் பேரரசு, ஆப்கானிஸ்தான் முதல் தெக்காணம் வரை ஏறக்குறைய 700 ஆண்டுகள் ஆண்டுவந்த முகலாயப் பேரரசு, ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மாறி மாறி தொடர்ந்து ஆண்டு வந்த சீனச் சாம்ராஜ்யங்களான டாங் சாம்ராஜ்யம், யுவான் சாம்ராஜ்யம், மிங் சாம்ராஜ்யம், ஜிங் சாம்ராஜ்யம் போன்ற அரசுகள் அசாபியாவை பின்பற்றி வந்தவை. அசாபியாக் கொள்கைகள் அக்காலங்களில் அந்தந்த அரசுகளில் வேறுவேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவை யாவும் அசாபியா என்னும் குழுமமனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டதே என வரலாற்றாசிரியர்கள் சான்றளிக்கின்றனர்.
உலக வரலாற்றில் அசாபியாவைத் தொடர்ந்து பின்பற்றி வராமல் ஓரிரு தலைமுறைகளுக்குள் எழுந்து, வீழ்ந்த அரசுகள் எண்ணி மாளமுடியாதவை.
ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குறிக்கோள் – இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஒரு குழு முன்வைத்து தாம் எல்லோரையும் அதன் காரணமான லட்சியத்தை முன்னோக்கிப் போராடும்போது ஒருவொருக் கொருவர் சகோதரத்துவத்துடன் அந்தப் போராட்டக் காலங்களில் எந்த விதமான தியாகங்களையும் ஏற்று, தம்முயிரையும் தந்து உதவிக் கொள்கிறார்கள். இதனால் ஐந்து விரல்களையும் இறுக்கி குத்து விடும்போது ஏற்படும் பலம் அந்தச் சிறு குழுவுக்குக் கிடைப்பதால், பெரும் படையையும் அவர்களால் எதிர்த்து வெல்ல முடிகிறது. பலவீனமாக இருக்கும் சாம்ராஜ்யங்கள் சரிகின்றன. அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன.
இதில் இப்ன் கால்தூன் ஆராய்ந்தது என்னவென்றால், இப்படிப் போராடி அமைத்த ஒரு சாம்ராஜ்யம் எப்படி மற்றொரு சிறுபடையிடம் வீழ்ந்து அழிகிறது. அதற்கான காரணி என்ன, அதை அரசாளுபவர்கள் எப்படி முன்னறிந்து அதைத் தடுப்பது என்பதைப் பற்றித்தான். அதைப் பற்றி விவரிக்கும் அசாபியா என்கிற குழுமமனப்பான்மையைப் பற்றி ஒரு புத்தகமாக எழுதினார். அவர் காலத்தில் அது பல்கலைக் கழகங்களில் புத்தகமாக பாதுகாத்து வைக்கப்பட்டதோடு சரி. அதற்குமேல் அதை யாரும் சீண்டவில்லை. ஆனால் மாணாக்கர்கள் தொடர்ந்து படித்து வந்தனர். தன்னை கவுரவித்த அரசுகளுக்கு அதைப்பற்றி ஆலோசனைகளையும் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் அவர் உயிருடன் இருந்த காலங்களில் அந்தக் கருத்தாண்மை அரசர்களுக்கிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்குப் பிறகு பின்வந்த உதுமான் பேரரசு (Ottoman Empire), இப்ன் கால்தூனின் புத்தகத்தை அரிச்சுவடியாகவே பின்பற்றியது. அதனால் அந்த அரசு அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
சரி, இதில் அசாபியா எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கோ வீழ்ச்சிக்கோ காரணமாகிறது?
வென்ற அரசுகள் தத்தம் குழுக்களுக்கு உரிய பரிசுகளை அளிப்பது மட்டுமில்லாமல், அனைவரும் முன்னின்று வெற்றி கண்ட வீரனை அரசனாக்கி அவன் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். தனிப்பட்ட சொத்துக்கள், செல்வாக்குகள் வளர வளர குழும மனப்பான்மை அவர்களிடையில் மங்குகிறது. தன்னையும் தம் சொந்தக் குழுக்களையும் முன்வைத்து மட்டுமே முன்னோக்கி அவர்கள் செயல்பாடுகள் இருக்கின்றன. இதில் அரசனும் விதிவிலக்கல்ல. இதனால் வெளிவட்டத்தில் சமூகத்தின் விளிம்பில் உள்ள மக்கள் அசாபியாவின் பலனை அடையாமல் போகும்போது, தூண்டி, எழும் வெறுப்பின் உச்சத்தில் புதுக்குழுக்கள் உருவாகின்றன. வெகு காலங்களுக்குப் பிறகு மற்றுமொரு போர் வரும்போது முதல் முறை இருந்த குழுமமனப்பான்மை அப்போது அரச அமைச்சுக்களிடையேயும் மக்களிடையேயும் ஒருமித்து இருப்பதில்லை. இதனால் போராட பெரும்படை இருந்தும் போர் செய்ய வேண்டிய உத்வேகம் இல்லாமல் போவதால், அந்தப் படைகள் ஆக்ரோசமாக, அதே சமயம் உக்கிரமமாகப் போரிடும் மிகச் சிறிய படையிடம் தோற்கிறார்கள். அடுத்த அரசு ஆட்கொள்ளுகிறது. இந்த உதாரணத்தை பல்வேறு நாடுகளின் சமகால அரசியலிலும் நாம் காணமுடியும்.
குழுமமனப்பான்மையை மக்களிடையே தலைமை முதல் அடி வரை தொடர்ந்து பேணி, அந்த நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்வது மன்னனின் தலையாயக் கடமையாகிறது. அந்தக் கடமையில் தூங்கிய அரசன் புகழிழந்து புகலிடம் தேட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஆகவே தான் அசாபியா எனப்படும் குழுமமனப்பான்மை நாட்டு மக்களிடையே தொடர்ந்து பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டை உருவாக்கிய பிதாமகர்களில் ஒருவரான ராஜரத்னம் அசாபியாவின் முக்கியத்துவத்தையும் அது தொடர்ந்து பேணப்பட்டு, அந்த சுரம் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், தம் சக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார், அந்த முதல் தலைமுறைத் தலைவர்களிடம் இயல்பாகவே இருந்த அசாபியாவை அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கு கடத்துவதும், அவர்கள் அதைச் செயல்படுத்துவதை ஊர்ந்து கவனித்து அறிவுரை சொல்வதுமாக ஆட்சி இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கு மூன்று தலைமுறைகள் என்கிற மைல்கல்லைத் தாண்டி வந்து நான்காம் தலைமுறைத் தலைவர்களும் மறக்காமல் அசாபியாவைப் (Social Cohesion) பற்றிப் பேசுவது பிரமிக்கத்தக்கது.
இன்றைக்கு நாமனைவரும் அறிந்த தேசிய உறுதிமொழி சிங்கப்பூரர்களின் அசாபியாவை வழியுறுத்துகிறது. அது….
சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு, நம் நாடு மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும் வண்ணம் சமத்துவத்தையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு
உறுதி மேற்கொள்வோமாக.
இக் கட்டுரை தி சிராங்கூன் டைம்ஸ், 2021 பிப்ரவரி மாத இதழில் வெளியிடப்பட்டது.
[/vc_column_text][vc_column_text]