[vc_row content_placement=”top”][vc_column][vc_column_text]
ஆபத்தான அந்நியர் தலையீடு
ஜமால் சேக்
டிசம்பர் 2010ல் துனிசியாவில் ஒரு தெருவோர வியாபாரி, தன் வண்டியையும் வண்டியில் இருந்த பொருள்களையும் மாமூல் கேட்டு பிடுங்கிய அதிகாரிகளை எதிர்த்து தீக்குளிக்க, அந்தத் தீ சமூக ஊடகங்களால் விசிறப்பட்டு, தொடர்வினையாக 23வருடம் அரசாண்டு வந்த பென் அலி, ஆட்சியைத் துறந்து தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைய வேண்டி வந்தது. இப்படித்தான் அரபு வசந்தம் என்கிற மக்கள் எழுச்சி ஆப்ரிக்க மற்றும் அரேபிய முஸ்லிம் நாடுகளில் ஆரம்பித்தது. பின்னர் தொடர்ந்து 2011 முதல் பல நாடுகளில் அந்த அரபு வசந்தம் ‘மலர’ ஆரம்பித்தது. அல்ஜீரியா, ஜோர்டான், ஓமான், சவுதி அரேபியா, எகிப்து, சிரியா, ஏமன், சூடான், லிபியா, மொரோக்கோ என பல நாடுகளும் பரவி வந்த வசந்தத்தால் பதட்டமாகக் காணப்பட்டன. பல நாடுகளில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது முதல், அரசுகள் மாறுவது வரை நடந்தேறியது. துனிசியாவைத்தவிர பிற நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தங்களுக்குப் பின்னணியில் மக்களின் எழுச்சி இயற்கையானதாக இல்லை. அவற்றில் அன்னிய நாடுகளின் கைவேலை இருந்தது என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
மக்களுக்கென பிரச்னைகள் எல்லாக்காலங்களிலும் எல்லா நாட்டிலுமே இருந்து வருகின்றன. அவைகள் எளிதில் தீர்ந்து விடுவதில்லை. சமூக ஊடகங்களில் அவை வெளிப்பட்டு காரசாரமாக விவாதிக்கப்படவும் தவறுவதில்லை. பொறுப்பான அரசுகளினால் அத்தகைய விவாதங்கள் கவனமாகக் கண்ணுறப்பட்டு தீர்வுகளை எட்டியிருக்கின்றன. எல்லா நாடுகளும் அப்படி பொறுப்பாக இருப்பதில்லை.
ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் அங்குள்ள ஆட்சி முறை சீனாவின் கம்யூனிசத்திலிருந்து வேறுபட்டது. இதன் காரணமாக ஹாங்காங் மக்கள் அரசின் கொள்கைகள் மீதான எதிர்ப்பை சன நாயக முறையில் காட்டுவதுண்டு. அப்படித்தான் 2014ல் குடைப் போராட்டம் ஒன்றை பிரமாண்டமாக நடத்திக் காட்டினர் ஹாங்காங் வாசிகள். 2018ல் ஹாங்காங்கைச் சேர்ந்த காதல் ஜோடி தாய்வானுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் கல்யாணப் பேச்சை எடுத்த கர்ப்பமுற்றிருந்த காதலி அவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், காதலனால் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட காதலனை தாய்வான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைக்க கைதிகள் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் ஒரே நாட்டைச் சேர்ந்த இந்த இரு பிரதேசங்களுக்கும் இடையே இல்லாததால், அந்தக் காதலனை வழக்கு விசாரணை செய்து குற்றம் சாட்ட முடியாமல் தாய்வான் நீதிமன்றம் விடுவிக்க நேர்ந்தது. 2019ல் சீன அரசு அதற்கென ஒரு சட்டத்தை இயற்ற ஹாங்காங் அரசினை வலியுறுத்தியது. வழக்கு விசாரணை சீனாவிலும் நடைபெறும் என்கிற சட்ட உட்பிரிவை எதிர்த்துச் சிலர் போராட ஆரம்பித்தனர். அது சில வெளினாட்டு உளவு அமைப்புகளால் தூபம் போடப்பட்டு பணம் மற்றும் பொருள் உதவி அளித்து ஏறக்குறைய ஆறேழு மாதங்களுக்கு வெகு மோசமாக நடந்த அந்த “எழுச்சி”யில் பல அரசுகள் தாம் பிண்ணனியில் இருப்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டன. கடைசியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அமுல் படுத்தப்பட்ட பின்னர்தான் ஹாங்காங் நகரம் அமைதி நிலைக்குத் திரும்பியது.
மக்களுக்கென பிரச்னைகள் எல்லாக்காலங்களிலும் எல்லா நாட்டிலுமே இருந்து வருகின்றன. அவைகள் எளிதில் தீர்ந்து விடுவதில்லை. சமூக ஊடகங்களில் அவை வெளிப்பட்டு காரசாரமாக விவாதிக்கப்படவும் தவறுவதில்லை. பொறுப்பான அரசுகளினால் அத்தகைய விவாதங்கள் கவனமாகக் கண்ணுறப்பட்டு தீர்வுகளை எட்டியிருக்கின்றன. எல்லா நாடுகளும் அப்படி பொறுப்பாக இருப்பதில்லை.
மேலை நாடுகளுக்கும் கீழ்த்திசை நாடுகளுக்குமான தேசாந்திரத் தொடர்புகள் சமீப காலங்களில் தேய்வுறத் தொடங்கியுள்ளன. இதனால் கிழக்காசியாவில் மேலை நாடுகளின் உன்னிப்பான கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாகச் சீனாவின் மேல் திரும்பியுள்ளது. சீனாவின் அபார வளர்ச்சியும், நவீன இராணுவ பலமும் பல வளர்ந்த நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லோரும் நல்லவரே என்று எந்த நாட்டுடனும் பகைமை தவிர்த்து நல்லுறவை மட்டுமே பேணி வரும் சிங்கப்பூர் அரசிற்கு, வல்லரசுக்களுக்கு இடையேயான இந்த வன்முரண், தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாடான சிங்கப்பூரைப் பொறுத்தவரை, உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, நடைமுறைப் படுத்தப்படுகின்ற சட்டங்கள், குறைவான குற்றங்கள், பாதுகாப்பு, அமைதி மற்றும் ஆர்ப்பரிக்கும் பொருளாதாரம் என பல சிறப்பம்சங்கள் முதலீட்டார்களையும் அறிவுசார் மனித வளத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. ஆனால், பல நாடுகள் இந்த அமைதியைக் கெடுத்து சிங்கப்பூரை நாசம் செய்ய முற்படுகின்றன. அவற்றை வெளிப்படையாக பெயர் குறிப்பிடுவது உகந்ததாக இருக்காது என்பதால் நாம் பொதுவாகவே குறிப்பிடுவோம்.
தனி நாடு எனத் தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்ட நாள் கொண்டு சிங்கப்பூருக்கு எப்போதும் பிற நாடுகளால் ஆபத்து இருந்து வந்திருக்கிறது. வெளினாடுகளின் தூண்டுதல்களைத் தடுக்கும் பொருட்டு சிங்கப்பூர் கடுமையான சட்டங்களை இயற்றி வந்திருக்கிறது. காலங்கள் மாறுகின்றன, தொழில் நுட்பங்கள் மிக்க காலகட்டத்தில் சட்ட வரைவுகளிலும் திருத்த வரைவுகள் தேவைப்படுகின்றன. அப்படி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சட்டம் தான் FICA எனப்படும் வெளிநாட்டு தலையீடு (தடுப்பு நடவடிக்கைகள்) என்று இயற்றப்பட்ட சட்டம்.
ஏற்கனவே பல கடுமையான சட்டங்கள் இருக்கையில் இப்படி இன்னுமொரு கடும் சட்டம் இப்போது தேவைதானா?
பாதகமிக்க அன்னிய நாட்டுத் தலையீடு, சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமிக்க இக்காலச்சூழலில் பல கோணங்களில் வரக்கூடும். அதில் முதலிடத்தில் வருவது சமூக ஊடகங்களின் வழி பரப்பப்படும் உண்மை போன்ற பொய்ச் செய்திகள். விரைவில் பரவும் அந்தப் பொய்ச் செய்தியை, யாரும் அதன் உண்மைத்தன்மையைப் பற்றி பெரும்பாலும் சந்தேகப்படாமல் நம்புகின்றனர். அடுத்து வருவது, ரகசியச் செயலிச் செய்திகள் வழி குழுக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும், பொருளாதார உதவிகளையும், செயல் உத்தரவுகளையும் அரசுகளின் கண்காணிப்புக்குள் வராமல் செயல்படுத்துவது.
கடும் சட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தில் போதுமான அரண்கள் ஏற்கனவே உள்ளன என்கிற புரிதலுடன், தேவையற்ற அச்சத்தை உதறுவதே நலம்.
POFMA சட்டம் சமூக, மின் மற்றும் அச்சு ஊடகங்களைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் அரசு ஏற்கனவே எடுத்திருந்தாலும், களத்தில் செயல்பாடுகளைத் தடுக்க சரியான சட்ட முன்வரைவு இல்லாமல் இருந்தது. அரசியல் கொடைகள் சட்டம் (Political Donations Act) என்று ஒன்று இருந்தாலும் அதற்குட்படாத நவீன உத்திகளைப் பயன்படுத்தி உள் நாட்டுக் குழப்பம் ஏற்படுத்தும் சாத்தியமும் அச்சமும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. எனவே இந்த FICA சட்டம் அந்தக் குறைகளைக் களைய முயலுகிறது.
இந்தச் சட்டம் மிகக் கடுமையான, நீதிமன்றக் கட்டுக்குள் வராத, சட்ட வரைவுகளை முன்வைப்பதால் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடுமோ என்கிற பொதுவான அச்சத்தை எதிர்க்கட்சிகளிடத்திலிருந்தும், கல்வியாளர்களிடமிருந்தும் காண முடிகிறது. பல வெளி நாட்டு அமைப்புகள் இந்தச் சட்டத்தைக் காரசாரமாக விமர்சித்து தத்தம் நாட்டுப் பத்திரிகைகளில் எழுதி தமது எதிர்ப்பைக் காட்டுவதில் புரிந்து கொள்ள ஏராளம் உள்ளது.
வெளிநாடுகள் மட்டுமின்றி உள்ளூர் அமைப்புகளும் கூட தமக்குச் சாதகமாக இதே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பல நாடுகளில் குழப்பம் விளைவிப்பதும் மிக அதிக அளவில் நடக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் அன்னிய நாடுகளின் தலையீடு முகனூல் வழியாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆசிய நாடுகள் சிலவற்றில் உள்ளூர் அமைப்புகளே அத்தகையத் தலையீடுகளைச் செய்து அரசியல் கட்சிகளைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கின்றன. இதற்கென பெரும்பொருளை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு சமூக ஊடக உத்திகளைப் பயன்படுத்தி, மக்களின் மனோ நிலையை மாற்றி தேர்தலில் அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க தொழில் முறைத் தகவல் தொழில் நுட்பக் குழுக்கள் உள்ளன.
அன்னியத்தலையீட்டு அச்சுறுத்தல் என்பது கண்முன்னே உள்ள வெகு நிச்சயமான அபாயம். அதிலிருந்து வருமுன் காக்க, அதே சமயம் வெளிநாட்டு வர்த்தக அரசியல் நட்புகள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமானால், நீதிமன்றத்தை உட்படுத்தாத ரகசிய விசாரணைமன்றம் வழியாகத்தான் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். உள்நாட்டு தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை யாரும் பொதுவில் வைக்கக் கோருவதில்லை. அதுபோலத்தான் சிங்கப்பூரின் சமூக மற்றும் தேசியப் பாதுகாப்பைக் காப்பாற்ற உதவும் இதுவும். அன்னியத்தலையீட்டு விவகாரங்களை பொது நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தினால் அரசு காக்கும் ரகசியங்கள் பொது மன்றத்தில் விவாதத்திற்கு உட்படும். இது உகந்த நடைமுறை அல்ல.
இந்த சட்டத்தின் கடுமையான உட்பிரிவுகளுக்காகத்தான் வெளிப்படையான விவாதம் தேவை என்பது இதை எதிர்ப்போரின் விவாதம். கத்தி ஒவ்வொரு சமையலறையிலும் உள்ளது. கத்தி கொண்டு காய்கறியையும் வெட்டலாம், ஆளையும் கொல்லலாம். அதற்காகக் கத்தியை எவரும் எப்போதும் கொலைக்கருவியாகவே பார்ப்பதில்லை. அரசாள்வோரின் அதிகாரத்தில் மிகக் கடுமையான சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. நவீன உத்திகளாலும் தொழில் நுட்பங்களாலும் அதில் ஏற்பட்ட இடைவெளிகளைச் சரி செய்யவே புதிதாக ஒரு சட்டம் தேவைப்பட்டிருக்கிறது.
இந்த சட்ட விவாதத்தில் சட்ட அமைச்சர் க.சண்முகம் அவர்கள் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன மற்றும் சமய நல்லிணக்கம் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளால் அதைப் பிளவுற வைக்கும் உத்திகளை பல நாடுகளில் முயற்சித்து வெற்றிபெற்று அவற்றை சிங்கப்பூரிலும் முயற்சிக்க சில அன்னிய நாடுகள் எடுக்கின்ற முயற்சிகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன என்றார். எதிர்க்கட்சிகள் தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது அரசின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இதே வடிவிலான சட்ட வரைவுகளுடன் இதைவிடக் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கி ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்குள் புதிதாகச் சட்டம் இயற்றி உள்ளன. அடுத்த இரு பத்தாண்டுகளில் ஆசியப்பிராந்தியத்தில் அச்சுறுத்தல் மிகுந்திருப்பதாக ஊடகங்கள் பயமுறுத்தும் சூழலில், பலம் வாய்ந்த நாடுகளின் இடையில் வலுத்திருக்கும் அபாயகரமான ஊடலில் நடுவில் சிக்கி இருக்கும் சிங்கப்பூருக்கு தன் அமைதியைக் காக்கவும், வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் இப்படி ஒரு சட்டம் இப்போதையத் தேவை.
கடும் சட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தில் போதுமான அரண்கள் ஏற்கனவே உள்ளன என்கிற புரிதலுடன், தேவையற்ற அச்சத்தை உதறுவதே நலம்.
This was published in THE SERANGOON TIMES(R) December 2021 Issue.
[/vc_column_text][/vc_column][/vc_row]